Padman
வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் என்று எதுவும் இல்லை, உலகின் தோற்றத்துக்குப் பின்னணியிலும் எதுவும் இல்லை என்பதே நாத்திகம். அவ்வாறின்றி, உலகின் தோற்றத்துக்கு ஏதோவொரு காரணம் இருப்பதையும், இந்த வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருப்பதையும் வலியுறுத்துவது ஆத்திகம். இதில் ஆண்டவனை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அறநெறிகளைப் பின்பற்றுவதே முக்கியம். இதுபோன்ற நிரீஸ்வரவாத ஆன்மீக மார்க்கங்கள் பற்றிய முக்கிய நூல்களும், தத்துவங்களும் சம்ஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய வடமொழிகளில்தான் மிகுதியாக உள்ளன. குறிப்பாக சம்ஸ்கிருதத்திலேயே அதிக அளவில் உள்ளன என்பது ஆச்சரியமான உண்மை.
அதேநேரத்தில், தனிப்பட்ட நூல்கள் இல்லாவிடினும், ஆண்டவனை மறுக்கும் ஆன்மீகத்தில் தமிழின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
இவ்வாறு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிய இத்தகு நிரீஸ்வரவாத ஆன்மீக மார்க்கங்களை, உள்ளது உள்ளபடி, எனக்குத் தெரிந்தவரையில் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்வதே எனது இந் நூலின் நோக்கம்.
பத்மன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக கதை, கவிதை, கட்டுரைகளை எழுதிவரும் நா. அனந்த பத்மநாபன், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத் துறையில் 30 ஆண்டுக்கால அனுபவம் வாய்ந்தவர். தினமணி நாளிதழ், சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, வின் டிவி உள்ளிட்ட ஊடகங்களின் செய்திப் பிரிவில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
கடந்த 2005-இல், இதழியல் குறித்து இவர் எழுதிய மூன்றாவது கண் என்ற நூல், சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருதை வென்றது.
திக்கெட்டும் திருமுருகன், ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே, தத்துவ தரிசனம், முடியாத முடிவு (கவிதைத் தொகுப்பு), கருணைக்கு மறுபெயர் கசாப் (கட்டுரைத் தொகுப்பு), யாரும் சொல்லாத கதைகள் (சிறுவர் கதைகள்), சிவகளிப் பேரலை (சிவானந்த லஹரியின் தமிழ் மொழிபெயர்ப்பு), தென்முகக் கடவுள் துதி (தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்), ஆறுமுக அரவம் (சுப்ரமண்ய புஜங்கம்), அறுபடை அந்தாதி, பொருள் தரும் குறள் உள்ளிட்ட நூல்களைப் படைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத் தலைவர் வீர சாவர்க்கரின் “Six Epochs of Indian History” நூலை, “பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்” (விஜயபாரதம் பிரசுரம் வெளியீடு) என்ற தலைப்பில் அண்மையில் மொழிபெயர்த்துள்ளார்.
கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். வணிகம் வசப்படும், செல்வம் வசமாகும் உள்ளிட்ட நேரலை முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் நெறியாளர்.அன்பு பாலம் அமைப்பிடமிருந்து பன்முக ஊடகவியலாளர் விருது (2009), புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் இதழியல் சுடர் விருது (2015), விஸ்வ சம்வாத் கேந்திரா அமைப்பிடமிருந்து சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது (2017), சிவநேயப் பேரவையின் தமிழறிவன் மாமணி விருது (2017) உள்ளிட்ட விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.