ஷெண்பா பாலச்சந்திரன். வடசென்னையில் பிறந்து வளர்ந்தவர். கணவர், இரண்டு மகன்கள் என்று அழகான சிறு குடும்பத்தின் தலைவி.
ஓவியர், எழுத்தாளர், பதிப்பாளர், மின்னூல் பொறுப்பாசிரியர், யூடியூபர் என்று பன்முகத் திறமையுடையவர். சிறு வயது முதலே, எழுதுவதில் தணியாத ஆசை கொண்டவர். பள்ளிகளில் கட்டுரை, ஓவியப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார்.
கைப்பந்து மற்றும் கூடைப்பந்தாட்ட வீரர். வரலாற்றில் இளநிலைப் பட்டம் பெற்றவர். திருமணத்திற்குப் பின்பு, கணவரின் ஊக்கத்தால் தனது கற்பனைகளுக்கு உயிரூட்டி, மீண்டும் தனது எழுத்தை வடிவமாக்கினார்.
2007ம் ஆண்டு முதல் இணையத்திலும், பல பத்திரிகைகளிலும் இவரது படைப்புகள், பேட்டிகள் வெளிவந்துள்ளன. கூட்டுக் குடும்பத்தின் அன்பும், நட்பின் மேன்மையும், இவரது வாழ்வியல் கதைகளின் முக்கியமான அங்கம். இதுவரை 58 நாவல்கள், 22 சிறுகதைகள், பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
‘சபை நாகரீகம்’ என்பதைப் போல, ‘எழுத்தில் நாகரீகத்தைக் கடைப்பிடிப்பவர்’ என்று வாசகிகளால் புகழப்படுபவர். சென்னைப் புத்தகக் கண்காட்சி-2019ன் அரங்கத்தில் இவரது முதல் நாவலான, ‘நின்னைச் சரணடைந்தேன்’ பிரபல இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்களால் (அவரது 15ம் நாவலாக) வெளியிடப்பட்டது.
<>இவரது, ‘சுபம் பப்ளிகேஷன்ஸ்’ என்ற பதிப்பகத்தின் மூலமாக, 25க்கும் அதிகமான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியதோடு நில்லாமல், செம்மைப்படுத்துவதையும், அதன் முக்கியத்துவத்தையும் சொல்லிக் கொடுத்துள்ளார். அவர்களில் சிலர், இன்று முன்னணி நாவல் எழுத்தாளர்களாக இருக்கின்றனர்.திருச்சி மாவட்ட மைய நூலகம் நடத்திய, மாவட்ட அளவிலான பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் நடுவராகவும், மற்றும் சில விழாக்களிலும், ஸ்டா என்ற அமைப்பின் ஆண்டு விழாவிலும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றுள்ளார். குவிகம் இலக்கிய வட்டம் மூலமாக, எழுத்துலகில் தங்கள் சிறந்த பங்களிப்பினை அளித்த பெண் எழுத்தாளர்களில் ஒருவராக, சமீபத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
‘அமிழ்தம்’ என்ற அமைப்பின் மூலமாக, படைப்பாளர் - வாசகர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் நடத்தி உள்ளார். மூத்த எழுத்தாளர்களான வித்யா சுப்ரமணியம், கௌரி கிருபானந்தன், அழகிய சிங்கர், ரமணிச்சந்திரன் மற்றும் பதிப்பாளர்களான திரு. கிருபானந்தன், திரு.வேடியப்பன், திரு. குகன் ஆகியோரின் தலைமையிலும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
50க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களையும், வாசகர்களையும் ஒருங்கிணைத்து, எழுத்தாளர் திருமதி.ரமணி சந்திரன் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி, பலராலும் பாராட்டிப் பேசப்பட்டது.
எழுத்து மட்டுமன்றி, ஓவியம், கைவேலைகள் என்று எப்போதும் தன்னை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதில் ஆர்வமுடையவர். தஞ்சாவூர் ஓவியங்கள், மார்பிள் ஆர்ட், பெர்ஷியன் ஆர்ட் வரைந்து விற்பனையும் செய்து வருகிறார்.
சிறு குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டவர். தனது வாசகர்கள், மற்றும் சக எழுத்தாளர்களிடமும் உதவியாகப் புத்தகங்களைப் பெற்று கிராமப்புறத்திலுள்ள அரசுப் பள்ளி நூலகங்களைத் துவங்கவும், மேம்படுத்தவும் உதவியுள்ளார்.