இந்த ‘அடிச்சுவடுகள்’ நாவலின் தனித்துவம், இது- ஓர் ஸானிடோரியத்தின் மறுக்க முடியாத- மறக்க முடியாத-சரித்திரமாக இருப்பதாகும். இதில் ஊடாடும் பல மனிதர்கள், சென்னை மாநகரில் இன்னமும் தங்கள் அடிச்சுவடுகளைப் பதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் வரும் கதைமட்டுமே கற்பனையானது. மற்றவை மறுக்க முடியாத சத்தியங்கள்.
இதன் கதாநாயகி ‘சரயூ’ நோயின் உபாதை காரணமாக ஒரு கார்த்திகை மாதத்தின் இளம் காலைப் பொழுதில் மழையின் பூஞ்சாரல் விழுந்து கொண்டிருக்கையில் ‘ஸானிடோரியத்தில்’ நுழைகிறாள். நுழைகையில், வாழ்க்கையை வாழ்ந்து முடிந்துவிட்ட விரக்தியுடன், நிறைவேறா தாகங்களின் நிழலாக இருக்கிறாள். மீண்டும் அவள் வாழ்வில் தென்றல் வீச, புயலும் எழுகிறது.
இக்கதை முழுதும் ஸானிடோரியத்தில் துவங்கி ஸானிடோரியத்துக்குள்ளேயே முடிந்தும் விடுகிறது.
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Rent Now