ராஜி ரகுநாதன் தமிழ், தெலுங்கு இரு மொழி இதழ்களிலும் எழுதி வருவதோடு இரு மொழிகளுக்கிடையே மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மங்கையர்மலர் சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றுள்ளார். ‘இது நம் சனாதன தர்மம்’ என்ற நூலை இவருடைய தமிழ் மொழிபெயர்ப்பில் ருஷிபீடம் பதிப்பகம் 2016ல் வெளியிட்டுள்ளது. 673 பக்கங்கள் கொண்ட இந்நூல் தெலுங்கில் பிரம்மஸ்ரீ டாக்டர் சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் எழுதிய ‘ஏஷ தர்ம: சனாதன:’ என்ற தெலுங்கு நூலின் தமிழாக்கம். திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விரிவுரை இவருடைய தெலுங்கு மொழிபெயர்ப்பில் 2௦13ல் வெளிவந்துள்ளது. இதுவும் ருஷிபீடம் வெளியீடு. மேடம் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு இவருடைய மொழிபெயர்ப்பில் 2018ல் குவிகம் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. மதுரமுரளி தெலுங்கு மாத இதழுக்காக கடந்த பத்த்தாண்டுகளுக்கு மேலாக ஸ்ரீமுரளீதர சுவாமிகளின் தமிழ் உரைகளை தெலுங்கில் மொழிபெயர்த்து அளித்து வருகிறார். 2018ல் மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது பெற்றுள்ளார். பால்டம்ளர் என்ற தற்கால தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் இருபத்தொரு சிறுகதைகள் இவருடைய மொழிபெயர்ப்பில் கனவு பதிப்பகம் மூலம் 2௦20ல் வெளிவந்துள்ளது. மேலும் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவரத் தயார் நிலையில் உள்ளன. தினசரி டாட் காம் என்ற இணையச் செய்திதளத்தில் அண்டை மாநிலச் செய்திகளை சுவையாக அளித்து வருவதோடு பல இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இதே தளத்தில் ருஷிவாக்கியம் என்ற தலைப்பில் 1௦8 நாட்கள் தொடர்ந்து பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் உபன்யாசங்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மேலும் தினம் ஒன்றாக 1௦8 சுபாஷித விளக்கங்களை தினசரிடாட்காம் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். ஆல் இந்தியா ரேடியோ ஹைதராபாதில் பல தலைப்புகளில் தெலுங்கில் உரையாற்றி வருகிறார்.