முனைவர் வே. குழந்தைசாமி (73) 1972 - ஆம் ஆண்டு முதல் கடந்த 50 ஆண்டுகளாக உயர்கல்வித் தளத்தில் கல்விப்பணி ஆற்றி வருகிறார். கிராமியப் பொருளாதாரம் மற்றும் கூட்டுறவியலில் தனது பட்ட மேற்படிப்பையும் (1971) வணிகவியல் புலத்தில் முனைவர் பட்டத்தையும் (1981) பெற்றுள்ள இவர் தனது புலம் சார்ந்த பல நூல்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டதோடு முனைவர் பட்ட மாணவர்களுக்கும் பிற ஆய்வு மாணவர்களுக்கும் நெறியாளராக இருந்துள்ளார்.
இவர் தனது பணிக்காலத்தில் துணைப்பேராசிரியர், பேராசிரியர், கல்லூரி முதல்வர், பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் கல்லூரித் தாளாளர் என, பல பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்மீது நாட்டம் கொண்டு பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றதன் பயனாகச் சில நூல்களை வெளியிட்டுள்ளார். அருஞ்சொற்குவை என்ற அரிய சொற்தொகுப்பு, ஆங்கிலத்தில் பேராசிரியை ரூபாகுணசீலனுடன் இணைந்து வெளியிட்ட தமிழ் அற இலக்கியங்களில் மேலாண்மைக் கருத்துகள் என்ற நூல், முதுமொழிக்காஞ்சி என்ற பழந்தமிழ் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு என்பன இவற்றுள் அடங்கும்.
முனைவர் குழந்தைசாமி தற்போது கோயமுத்தூர் மாநகரில் (தமிழ்நாடு, இந்தியா) அமைந்துள்ள ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் செயலராகப் பணியாற்றி வருகிறார்.