தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக சன் டி.வி. மூலமாக கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக அறிமுகமான ரமேஷ் பிரபாவின் இன்னொரு முகம் கல்வி ஆலோசகர். கல்வி ஆலோசனை சொல்லத் தேவையான அறிவுத் தகுதி, அனுபவத் தகுதி இரண்டுமே வாய்க்கப் பெற்றவர் ரமேஷ் பிரபா.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ், A.M. Jain கல்லூரியில் B.Sc., (Chemistry) பட்டத்தையும், அண்ணா பல்கலைகழகத்தின் கீழ், மறைந்த நமது குடியரசுத் தலைவர் திரு. A.P.J. அப்துல் கலாம் படித்த புகழ் பெற்ற M.I.T பொறியியல் கல்லூரியில் B.Tech. (Production Technology) படிப்பையும், பிறகு நிர்வாகவியல் படிப்பிற்கு இந்தியாவிலேயே புகழ் பெற்ற I.I.M கல்கத்தாவில் M.B.A. (Marketing & Advertising) படிப்பையும் முடித்திருக்கிறார் என்பது ரமேஷ் பிரபாவின் கல்வித் தகுதி.
அனுபவத் தகுதியை எடுத்துக் கொண்டால், தமிழ்ப் பத்திரிகை உலகில் கல்வி வழிகாட்டல் மற்றும் பிசினஸ் சார்ந்த விசயங்களை எழுதுவதில் முன்னோடியாகத் திகழ்பவர் ரமேஷ் பிரபா. ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’, ‘ஜூனியர் விகடன்’, ‘ஜூனியர் போஸ்ட்’, ‘குமுதம் சிநேகிதி’, ‘குங்குமம்’, ‘நக்கீரன்’, ‘புதிய தலைமுறை’, ‘தினகரன்’, ‘தினமலர்’ போன்ற புகழ்பெற்ற இதழ்களில் ரமேஷ் பிரபா எழுதிய கல்வி வழிகாட்டல் கட்டுரைகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றவையாகும். இவர் கட்டுரைகள் தகவல்களை சொல்பவையாக மட்டுமல்லாமல் சிந்தனையைத் தூண்டுபவையாகவும் அமைந்திருக்கும்.
10, +1, +2 மாணவர்களுக்காக, சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு இன்றுவரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கும் 'தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி மூலமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறு நகரங்களுக்கும் கூட நேரில் சென்று லட்சக்கணக்கான மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்தித்து ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கும் அனுபவத் தகுதி ரமேஷ் பிராபாவுக்கு உண்டு. தொடர்ந்து ‘தினதந்தி’, ‘தி இந்து’, ‘இந்து தமிழ் திசை’, போன்ற நாளிதழ்கள் நடத்திய கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளிலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். தவிர, தமிழகத்தில் உள்ள எண்ணற்ற பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நேரில் சென்று மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டல் சேவையை தொடர்ந்து செய்து வருகிறார் ரமேஷ் பிரபா. குறிப்பாக, கிராமப்புற மாணவர்களும், தமிழ் மீடியம் மாணவர்களும் முன்னேற வேண்டுமென்பதில் ரமேஷ் பிரபாவின் அக்கறை எப்போதுமே உண்டு.
ரமேஷ் பிரபாவின் இத்தகைய கல்வி அனுபவமும், ஆலோசனைகளும் இப்போது மின்னூல் வடிவிலும் கிடைக்கின்றன என்பது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்.