தமிழகம் மிக அற்புதமான காலச் சுவடுகளின் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஈடு இணையற்ற வரலாற்றுப் பொக்கிசங்கள் அனைத்தும் கோயில் கல்வெட்டுக்களில் பொதிந்துள்ளன. கல்வெட்டுக்களை ஆய்வு செய்யாததாலும் கோயில்களின் வரலாற்றை புத்தகமாக எழுதாததாலும், எண்ணற்ற கோயில்களின் அரிய வரலாறு காலப்போக்கில் அழிந்து வருகின்றது. வீழ்ந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் வரலாற்றுச் சான்று மிக்க கோயில்களை ஆய்வு செய்து அதை புத்தகமாக வெளியிடுவதன் மூலம் தமிழகத்தின் தன்னிகரற்ற வரலாற்றை ஓரளவு மீட்டெடுக்க ஏதுவாக இருக்கும். அதன் பொருட்டு,
அன்னியூர் என்னும் அன்னூரின் கண் குடி கொண்டு நம்மையெல்லாம் வாழ்த்தி வழிநடத்தி, அருளாட்சி எனும் இறையாட்சி புரிந்து வரும் எம்பிரான் அருள்மிகு அருந்தவச் செல்வி உடனமர் அருள்மிகு மன்னீசுவரப் பெருமானின் திருத்தல வரலாற்றையும், திருப்பெருமைகளையும் தொகுத்து புத்தகமாக புத்துயிர் கொடுத்துள்ளோம் எழுத்துக்களுக்கு.
இளம் எழுத்தாளர் ப.ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.
தமிழக அரசின் 'தமிழ் செம்மல்' விருது, கம்போடியா அரசின் உலக பாரதியார் விருது உட்பட இரண்டு அரசு விருதுகளை பெற்றுள்ளார். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu - 2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர். கலைஞர், மக்கள், பொதிகை. Z தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்தியா வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவிதைகள் கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
Rent Now