கௌசிக கோத்திரம், ஸ்ரீ வைஷண்வ சம்பிரதாயத்தில், ஆசாரியன் தூப்புல் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் வம்சாவெளியில், வடகலை வரிசையில், வந்த ஸ்ரீமான் ரகுநாதன்-செண்பகவல்லி தம்பதியரின், மகன் ஸ்ரீநரசிம்மன்-ருக்மணி தம்பதியரின் மகனான ஸ்ரீநிவாசசாரியார்-ரெங்கநாயகிக்கு எட்டவாது மகனாக பிறந்தவர் தான் எனது தந்தை சீனி. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்.
1961-ஆம் வருஷம் என் தாய் இந்திராவை திருமணம் செய்து கொண்டு, 1964-ஆம் ஆண்டு அக்டேபர் மாதம் 12-ஆம் தேதி அடியேன் காலை 4-30 மணிக்கு அவர்களுக்கு மகனாகப் பிறந்தேன்.
காலம் சென்ற எனது தாத்தா ஸ்ரீநிவாசசாரியார் 1930 களில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில், வடக்கு சித்திரை வீதியில், சொந்தமாக இருந்த வீட்டின் வாயிலில் தினமும் “தங்கரத” (Golden Chariot) வண்டி வந்து, குதிரைகள் பூட்டி, அவரை அரசு பணிக்கு அழைத்துச் செல்வார்கள் என என் தந்தையார் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். என் தாத்தா அதில அரசின் “சர்கின் இன்ஸ்பெக்டர்” பணியில் இருந்தமையால் இப்படிப்பட்ட வாய்ப்பினை பெற்றார்.
இவ்வாறு ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட என் தந்தை, “திருநாடு அலங்கரித்த வர்த்தமான ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமி அவர்களின் அரவணைப்பில் பல ஆண்டுகள் இருந்து, தமிழாசிரியராக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது இறப்பிற்கு பிறகு (15-05-2008) அவர் தொடங்கிய “ஜெயதாரிணி அறக்கட்டளை” தொடர்ந்து நடத்தி வருகிறேன். ஏற்கெனவே என் தாயாரின் இறப்பால் (03-06-2007) மனம் வாடிய என் தந்தை, தனது பெரிய மகளை என் பொறுப்பில் விட்டுவிட்டார்.
இப்போது என் மூத்த சகோதரி அரசு வழங்கும் ஓய்வு ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு என்னுடைய ஆதரவில் இருக்கிறாள். இப்படி என் சகோதரியையும் பேணிக் காத்துக் கொண்டு, என் மனைவி பத்மஜா, என் மகள் தாரிணிக்கும் குடும்பத் தலைவனாக இருந்து வருகிறேன்.
B.Sc. தாவரவியல் படித்த பின், The Hindu ஆங்கிலப் பத்திரிகையில் 27 ஆண்டுகள் பணி புரிந்து பின்னர் 01- 06-2015 ஆம் நாள் அன்று “விருப்ப பணி ஓய்வு” (VRS) பெற்றேன். 30 வருட காலமாக “கைரேகை” பற்றிய ஆராய்ச்சியில் என்னை அர்ப்பணித்து கொண்டு, பலருக்கு கைரேகைப் பார்த்து துல்லியமான, பலன்களைச் சொல்லி, அவர்களை நெறிபடுத்தும் வாய்பையும் பெற்றுள்ளேன்.
அருந்தமிழ், ஆன்மீகம், ஆலயம் என மூன்றுடன் இணைந்து, சமூகப் பணிகள் செய்து வருகிறேன். கவிதை, கட்டுரைகள், தொடர் நிகழ்ச்சிகள், வானொலி, தொலைக்காட்சி என அமைப்புகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். தற்போது “கைரேகை திலகம்” என்னும் விருதினைப் பெற்று என் மன வைரத்தை மேலும் பட்டைத்தீட்டி வருகிறேன்.