எல்லோருக்கும் சிந்திக்கும் திறனோடு மூளை உண்டென்றால், ஜே.எஸ். ராகவனுக்கு மட்டும் சிரிக்கும் திறனோடு இருக்கும்போல. விபரீதமான, விவகாரமான, அசாதாரணமான சூழ்நிலைகளைக்கூட, நகைச்சுவையோடு விவரிக்கும் அசாத்தியத் திறன் கொண்டது அவரது எழுத்து. அது வெறும் எழுத்தல்ல, கோமா பேஷண்டையும் காமாசோமாவெனச் சிரிக்க வைத்திடும் சக்தி கொண்ட ஹாஸ்ய மந்திரம்.
வயிறு குலுங்கச் சிரித்தல், விழுந்து புரண்டு சிரித்தல், கண்ணில் நீர்வரச் சிரித்தல், சூழ்நிலை மறந்து சிரித்தல், இன்னும் சிரித்தலில் என்னென்ன வகையுண்டோ அத்தனையும் இந்தப் புத்தகத்தில் சாத்தியம்.
அண்ணாநகர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் ஆகிய பிராந்திய வார இதழ்களில் தொடர்ந்து ஐநூறு வாரங்களுக்கும் மேல் வெளிவந்து கொண்டு இருக்கும் 'தமாஷா வரிகள்' பத்தியின் சமீபத்திய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.
வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.
தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..
Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.
தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!'
Rent Now