அப்போது நான் மதுரையில் இருந்தேன். பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகள் எளிமையாகவும், பிடித்தமானதகவும் இருந்த நேரம். வாழ்க்கை இவ்வளவு வேகமாக இருந்து பார்த்தது இல்லை. மொபைல், இண்டெர்நெட், வாட்ஸ்அப் போன்ற விஷயங்கள் இல்லாத காலம். ஒரு கல்லூரி மாணவனது விடுமுறை தினம் மிக எளிமையானது. சாப்பிடுவது, தூங்குவது, நண்பர்களோடு அரட்டை என்று உபத்திரவம் இல்லாத விஷயங்கள் நிறைந்தது. வெயில் நிறைந்த மதிய வேளையில், சைக்கிளில் நண்பனை வைத்துக்கொண்டு ஊர் எல்லாம் சுற்றி வந்து, ஏதாவது ஒரு கடையில் மோர் குடிக்கும் சுகம் இன்று நகரத்தில் கிடைப்பது அரிதாகிப்போனது. கோலப்பொடி விற்கும் சத்தம், பழைய பேப்பர் வாங்குவதற்க்கு போடும் சத்தம், பழைய ஈய பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவது குறித்த சத்தம் போன்றவை மதிய தூக்கத்திற்க்கு தாலாட்டாக இருந்தது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக நிறைய நேரம் இருந்தது. செய்வதறியா கனங்கள் தினம் இருந்தன. அப்துல் கலாம் கூறியது போல, கனவுகள் கான நேரமும், சூழலும் இருந்தன.
அதற்காக நான் இப்பொழுது இருக்கும் அனைத்தையும் குறை கூறப்போவதில்லை. ஆனாலும், வாழ்க்கை முறையும், வாழும் முறையும் வெகுவாக மாறி உள்ளது. இந்தக் கால அவசர வாழ்க்கையை பார்க்கும்போது மனம் படபடக்கிறது. சில சமயங்களில் மனம் பழைய வாழ்க்கைக்கு ஏங்குகிறது. நாம் எல்லோருக்கும், மொபைல், இண்டெர்நெட் இல்லாத வாழ்க்கை வாழ ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அது முடிவதில்லை. குடும்பத்தோடு சுற்றுலா செல்லும்போது கூட மடியில் கணினியும், பையில் இண்டெர்நெட்டும் எடுத்து செல்ல வேண்டியுள்ளது.
இதற்க்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றுகிறதா? அதைத்தான் இப்போது சொல்லப்போகிறேன். ஜெயகாந்தனின் "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்" என்ற நாவலை அமேசான் கிண்டிலில் படித்தேன். இது போன்ற நாவல்களை படிக்கும் போது, பழைய வாழ்க்கைக்கு சென்று வாழ்ந்து வந்தது போன்றதொரு பிரமை. இந்த நாவலைப் படிக்கும்போது, நிறைய முரனான விஷயங்கள் புரிந்தன. இப்படி ஒரு கிராமத்து நாவலை, கிண்டெலில் படிப்பதே முரனாக இருந்தது. நினைத்த நேரத்தில் வேறு உலகத்திற்க்கு சென்று திரும்புவது போல. கர்னாடிக் சங்கீதத்தை ஃப்யூசனில் கேட்பது போல, பழமையும் புதுமையும் சேர்ந்து படிப்பதற்க்கு ஒரு உந்துதலை கொடுத்தது. ஒரு அழகிய கிராமம், ஹென்றி, துரைக்கண்னு போன்ற கதாபாத்திரங்க்ள், தெளிந்த நீரோடை போன்ற கதையின் போக்கு, "சோப்பெங்கப்பா..." போன்ற மெல்லிய நகைச்சுவை; இவை எல்லாம் இந்த நாவலில் பிடித்துப்போன விஷயங்கள். ஒன்று தெளிவாக புரிந்தது. இது போன்று கதைகளைப் படித்தால், நாம் எதையும் இழக்க வேண்டியதில்லை. நினைக்கும் போது, நாம் விரும்பிய இடங்களுக்கு போய் வர முடியும்.
கிண்டெலில் படித்தது மிகவும் வசதியாக இருந்தது. கண்களில் உறுத்தலில்லை, கையடக்கனமான சாதனம், திறந்தவுடன் விட்ட இடத்தில் இருந்து படிக்கும் வசதி போன்று பல வசதிகள். ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரு சிறிய நூறு கிராம் எடையுள்ள மின் சாதனத்தில் கொண்டு போக முடியும் என்பது மிகப் பெரிய வசதி. நீங்கள் நாவல் படிப்பவராக இருந்தால், இந்த நாவலை கட்டாயமாகப் படிக்கவும்.
தமிழ் நூல்களை அமேசான் டிசம்பர் ஒன்றிலிருந்து அறிமுகப் படுத்தியுள்ளது. புஸ்தகா நிறுவனமும் சுமார் எழுநூறு புத்தகங்களை வெளியுட்டுள்ளது.
ஜெயகாந்தனின் "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்" அமேசானில் வாங்க, கீழே க்ளிக் செய்யவும்:
ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் கிண்டில் புத்தகம் !!- Dr. Rajesh Devadas, Ph.D., PMP, CTO & Director, Pustaka Digital Media Pvt. Ltd.,