Home / Audio Books / Jananam - Audio Book
Jananam - Audio Book eBook Online

Jananam - Audio Book (ஜனனம் - ஒலிப் புத்தகம்)

About Jananam - Audio Book :

என்னுடைய நாவல்களுக்கோ, சிறுகதைத் தொகுப்புகளுக்கோ முன்னுரை எழுதுவது எனக்குப் பழக்கமில்லாதது. எழுத விருப்பமில்லை என்பதைவிட எழுத எனக்குத் தெரியாது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். கதை எழுதும் போது தயக்கமில்லாமல், சில சமயம் கட்டுக்கடங்காமல் வெளிப்படும் வார்த்தைகள் முன்னுரை எழுத உட்காரும்போது எங்கோ பின்னிக் கொண்டு வெளிவர மறுக்கும்.

கதை எழுதுபவர் தன்னிலை விளக்கம் கொடுக்கத் தேவையில்லை என்று நினைப்பவள் நான். உங்கள் கதை மூலம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று யாராவது கேட்டால் எனக்கு, எனது எழுத்துக்கு நேர்ந்த அவமானமாக, துர்பாக்கியமாக நான் நினைப்பேன். எழுத்தே பேச வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு ஜீவனில்லை என்றுதான் கொள்ள வேண்டும். கதை எழுதி முடித்த பிறகு அது எழுத்தாளரின் மனத்திலிருந்து வெளியேறி வாசிப்பவனிடம் சென்று விடுகிறது. தான் எழுதியவற்றிலிருந்தே எழுதுபவர் விலகி நிற்கிறார். பாரத்தை இறக்கிய பிறகு அதை நீ சுமந்த கதையைச் சொல்லு, இறக்கிய கதையைச் சொல்லு என்றால் அது என்னைப் பொறுத்தவரை சிரமமான விஷயம். எழுதுவது ஏதோ ஒரு வகையான சுமையை இறக்கத்தான். படிப்பவர் மனத்தில் அந்தச் சுமை சிறிதளவாவது ஏற வேண்டும். அதுதான் எழுத்தின் வெற்றிக்கு அடையாளம். அந்தச் சுமையின் ஜனன ரகசியத்தைச் சொல்வது, பிறவி ரகசியத்தைச் சொல்வது போல. அதனால்தான் வார்த்தைகள் வடிவம் பெறாமல் தயங்குகின்றன கூச்சப்படுகின்றன.

இந்தத் தொகுப்பில் இருக்கும் 'ஜனனம்', நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை. என் கணவர் மூத்த பொறியியலாளராக மத்திய பொதுப்பணித் துறையின் ஊழியராகப் பணியாற்றிய போது அவருடன் அந்த மாநிலங்களில் வசித்ததில், அசாதாரண அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. அவை கதைக் களங்களாகப் பரிணமித்தன. தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட இடங்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் புதிய தரிசனங்களையும் ஏற்படுத்தின என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

'ஜனனம்' என்ற நாவலுக்கு, நாங்கள் அஸ்ஸாமில் இருந்தபோது நான் கேள்விப்பட்ட ஒரு விபத்தின் விவரம் காரணமாயிற்று. ஒரு பஸ் விபத்தில் ஒரே ஒரு பெண் பிழைத்தார் என்றும், அவருக்கு விபத்தின் அதிர்ச்சியால் தன்னுடைய பழைய வாழ்வு முற்றிலும் மறந்து போனதாகவும் கேள்விப்பட்டவுடன் அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்வைப் பற்றி எனக்குக் கவலையேற்பட்டது. சோகக் கதையாக இல்லாமல் அதை ஒரு காதல் கதையாக எழுதவேண்டும் என்று ஏன் நினைத்தேன் என்று இன்று திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை. நான் பார்த்த ஒரு இந்தி நாடகம் ஆனால் கதையை நானே மிகவும் ரசித்து எழுதியது அதற்குக் காரணமாக இருக்கலாம். நினைவிருக்கிறது. கதை 15 ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடனில் வெளியானது. பிறகு மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மாத்ரு பூமியில் பிரசுரிக்கப்பட்டது. அதைப் படித்து மிகவும் ரசித்து 'இந்நிலே' என்ற தலைப்புடன் பிரபல (மறைந்த) பட இயக்குனர் பத்மராஜன் மலையாளத்தில் சினிமா எடுத்தார்.

About Vaasanthi :

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Chapter Details:
Chapter Name Chapter Duration
அத்தியாயம் - 1 30:50
அத்தியாயம் - 2 30:37
அத்தியாயம் - 3 29:14
அத்தியாயம் - 4 32:21
அத்தியாயம் - 5 27:29
Rent For 30 Days
Write A Review

Rating And Reviews

  Ambi

Very good