ஒவ்வொருவரது வசிப்பிடத்துக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. மனிதர்களாகிய நாம் வசிக்கும் இடம் வீடு என்று சொல்லப்படும். அவரவரது வசதிக்கு ஏற்ப ‘வீடு’ என்பது பல வகைப்படும். பொருளாதார வசதியில் குறைந்தோர் வசிக்கும் இடம் குடிசையாக இருக்கலாம். ஓரளவு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வசிக்கும் இடம் அடுக்குமாடிக் குடியிருப்பாக இருக்கலாம். அதிக வசதி படைத்தவர்கள் வசிக்கும் இடம் பங்களா எனப்படும் தனி வீடாக இருக்கலாம். இதைத் தவிர ஒண்டுக்குடித்தனம், பிளாட்பாரம் - இப்படியும் பலர் வசித்துதான் வருகிறார்கள். ஆனால், இறைவன் இருக்கும் இடம் மட்டும் ஒன்றே ஒன்றுதான். கோயில் அல்லது ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. திருப்பதியையும் கோயில் என்றுதான் சொல்கிறோம். தெருமுனையில் உள்ள விநாயகர் மண்டபத்தையும் கோயில் என்றுதான் சொல்கிறோம். இதிலிருந்தே தெரிகிறது அல்லவா - வசதியும் வாழ்க்கைத் தத்துவங்களும் மனிதர்களுக்கு மட்டும்தான் என்று.
சமரசம் போதிக்கப்படும் இடம் - திருக்கோயில். இறைவனின் முன் எல்லோரும் சமம். பேதங்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் விமரிசனங்களுக்கும் அப்பாற்பட்டவன் இறைவன். மூல முதல்வனான பரம்பொருளை இறை அல்லது இறைவன் என்கிறோம். தவிர கடவுள், இயவுள், தெய்வம், ஸ்வாமி, பெருமான் - இப்படிப் பல பெயர்களால் குறிப்பிடுகிறோம். பொதுவாக அடிக்கடி நாம் குறிப்பிடுவது, இறைவன் என்கிற பெயரில். ‘இறு’ என்ற சொல்லில் இருந்து இறைவன் வந்திருக்கலாம் என்பது ஓர் ஆராய்ச்சி. ‘இறு’ என்பதற்கு இறுத்தல் அல்லது தங்குதல் என்று பொருள். சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் எனும் சான்றோர், ‘இறைவன் என்கிற சொல்லுக்கு எப்பொருளிலும் தங்குபவன் என்பது பொருள்’ என்கிறார்.
கட + உள் என்பதே கடவுள். மனம், மொழி, மெய் ஆகியவற்றைக் கடந்து நிற்பதே கடவுள். உண்மைதானே! ‘கோயில் விளங்கக் குடி விளங்கும்’ என்பர் நம் முன்னோர். கோயில்கள் சிறந்து விளங்கினால்தான், குடிமக்கள் சிறந்து விளங்குவார்கள். மனிதர்களின் அன்றாடக் கடமைகளுள் ஒன்று - ஆலயம் சென்று தொழுவது. சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் வலியுறுத்திச் சொன்ன இந்தக் கருத்தை, இன்றைய ஜனங்களுக்கு நினைவூட்ட வேண்டி இருப்பது, கலிகாலத்தின் சோகம். இன்றைய காலத்தில் கோயிலுக்குச் செல்வது என்பதை ஆத்மார்த்தமாகச் செய்யாமல் ஒரு ‘அஜெண்டா’ போல் ஆக்கிக்கொண்டுவிட்டார்கள் சிலர். தன் நாட்டுக் குடிமக்கள் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக எண்ணற்ற திருக்கோயில்களைக் கட்டினார்கள் மன்னர்கள். பூஜைகளையும் விழாக்களையும் அங்கே நடத்தினார்கள். மன்னர்கள் காலத்தில் பெரும் கூட்டம் கூடும் இடம் இரண்டு. ஒன்று - அரசவை; இன்னொன்று - ஆலயம். நாட்டைக் காப்பவன் அரசன். உலகையே காப்பவன் இறைவன்.
இறைவன் எழுந்தருளி உள்ள இடத்தைக் கோயில் என்றும், ஆலயம் என்றும் நாம் அழைக்கின்றோம். ‘கோயில்’ என்கிற சொல்லை ‘கோ + இல்’ என்று பிரித்துப் பொருள் காணலாம். ‘கோ’ என்றால் கடவுள் என்கிற பொருள் உண்டு. ‘இல்’ என்பதற்கு இருப்பிடம் என்பது பொருளாகும். கடவுளின் இருப்பிடம் என்பதே கோயில் ஆனது. ‘ஆலயம்’ என்ற சொல்லுக்கு ‘ஆ + லயம்’ என்று பிரித்துப் பொருள் காணலாம். ‘ஆ’ என்றால், ஆன்மா. ‘லயம்’ என்றால், சேருவதற்குரியது என்று பொருள். அதாவது, ஆன்மா சேருவதற்குரிய இடமே ஆலயம் ஆகும் என்று பொருள் சொல்லி இருக்கின்றனர் முன்னோர். நம் ஆலயங்களைப் பற்றி இதற்கு முன் நான் ஆசிரியர் பொறுப்பில் இருந்த ‘சக்தி விகடன்’ மற்றும் ‘திரிசக்தி’ இதழ்களில் ‘ஆலயம் தேடுவோம்’, ‘ஆலயம் அறிவோம்’ என்ற தலைப்புகளில் ஏராளம் எழுதி இருக்கிறேன். நான் எழுதி இருக்கிறேன் என்று சொல்வது தவறு. எழுதக் கூடிய ஒரு பாக்கியத்தை இறைவன் எனக்குக் கொடுத்துள்ளான். இதற்காகக் காலம் முழுதும் அந்தக் கடவுளுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். அப்படி நான் தரிசித்துள்ள நூற்றுக்கணக்கான ஆலயங்களுள் முதல் தொகுதியாக ‘ஆலய தரிசனம் - தொகுதி 1’ இப்போது வெளி வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொகுதிகள் வர உள்ளன. எனது நூல்களுக்குப் பேராதரவு அளித்து வரும் ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள். என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் என் குலதெய்வம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மனுக்கும், நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளுக்கும் என் அனந்தகோடி நமஸ்காரம்.
அன்புடன், பி. சுவாமிநாதன்
பி.சுவாமிநாதன், 04 நவம்பர் 1964ம் வருடம் பிறந்தார். சொந்த ஊர் திருப்புறம்பயம் (கும்பகோணம் அருகில்). பட்டப் படிப்பு பி.எஸ்ஸி . (கணிதம்) கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும், எம்.ஏ. ஜர்னலிஸம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் 22 வருடமும் திரிசக்தி குழுமத்தில் 3 வருடமும் அனுபவம் உள்ளது.
ஆன்மிகச் சொற்பொழிவாளராக...
'பொதிகை' தொலைக்காட்சியில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் மகான்களைப் பற்றிய நிகழ்ச்சி (திங்கள் முதல் வியாழன் வரை - காலை 6.00 மணி முதல் 6.15 வரை). 1,000 எபிசோடுகளைக் கடந்த - நேயர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்.
'ஜீ தமிழ் தொலைக்காட்சி 'யில் 'அற்புதங்கள் தரும் ஆலயங்கள்' என்ற தலைப்பில் ஆலயங்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 6.30 மணி).
தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வருகிறார்.
சொற்பொழிவுக்காகப் இவர் பல வெளிநாடுகளுக்கு பயனம் செய்துள்ளார். கனடா, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரெய்ன், கத்தார், ஓமன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை என்று பல நாடுகளுக்கு சென்றுள்ளார்.
இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். அவற்றில் சில விருதுகள்:
- செந்தமிழ்க் கலாநிதி (திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது)
- சேஷன் சன்மான் விருது 2017
- குருகீர்த்தி ப்ரச்சார மணி (காஞ்சி காமகோடி பீடம்)
- குரு க்ருபா ப்ரச்சார ரத்னா (ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி விழா குழு, துபாய்)
- சஞ்சீவி சேவா விருது (தாம்ப்ராஸ் காமதேனு டிரஸ்ட்)
- பக்தி ஞான ரத்னம் (ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குருஜி, ஆர்ட் ஆஃப் லிவிங், பெங்களூரு)
- ஆன்மீக தத்வ ஞான போதகர் (கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்)
- சத்சரித வாக்தேவம் (ஸ்ரீ மஹாசங்கரா கலாச்சார மையம், கோவை)
இதுவரை பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
- ஜீ தமிழ் தொலைக்காட்சி ('தெய்வத்தின் குரல்' என்ற தலைப்பில் காஞ்சி மகா பெரியவாளின் மகிமை பற்றிப் பல காலம் தொடர்ந்து பேசியது)
- சன் நியூஸ் (நேரலைகள், விவாதங்கள்)
- விஜய் (பக்தி திருவிழா)
- மக்கள் டி.வி. (ஆலய தரிசனம்)
- ஜெயா (சிறப்பு விருந்தினர்)
- தந்தி டி.வி. (கும்பாபிஷேக நேரலை மற்றும் சொற்பொழிவுகள்)
- நியூஸ் 7 (ஆன்மிக நேரலை வர்ணனைகள்)
- வானவில் (மகான்கள் குறித்தான தொடர்)
- ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல்
- ஸ்ரீசங்கரா (பல நேரடி ஒளிபரப்புகள்)
- மெகா டி.வி...
ஆன்மிக எழுத்தாளராக:
- தொடர்கள் வெளியான இதழ்கள்: ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கியப் பீடம், தின இதழ், காமதேனு, ஆதன் நியூஸ் உள்ளிட்டவை.
- தினமலர், காமதேனு (தி ஹிண்டு குழுமம்), ராணி, காமகோடி, ஆதன் நியூஸ் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார்.
- தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மிகக் கட்டுரைகளுக்குப் புத்தக வடிவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பொக்கிஷம் போன்ற இந்த நூல்களை வெளியிட்டு வருகிறது.
எழுதிய நூல்கள்: சுமார் 40-க்கும் மேல்
விற்பனையில் சாதனை படைத்த நூல்கள்:
- சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புதத் தொகுப்பு)
- ஆலயம் தேடுவோம் (புராதனமான - சிதிலமான ஆலயங்களைத் தேடித் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுழுக்கு நடத்தி வைத்தது)
- மகா பெரியவா (இத்துடன் 10 தொகுதிகள்)
- திருவடி சரணம் (பாகம் ஒன்று, பாகம் இரண்டு)