இனிய வணக்கம். நான் கிரேஸ் பிரதிபா. புஸ்தகா நிறுவனத்தின் மூலம் உங்களைச் சந்திப்பதில் உவகை அடைகிறேன். இராமநாதபுரத்தைப் பூர்விகமாகக் கொண்ட நான் வளர்ந்தது படித்தது எல்லாம் கொடைக்கானலிலும் மதுரையிலும். தற்பொழுது அட்லாண்டாவில் வசிக்கிறேன்.
பெங்களூருவில் மென்பொருள் பணியாளராகப் பணியாற்றிய நான் குழந்தைகளுக்காகப் பணிதுறந்து வீட்டில் இருக்கத் துவங்கியதும் 2008இல் இருந்து வலைத்தளத்தில் எழுதத்துவங்கினேன். ஆங்கிலவழிக் கல்வி கற்றிருந்தாலும் தமிழ் மேல் எப்பொழுதும் தீராக்காதல் உண்டு. முதலில் ஆங்கிலத்தளத்தில் இருமொழிகளிலும் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் 2012இல் தமிழில் தனியாக வலைத்தளம் திறந்து எழுதத்துவங்கினேன், தமிழ் இலக்கியத்தை அதிகமாகப் பகிரவேண்டும் என்பதே அதன் நோக்கம். அறிவியல், வரலாறு, இயற்கைச் சூழல், சமூகப் பிரச்சனைகள் என்று கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுகிறேன். என் எழுத்தினால் எங்கேனும் ஒரு நேர்மறை மாற்றம் ஏற்பட்டால் அதுவே மிகப்பெரிய வெற்றி என்று எண்ணுகிறேன். அப்படிப்பட்டக் கடிதங்கள் மின்னஞ்சலிலோ தளத்தின் கருத்துப்பெட்டியிலோ வரும்பொழுது பெருமகிழ்ச்சி கொள்வேன்.
என் முதல் கவிதைத் தொகுப்பான ‘துளிர் விடும் விதைகள்' 2014இல் மதுரையில் வெளியிடப்பட்டது. அதற்கு வளரி கவிதை இதழ் வழங்கும் 'கவிப்பேராசான் மீரா' விருது 2015இல் கிடைத்தது பேருவகையும் பெருமையும். என்னுடைய இரண்டாவது கவிதைத்தொகுப்பு ‘பாட்டன் காட்டைத் தேடி' ஜனவரி 2016இல் வந்திருக்கிறது. இணைய இதழ்களிலும் என் எழுத்துப் பணி விரிந்திருப்பது மகிழ்ச்சி. சங்க இலக்கியப் பாடல்களை எளிய தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து உலகெல்லாம் அறியத்தருவது என் ஆசை. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன்.
மின்னூல் மூலம் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி, புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றி. என் நூட்களைப் படித்து நீங்கள் சொல்லும் கருத்துகளையும் ஊக்கத்தையும் எதிர்பார்க்கிறேன். நன்றி!
தமிழ் மற்றும் வாசித்தல் அன்புடன்,
கிரேஸ் பிரதிபா