Home / eBooks / Akira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum…
Akira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum… eBook Online

Akira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum… (அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும்... அணையாச் சுடர் அனிதாவும்...)

About Akira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum… :

அகிரா குரசேவாவின் ரெட் பியர்ட் அப்படியே குணாம்சத்தில் அனிதாவோடு ஒத்துப் போகிறவராக தோன்றினார். ரெட் பியர்ட் ஒரு தன்னலமில்லாத மருத்துவர். அனிதாவும் அப்படியான ஒரு மருத்தவராக வந்திருக்க வேண்டியவர். ரெய் பியர்ட் கிராமங்களில் கதியற்று வாழும் ஏழை கிராம மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அனிதாவும் அப்படியாக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற கனவுகளோடே இருந்தவர். இருவரும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து, ஏழ்மையில் இருக்கும் கிராம மக்களின் வலிகளை உணர்ந்து அதை போக்க, உயிர்ப்போடு போராட நினைத்தவர்கள். இப்படி பல தளங்களில் இரண்டு கதாபாத்திரங்களும் ஒத்திருப்பதை பார்க்கையில் தான், இயக்குநர் அகிரா குரசேவாவின் மகத்துவம் பிடிபடுகிறது. காலம் கடந்த காலத்தால் அழிக்க முடியாத மகாகலைஞன். என்னவொரு தூரதிஷ்டி பார்வை. அந்த மகாகலைஞனின் அறுபதுகளில் வந்த படைப்பு இப்போதும் பொருந்துகிறது.

அதனாலேயே இந்த நூலை எழுதியே ஆக வேண்டும் என்கிற தாபம் பீறிட்டெழ ஆரம்பித்தது. ஒரே நாளில் ஒரே மூச்சில் இந்த நூலை எழுதி முடித்து விட்டேன். எழுதி முடிக்கும் வரை நிறுத்த முடியவில்லை.

எங்கோ துவங்குகிற புள்ளி எங்கோ எப்படியோ முற்றிலும் எதிர்பாராத பரிமாணங்களோடு கருக்கொண்டு உருக்கொண்டு தன்னை வெளிப்படுத்துகிற கயாஸ் தியரி போல இந்த நூலின் ஆதி துவக்கம் எங்கோ ஒரு புத்தகசாலையில் திரையிடப்பட்ட வீடு திரைப்படம் என்கிற புள்ளியில் துவங்கியிருக்கிறது. வீடு திரைப்படத்திலிருந்து இந்த படைப்பு வரை பயணித்த கயாஸ் தியரியின் பயணிப்பை உணர்த்தவே இந்த மேற்படி விவரங்கள்.

அதேபோல அனிதா என்கிற புள்ளி எங்கெல்லாம் எப்படியெப்படியோ எதிர்பாராத பரிமாணங்களோடு கருக்கொண்டு உருக்கொண்டு உயிர்கொண்டு தனதான நீட்சியில் நீட்டின் தந்திரம் உடைத்து பூமியின் உயிர்நாடியான கிராமத்தின் மனிதத்தை காக்கும் விதத்தில் அங்கே ஏராளம் அனிதாக்களை மருத்துவர்களாக ஆக்கி அழகு பார்க்கிற விஸ்வரூப தரிசனமாய் நிகழ இருக்கும் கயாஸ் தியரியின் பயணிப்பாய் இந்த ரெட் பியர்ட் என்கிற படைப்பை தரிசிக்கலாம்.

நிர்பயா என்கிற ஜோதி தன்னுடைய தோழனோடு இரவில் பேருந்தில் பயணிக்கிற போது, நான்கு பேருந்து ஊழியர்களாலேயே வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். உடனே, எல்லோரையும் போல பயந்து போய் ஒடுங்கிவிடவில்லை. துணிச்சலோடு, உயிருக்கு ஆபத்தான நிலையிலும் காவல் நிலையம் போய் நடந்ததை சொல்லி பிராது கொடுத்தார் அல்லவா... அதனால் தானே தேசமே அவருக்காக ஒன்று திரண்டு போராடியது. அதன் விளைவாக ‘நிர்பயா ஆக்ட்’ சட்டமாக கொண்டும் வந்தார்கள்.

அனிதாவின் அழித்தொழிப்பு மறைமக கொலையே. தற்கொலைக்கு தூண்டுவது சந்தேகத்திற்கிடமில்லாமல் கொலை தான். அத்தனை துணிச்சலான பெண்ணை தற்கொலைக்கு தூண்டுகிறதும் கொலை தானே... அப்படியான பேரிழப்பை சந்தித்து, தமிழகமே கொதித்துப் போய் கிடக்கிற இந்த வேளையில், தேசமே அனிதாவிற்காக குரல் கொடுத்து ‘அனிதா ஆக்ட்’ கொண்டு வர முனைய வேண்டும் என்கிற வேண்டுகோளில் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன். இதில் அகிரா குரசேவாவின் ரெட் பியர்ட் திரைக்கதையையும் முழுமையாக தரிசிக்கலாம், அதனை ஒத்திருக்கிற அனிதா என்கிற குறியீட்டு படிமத்தோடான ஒப்புமைகளையும் தரிசிக்கலாம். ஆக, ஒரே நூலில் இருவேறு நூல்களுக்கான அனுபவங்களை அந்த சூட்சும புள்ளியில் ஒரு சேர தரிசிக்கிற அனுபவமாக இயைந்து அவை புதிய அனுபவமாய் படிக்கிற மனங்களில் உயிர்த்தெழுந்து நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அக்கினிக் குஞ்சாய் ரெட் பியர்டின், அனிதாவின் கனவுத் தாகம் எங்கும் அணையாச் சுடராய் விரிந்து பரந்து பரவ, அந்த பரவச பயணிப்பை எழுத்தாய் இதோ உங்கள் முன் ஒப்படைத்தாகி விட்டது. இந்த படைப்பின் சுடரை உங்கள் ஆன்மாக்களிலும் வைத்துக் கொண்டு அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே ரெட் பியர்டுக்கும், அனிதாவுக்கும் செய்கிற மரியாதை.

இனியொரு அனிதாவை காவு கொடுத்துவிடக் கூடாது. இங்கே அனிதா என்பது தகுதி இருந்தும் விரும்பிய கல்வி கற்க இயலாது தாகத்தோடு தவித்தலையும் ஒருமித்த கிராமிய ஆன்மாக்களின் குறியீடு. தகுதியிருந்தும் தந்திரக்காரர்களால் தட்டிப்பறிக்கப்பட்டு பரிதாப நிலையில் பரிதவித்தலைகிற ஆயிரமாயிரம் ஆண்,பெண் உருவிற்குள் உள்ள அனிதாக்களுக்கு ரெட் பியர்டின் ஆன்மம் வழியாக இந்த நூலை சமர்ப்பணம் செய்கிறேன்.

மனிதத்துடன், தி. குலசேகர்

About Kulashekar T :

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Rent Now
Write A Review

Same Author Books