Home / eBooks / 6 Padai Veedugal
6 Padai Veedugal eBook Online

6 Padai Veedugal (6 படை வீடுகள்)

About 6 Padai Veedugal :

தமிழ்த் தெய்வமான முருகனுக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவன் ஷடானனன். ஆறுமுகன்.

சிவபெருமான் பார்வதிக்கு உபதேசம் செய்கிறார். 'நான் ஐந்து முகம் தாங்கி ஐந்தொழிலாற்றும் சதாசிவன். நீ பலவாறாக இருப்பினும் ஒரு முகமுடைய பராசக்தி, இருவரின் முகங்களையும் ஒருங்கே கொண்ட முருகன், நம் குமாரன் ஆவான். நாமே அவன்' என்கிறார்.

கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராண தத்துவ விளக்கப் பகுதியில் இதே செய்தி கூறப்பட்டுள்ளது. 'நம் குமாரன் உனது சொரூபத்தையும் எனது (ஐந்து) சொரூபத்தையும் கொண்டவன் ஆதலின் ஆறுமுகன் ஆயினன்' என்கிறார். முருகனின் பிறப்போடு, 'ஆறு' மிகவும் தொடர்புடையது. சிவனாரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய தீப்பொறிகள் ஆறு. அவை தோன்றிய திதி ஷஷ்டி. வைசாக மாத விசாக நட்சத்திரம் தீப்பொறிகளைத் தாங்கியது. சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகள், ஆறு குழந்தைகளுக்கும் பாலூட்டிய கார்த்திகைப் பெண்களும் அறுவர். அதனாலேயே முருகனுக்குப் பிடித்த நாட்கள் ஷஷ்டியும் கார்த்திகையும். அந்த ஆறு குழந்தைகளையும் அணைத்துத் தான் அன்னை பார்வதி குமரனை சரவணனாக்கினாள்.

சமயங்கள் ஆறு. அவை: சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கெளமாரம், செளரம். அதனால் அருணகிரிநாதர், 'அறு சமய சாத்திரப் பொருளோனே அறிவு நெறிவார்க்கு குணக் கடலோனே' என்கிறார். இதில் கெளமாரம் முருகனை தலைவனாகக் கொண்ட சமயம்.

நமது உடம்பிலே! ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படுபவை அவை. இந்த ஆறு ஆதாரங்களிலும் ஆறுமுகப் பெருமான் வீற்றிருக்கிறான். இதில் 1. மூலாதாரம் - திருப்பரங்குன்றம், 2. சுவாதிஷ்டானம் - திருச்சீரலைவாய், திருச்செந்தூர், 3. மணிபூரகம் - திருவாவினன்குடி, 4. அநாகதம் - திருவேரகம் (சுவாமி மலை), 5. விசுக்தி - குன்றுதோறாடல், 6. ஆக்ஞை - பழமுதிர்ச்சோலை. விடுபடுவது வீடு. வடமொழியில் இதை முக்தி என்பர். வீடுபேறைத் தருகிறவன் முருகன். வீடுபேறுக்குத் தடையாக இருக்கும் காம, க்ரோத, லோப, மோக, மத, மாச்சர்யங்கள் என்ற ஆறு பகைவர்களை அழிப்பவனே அறுபடை வீடுகளில் உள்ள ஆறுமுகப் பெருமான்.

முருகனுக்கும் தமிழுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆதியில் சிவபெருமான் கயிலையில் முருகனுக்குத் தமிழை உபதேசித்தார். குமாரக் கடவுள் அதைத் தன் மாணாக்கரான அகத்தியருக்கு தமிழகம் நோக்கிச் செல்லும்போது உபதேசித்தார். தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் மாணாக்கர். அகத்தியர் இயற்றிய அகத்தியம் தற்போது கிடைக்கப் பெறாவிட்டாலும், அதுதான் முதல் தமிழ் நூல் என்று கூறப்படுகிறது.

தமிழ்மொழியும் முருகனைப்போல் என்றும் இளமையானது. தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டு. பன்னிரு தோள்கள் உள்ளவன் முருகன். கந்தவேள் கரத்திலுள்ள வேல் போன்று வேறு எந்த தெய்வத்துக்கும் வேல் இல்லை. அதேபோல் எந்த ஆயுதத்தின் பெயரும் மக்களின் நடுவே நாமமாக (அதாவது பெயர்ச் சொல்லாக) அமைந்ததில்லை. உதாரணம் - வேலாயுதம், வேலவன், சக்திவேல், முத்துவேல். அதேபோல் ஆயுத எழுத்தான ஃபோல் வேறு எந்த மொழியிலும் எழுத்தும் இல்லை. அது தமிழுக்கே உரித்தான எழுத்து.

தமிழில் மெய் எழுத்துகள் பதினெட்டு. முருகனுக்குத் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களாக மொத்தம் கண்கள் பதினெட்டு. சிவமூர்த்தி, உமாதேவி, விநாயகர், முருகன் யாவருக்குமே முக்கண் உண்டு.

சூரியன் ஆறு கண்களாகவும், சந்திரன் ஆறு கண்களாகவும், அக்னி ஆறு கண்களாகவும் முருகனுக்கு இருப்பதைப் போலவே தமிழிலும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பதினெட்டு எழுத்துகள்.

சரவணபவ என்பது குமார மந்திரம். இது மிக உயர்வானது. இந்த ஆறு எழுத்துகளினால் என்ன கிடைக்குமென்பதைப் பார்ப்போமே! 'ச’ சகலத்தையும் வசியமாக்கும். 'ர' சகல செல்வமும் கொடுக்கும். 'வ' பகை, பிணி நோய் தீர்க்கும். 'ண' பகைத்தவர் வாழ்வை முடிக்கும். 'ப' சகல போகமும் அளிக்கும்; எல்லோரிடமும் அன்பாயிருக்க வகை செய்யும். 'வ' எல்லாவற்றையும் ஸ்தம்பிக்க வைக்கும்.

கந்தரனுபூதியில் அருணகிரிநாதப் பெருமான் 'உல்லாச நிராகுல் யோக இதச சல்லாப விநோதன்' என்கிறார். இவை முறையே திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றையே குறிக்கும்.

இந்த ஆறுபடை வீடுகளும் பரமன் முருகனின் ஆறு செயல்களைக் குறிப்பன. திருப்பரங்குன்றம் மணந்தது; திருச்செந்தூர் வென்றது; பழநி நின்றது. ஞான தண்டாயுத பாணியாக; திருவேரகம் உபதேசித்தது; திருத்தணி வள்ளியை மணந்தது; பழமுதிர்ச்சோலை அருளியது என்பர்.

இனி, அறுபடை வீடுகளின் பெருமைகளையும் சிறப்புகளையும் அழகன் முருகனின் தெய்வீகத் திருக்கோலத்தையும் தரிசிப்போம்.

About G.S. Rajarathnam :

எம்.ஏ. (எகனாமிக்ஸ்), எம்.ஏ. (பாலிடிக்ஸ்), எம்.ஏ. (ஹிஸ்டரி), பி.எல். பட்டங்கள் பெற்று வேலைவாய்ப்புத்துறையில் இணை இயக்குனராய் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கியத்தின் மீது அதீத ஆர்வம் கல்லூரி நாட்கள் முதல் உண்டு. அலுவல் பணி காரணமாய் எழுத முடியாமல் போனாலும், மனைவி லட்சுமி ராஜரத்னத்தை எழுத ஊக்கப்படுத்தினார்.

மகள் ‘ராஜஸ்யாமளா’ பெயரில் 1970களில் இவர் எழுதிய சிறுகதைகள் இருமுறை கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசினை வென்றுள்ளன. இரண்டு சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார்.

பணி ஓய்வு பெற்ற பின், சொந்த பெயரில் நிறைய ஆன்மீக கட்டுரைகள் எழுதினார்.

மனைவி மற்றும் மகள் எழுத்துப் பணிக்கு பக்க பலமாய் இருந்தார். 2011ல் இறைவனடி சேர்ந்தார்.

Rent Now
Write A Review

Rating And Reviews

  Cotton.Ann

There is no difficulty in the world, as long as Kenden climbs

Same Author Books