தமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள்! (Tamilaga Gramangalil Pen Sisu Kolaigal!)
Tamilaga Gramangalil Pen Sisu Kolaigal! - Tamil eBook

Tamilaga Gramangalil Pen Sisu Kolaigal!

125.00 / $ 3.99

Author: Dr. Shyama Swaminathan

Language: All

Genre: Social

Type: Novel

ISBN: N/A

Print Length: 235 Pages

Write a review

Bad Good

About Book

'ஒரு பெண் தனியாக, கிராமம் கிராமமாகச் சென்று, இத்தகைய உணர்ச்சிபூர்வமான ஒரு

சமூகக் கொடுமை பற்றிய தகவல்களைச் சேகரிக்க முடியுமா?' என்று நான் சிறு தயக்கம் காட்டியபோது, “உங்களால் முடியும்" என்றல்ல. "உங்களால்தான் முடியும்" என்று கூறி, என்னுள் நம்பிக்கையையும், மனோ தைரியத்தையும் வளர்த்தவரும் இந்த கல்கண்டு மனிதர்தான். என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை அந்த நற்பண்பாளருக்குச் சமர்பிக்கின்றேன்! பெண் சிசுக்கொலைகள், இந்தியாவிற்கு புதிதல்ல, ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே இருந்து வந்தவை என்பதை நூலகக் கோப்புக்களிலிருந்து அறிந்து கொண்ட நான், தமிழகத்தில் இக்கொடுமையின் வேர்கள் தேடி, பயணப்பட்டது, பிரசித்தி பெற்ற உசிலம்பட்டிக்குத்தான் மதுரையிலிருந்து பேருந்தில் பயணம். என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்தேன். ஐந்து நிமிடங்கள் சுற்றி வளைத்துவிட்டு, பிரச்சினைக்கு வந்தேன். "பொட்டப் புள்ளைங்கதாங்க, இந்தப் பக்கம் அதிகமா பொறக்குது. ஒண்ணு ரெண்டு வச்சிக்குவாங்க... மூணாவது, நாலாவதுன்னா கொன்னுருவாங்க. எனக்கும் மொத மூணு புள்ள பொட்டதான். நாலாவது ஆம்பிளைதான் பொறக்கும்னு பூசாரி சொன்னாரு. பொட்டதான் பொறந்திச்சு. கொன்னுப்புட்டேன். எம் புருஷன் போலீசுல புடிச்சு கொடுத்துடுவேன்னு கொஞ்ச நா குதிச்சாரு... அப்புறம் எல்லாம் சரியா போச்சு...” என்று சொல்லிவிட்டு, வெற்றிலை மெல்லத் தொடங்கினாள் அந்தப் பெண். இவ்வளவு சுலபமாக அவள் சொன்ன விஷயம் சுமையாக என்னுள் இறங்கியது. பெண்களுடன் பேசப்பேச இந்தச் சுமையின் பாரம் என்னை அழுத்த, உசிலம்பட்டி அரசினர் மருத்துவமனையில் நான் காண நேர்ந்த ஒரு பெண்ணின் பிரசவம் (பெண் குழந்தைதான்) என்னை வெடித்துச் சிதறி அழவைத்தது. இந்த ஆரம்ப அனுபவம் போகப் போக என்னைக் கெட்டிப்படுத்தியதும் உண்மை!

தர்மபுரி மாவட்டத்தில், பென்னகரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பால்மணம் மாறாத அந்தக் குழந்தைகள், கள்ளம்கபடு தெரியாமல் "தங்கச்சி பாப்பாவ எருக்கம்பாலு போட்டுச் சாவடிச்சிட்டாங்கா அக்கா” என்று சொன்னபோது அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில், 'சாவு' என்பது எவ்வளவு சகஜமாக வீற்றிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. "எங்களுக்கு யாராவது நேரடியாக வந்து புகார் கொடுத்தால் நாங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்” என்றார்கள் காவல்துறையினர், சிறுவர்களின் சொல்லுக்கு செவிசாய்க்குமோ காவல்துறை?

மதுரை, தர்மபுரி மக்களைப் போலல்லாமல், சேலம் மாவட்டத்தினர் இக்கொடுமையை நேரடியாக ஒப்புக்கொள்ளாமல், "இந்த ஊர்ல யாரும் செய்றதில்லீங்க... அடுத்த ஊர்ல நடக்குதுங்க” என்பார்கள். அடுத்த ஊர்க்காரர்களும் இதையேதான் சொல்வார்கள். மொத்தத்தில் எல்லா ஊர்களிலுமே மானாவாரியாக இது நடைபெறுவதை சமூகப் பிரக்ஞை கொண்ட ஒரு முதியவர் ஒப்புக்கொண்டார். ஏழ்மையோ, வரதட்சிணையோ காரணங்களில்லாமல், 'பெண்' என்ற அடிப்படை வெறுப்பு மட்டுமே காரணமாகக் கொண்டு, கற்றவர்களும் இக்கொடுமையில் ஈடுபடும் அவலத்தை இங்கே கேட்டறிய முடிந்தது. 'ஸ்கேன்' என்கிற மருத்துசாதனை, பெண்குலத்தை பூண்டோடு ஒழிப்பதற்கு மல்லுக்கட்டிக்கொண்டு செயல்படுவதையும் இங்கே உணர முடிந்தது. பணத்திற்காக, 8, 9, 10 மாதங்களில்கூட பெண்கருவை அழிக்கத் துணிகின்ற மருத்துவர்களும் இங்கே தீவிரமாகச் செயல்படுகிறார்கள் என்பதை பொதுமக்களிடமிருந்து கேட்டறிய முடிந்தது!

பார்புகழும், தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டங்கள் என்னவாயின? பாமர மக்கள் மனதளவில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும், செயலளவில் பயன்பெறும் வகையிலும் தீட்டப்படவில்லை என்பதை பொதுமக்களின் ஒரு மனதான கருத்துகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. இந்நிலையில் அரசு அறிவித்துள்ளபடி 2000 ஆவது ஆண்டுக்குள் இக் கொடுமையை அறவே ஒழித்துவிட முடியுமா? என்பது கேள்விக்குறியாகத்தான் தோன்றுகிறது. பெரும்பாலும் இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் போது, தயார் செய்யப்பட்ட வினாத்தாள்களின் மூலம் கண்டுபிடிப்புகளைத் தொகுப்பார்கள். ஆனால் இந்த ஆராய்ச்சி, பத்திரிகையாளர்களுக்கே உரிய நேரடி சந்திப்புக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. எளிய தமிழில், எளிய நடையில், கிராமங்களில் உள்ள இன்றைய மாணவிகளும், நாளைய மனைவிகளும் படித்து, இக்கொடுமையில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருக்கும் சக்தியைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்பதால் ஆராய்ச்சிக்கு மட்டுமே தேவையான புள்ளி விவரங்கள் அடங்கிய ஓர் அத்தியாயம் நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைத் தலைகுனிய வைக்கும் இக் கொடுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மட்டுமே என் நோக்கமல்ல. இதிலிருந்து முழுமையான விடுதலை பெறுவதற்கான சில செயல்பாடுகளிலும் ஈடுபடவிருக்கிறேன். வாருங்கள்! சேர்ந்து செயல்படுவோம்!

About Author

சாவியில் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பத்திரிகைகளில்

உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். K.K. Birla Foundation Fellowship for Journalism கிடைக்கப் பெற்ற முதல் தமிழ் பத்திரிகையாளர். இதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சித் தலைப்பு ‘தமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள்-தீர்வுகள்’. இதனைத் தொடர்ந்த இவரின் ஆராய்ச்சிப் புத்தகம் ( அதே தலைப்பில்) தமிழக அரசின் சிறந்த புத்தகப்பரிசினை பெற்றது. இந்தப் பரிசினை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். மெட்ராஸ்- கல்சுரல் அகடமி ‘Excellence in Journalism’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக இவர் எழுதியுள்ள கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், தொடர்கள், நாவல்கள், சமூக, ஆன்மீகப் புத்தகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இவருடைய மொழிமாற்ற (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) புத்தகங்கள் அனைத்தும் பரவலான ரசிகர்களை ஈர்த்துள்ளது.

பத்திரிகையாளர் பணியைத் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, ஜெயின் மகளிர் அகடமியின் இயக்குனராகவும், ஜெயின் அறக்கட்டளை ஒன்றின் CEO ஆகவும் தொடர்ந்த இவர், தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை மற்றும் பிற சமூக அவலங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளின் உயர்வுக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். எழுத்து இவரின் மூச்சு என்றால், பெண்குழந்தைகள் பாதுகாப்பு இவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்துவருகிறது.

MORE BOOKS FROM THE AUTHOR - Dr. Shyama Swaminathan

Thathu Arinthathum Ariyathathum

Author: Dr. Shyama Swaminathan

Genre: Social

100.00 / $ 2.99

Be first to Write Review

Saviyil Sila Naatkal

Author: Dr. Shyama Swaminathan

Genre: Social

88.00 / $ 2.99

Be first to Write Review

Sri Kanchi Mahanin Karunai Alaigal

Author: Dr. Shyama Swaminathan

Genre: Spiritual

150.00 / $ 3.99

Be first to Write Review

Kaadhal Bommaigal

Author: Dr. Shyama Swaminathan

Genre: Family

150.00 / $ 3.99

Be first to Write Review

Iniyavale Indhumathi

Author: Dr. Shyama Swaminathan

Genre: Family

125.00 / $ 3.99

Be first to Write Review

Sri Kanchi Mahanin Padhugai Mahimaigal

Author: Dr. Shyama Swaminathan

Genre: Spiritual

175.00 / $ 3.99

Be first to Write Review
Back To Top