Pa. Vijay
அரும்பு மீசை பருவம்.. சைக்கிள் பெல்லில் சங்கீதம் பாடிக்கொண்டே சாலையோரம் துரத்தி செல்லும் சுடிதார் துப்பட்டா வின் சாரலில் நனைந்தபடியே பள்ளியை விட்டு கல்லூரிக்குச் சென்ற இடைவெளி காலகட்டம்...
வகுப்பறையின் ஜன்னல் கம்பிகளுக்கிடையே ஒரு மெல்லிய மின்னல் கீற்று ஏதாவது ஒரு மைவிழி கூட்டில் இருந்து புறப்பட்டு வந்து இதயத்தின் மேல் அம்பு மழை பெய்து போகும் 18 வயசு மனசு..
அது காதலா .. கவனயீர்ப்பா.. இனக்கவர்ச்சியா... வெறும் வாலிபப் போக்கா.. என விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பருவத்தில் கண்களை புத்தகத்தின் மீது பாதியும், கவர்ந்திழுத்த கண்களின் மீது பாதியும் பதித்து படிப்புக் கெட்டுப்போன 18 வயசு..
அந்த வயதில் நினைவு கொட்டடிக்குள் நீண்டு படுத்து இருக்கும் சில வளையல் சப்தங்களையும் கொலுசின் கொஞ்சல்களையும் மீண்டும் மீட்டெடுத்த போது இப்படி கவிதைகளாய் கொட்டின..
கண்களை மூடி ஞாபக மொட்டை மாடியில் இருந்து கொண்டு காகித வானத்தில் எழுத்து பட்டங்களைப் பறக்க விட்ட போது கையில் விழுந்தது இந்த கவிதை நூல்..
பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.
கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.
இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது