Home / eBooks / Ariyum Arive Arivu
Ariyum Arive Arivu eBook Online

Ariyum Arive Arivu (அறியும் அறிவே அறிவு)

About Ariyum Arive Arivu :

காலக்கிரமப்படிப் பார்த்தால் ரமணர் அருளிய பாடல் தொகுப்புகளின் வரிசை அருணாச்சல அக்ஷர மணமாலை,...உபதேச உந்தியார்,... உள்ளது நாற்பது.... என்று போகும். அவரது படைப்புகள் அனைத்திலுமே அக்ஷர மணமாலை உள்ளடக்கிய “அருணாச்சல ஸ்துதி பஞ்சகம்” ஒன்றில்தான் பக்தி ரசம் ததும்பும். ஏனைய தொகுப்புகள் எல்லாமே ஞான ரசம் கொண்டவைதான். படிப்பதற்கும், புரிந்து கொள்ளுவதற்கும் மேற்கண்ட வரிசையில் உள்ள படைப்புகளில் முன்னே வருவது எளிதானதாகவும், பின்னே வருவது போகப்போக கடினமானதாகவும் இருக்கிறது என்பது பலரது அனுபவம்.

ஆனாலும் நான் செய்த முன்வினைப் பயனோ என்னவோ, எனக்கு முதலில் அறிமுகமாகியது "உள்ளது நாற்பது" பாடல்களே. அவைகள் எனக்கு அறிமுகம் ஆகும் சமயம், அந்த நூலின் பிரதியும்என்னிடம் கிடையாது. பம்பாயில் வேலை பார்த்து விட்டு ஒய்வு பெறும் போது சென்னை வந்து தங்கிய JBS என்று நாங்கள் அழைத்த திரு. J. பாலசுப்பிரமணியன் என்ற ஒரு பெரியவரிடம்தான் நான் அவைகளை 1975 -ம் ஆண்டில் கற்றேன். தனது வாழ்நாளின் இறுதி வருடங்களில் இந்தப் பணியை அவர் என் பொருட்டு செய்து முடித்தார். அவர் சொல்லி நான் கேட்டு ஒவ்வொரு செய்யுளையும் என் கைப்பிரதியாக எழுதி வைத்துக் கொண்டேன். அந்த 83 பாடல்களையும் அவர் எனக்கு சுமார் நான்கு நாட்களில் படித்து, பொருள் சொல்லி, விளக்கி, அவ்வப்போது கேள்வியும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரும் என்னைப் போலவே பம்பாயில் இன்னொரு ரமண பக்தரிடம் அவை அனைத்தையும் குருமுகமாகக் கற்றுக் கொண்டாராம்.

"உள்ளது நாற்பது" கற்று முடித்த பின்புதான் "உபதேச உந்தியா"ரும், அதன் பின்னரே "அக்ஷர மணமாலை"யும் படித்தேன். ஆக எனது பயணம் இந்த மூன்று தொகுப்புகளைப் பொருத்தவரை பின்னோக்கிச் சென்றிருக்கிறது. ஆனாலும் கடினத்தில் தொடங்கி எளிதானதிற்குச் சென்றதால் எனது பயணம் சுகமானதாகத்தான் இருந்தது.

அந்தப் பெரியவர் அன்று போட்ட அஸ்திவாரத்தில் தான் இந்தக் கட்டுரையை இப்போது என்னால் எழுத முடிந்தது என்று சொன்னால் மிகையாகாது. நான் பெற்ற அந்தப் பெரும் பயனை மற்றோரும் ஓரளவுக்கேனும் பெறலாமே எனும் எண்ணத்தில்தான் இத்தொடரைத் தொடங்கினேன். இதைப் படித்த பலரில் ஒரு சிலரேனும் இப்பணியைத் தொடர்வார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.

அண்மையில் காலமாகிய ரமண பக்தர் திருமதி. கனகம்மாள் அவர்கள் எனக்கு அறிமுகம் ஆகியதே ஓர் அதிசய சந்திப்பில்தான். அவர் ஒரு சுற்றுலாப் பயணியாக நியூயார்க் நகரில் Queens பகுதியில் இருக்கும் "அருணாச்சல ஆஸ்ரம"த்திற்கு வந்திருந்தார். அப்போது நானும் அங்கு எதேச்சையாகப் போயிருந்தேன். அவருக்கு ஆங்கிலம் சரளமாக வராததால், அவரது தமிழ்ப் பேச்சை என்னை மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அப்படியாக அவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் ரமணாஸ்ரமத்தின் அருகிலேயே தங்கியிருந்ததால் 2009-ம் ஆண்டு வரை அவ்வப்போது நான் சந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் எழுதி ரமணாஸ்ரமம் வெளியிட்டுள்ள "ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை" ஒன்றையே எனது துணை நூலாகக் கொண்டு இந்தத் தொடரை அளித்துள்ளேன். "உள்ளது நாற்பது" தொகுப்பில் இருந்து இந்தத் தொடரின் தலைப்புக்கு ஏற்றது என்று நான் எண்ணிய சில பாடல்களை மட்டுமே இத்தொடருக்கு எடுத்துக் கொண்டேன். மற்ற பாடல்களும் தத்துவ சாரத்தைப் பிழிந்துகொடுப்பவைதாம். இந்தத் தொடர் மூலம் வாசகர்கள் எவரேனும் "உள்ளது நாற்ப"தை முதன் முதலாக அறிந்து கொண்டவர்கள் என்றால், அவர்கள் மற்ற பாடல்களையும் தங்கள் முயற்சியினால் படித்து அறிந்து கொள்வது நன்மை பயக்கும்.

About S. Raman :

இளங்கலையில் இயற்பியல் (Physics) முதுகலையில் மின்னணு (Electronics) முனைவர் பட்டமோ பேச்சை அறியும் கணினி வழிகளில் (Speech Recognition) என்பவைதான் இந்நூலாசிரியர் S. ராமன் சென்ற கல்வி வழி. இவை நடுவில் தமிழ் எங்கே வந்தது என்று கேட்டால், தான் பிறந்தது 1944-ல் தமிழ் நாட்டில் சங்கம் வளர்த்த மதுரையில், தொடக்கத்தில் தமிழிலேயே பயின்றும், பின்பு ஆங்கிலத்தில் படிப்பு தொடர்ந்தாலும் இளங்கலைப் படிப்பு வரை தமிழ் பயின்றதும் காரணமாக இருக்கலாம் என்பார். மேலும் தமிழ் பயின்ற ஆசிரியர்களில் முதன்மையானவர் “கோனார் நோட்ஸ்” புகழ் திரு. ஐயம் பெருமாள் கோனார் என்றால் அது போதாதா என்றும் சொல்வார்.

பெங்களூர் (I.I.Sc.) இந்திய விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்திலும், பின்பு சென்னை (I.I.T.) இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திலும் ஆக நாற்பது வருடங்கள் பணி புரிந்து பேராசிரியராக 2006-ல் ஓய்வு பெற்றார். தற்சமயம் பல்கலைக் கழகங்கள் அல்லது கல்வித் தர நிர்ணயக் குழுக்களின் அழைப்புக்கு இணங்கி அவ்வப்போது பணியாற்றி வருகிறார்.

இவர் தனது இளம் வயதிலிருந்தே திருவண்ணாமலை தவச்சீலர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் போதனைகளில் மனம் சென்றவர். அன்னாரின் உரைகளைப் பற்றியும், அது தொடர்பானவைகளைப் பற்றியும் இவர் தமிழ்ஹிந்து இணைய தளத்தில் (www.tamilhindu.com) 2010-ம் வருடத்தில் இருந்து எழுதத் தொடங்கினார். அவை தவிர தினசரி செய்திப் பத்திரிகையில் வரும் சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் பெயர்ப்பதும் இவரது இன்றைய பணிகளில் ஒன்று.

இவர் எழுதிய வால்மீகி இராமாயணச் சுருக்கத்தின் மொழிபெயர்ப்பான “இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு”, மற்றும் “இரமணரின் கீதா சாரம்” நூல்களை ‘இந்துத்துவா பதிப்பக’மும் , சுவாமி விவேகானந்தர் வழி நடந்து ஒரு புதிய நகரத்தையே உருவாக்கிய, ஆஸ்திரேலியத் தமிழரான திரு. மஹாலிங்கம் சின்னத்தம்பி அவர்களின் வாழ்க்கை சரிதையான “இலக்கை எட்டும்வரை இடைவிடாது இயங்கு” என்ற மொழிபெயர்ப்பு நூலை “கண்ணதாசன் பதிப்பக”மும் வெளியிட்டிருக்கின்றன. இவரது இன்னுமொரு மொழிபெயர்ப்பு ஸ்ரீ ரமண மகரிஷி இணைய தளத்தில் “அத்வைத ஞான தீபம்” என்று ஒளி வீசுகிறது.

தமிழ்க் கட்டுரைகள் எழுதுவது தவிர, தனது வீட்டு மாடியின் திறந்த வெளியில் இயற்கை உரம் தயாரித்து, செடிகள் வளர்ப்பதும் இவரது இன்னுமொரு ஓய்வுகாலப் பொழுதுபோக்கு.

Rent Now
Write A Review