Home / eBooks / Aanandham Arulum Arupadai Veedu Annal!
Aanandham Arulum Arupadai Veedu Annal! eBook Online

Aanandham Arulum Arupadai Veedu Annal! (ஆனந்தம் அருளும் அறுபடை வீடு அண்ணல்!)

About Aanandham Arulum Arupadai Veedu Annal! :

‘வேலுண்டு வினை தீர்க்க, மயிலுண்டு எனைக் காக்க...’ என்ற பாடல், முருகனுடைய நேரடி பார்வைகூட வேண்டாம்; அவனுடைய வேலும், மயிலுமே நம் குறைகளைத் தீர்க்கும்; வேதனைகளைக் களையும் என்று உறுதியாகச் சொல்கிறது. நல்லோர் மேலும் மேன்மை பெறவும், தீயோர் மனந்திருந்தி நல்வாழ்வு பெறவும் முருகன் வழி காட்டுகிறான். தன்னை எதிர்ப்போரையும் தன்னோடு அரவணைத்துச் சென்று ஆதரிக்கும் அருங்குணத்தோன் அவன். அதனால்தான் அசுரன் சூரபத்மனை இரண்டாகப் பிளந்து அவன் உயிரை அழித்தாலும், அந்த இரண்டு பகுதிகளும் 'பணிப்பகை மயிலும் சேவற்பதாகையு'மாக மாறி அவனுடனேயே காட்சி தருகின்றன. ஆறுமுகப் பெருமானுக்கு முன்போய் நின்றால் தீயவர்களும் நல்லவர்களாகி விடுவார்கள் என்றுதானே இதற்குப் பொருள்? கச்சியப்பரும் கந்த புராணத்தில் அதைத்தான் பாடி வைத்திருக்கிறார்

"தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் நின்றால்

தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை

ஆயவும் வேண்டும் கொல்லோ அருசமர் இந்நாட் செய்த

மாயையின் மகனு மன்றோ வரம்பிலா அருள்

பெற்றுய்ந்தான்"

முருகப் பெருமான் முன்னே தீயவரும் தூயவராகி விடுவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்று கேட்கிறார் கச்சியப்பர்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அழகன் ஆறுமுகன் ஆறு படைவீடுகளில் கொலுவிருந்து அருட்செல்வத்தை வாரி வாரி வழங்குகிறார். அந்தப் படைவீடுகளை ஒவ்வொன்றாக இந்நூலில் நாம் தரிசிக்கப் போகிறோம்.

About Prabhu Shankar :

அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.

டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.

சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.

Rent Now
Write A Review

Same Author Books