Home / eBooks / Arooba Nanju
Arooba Nanju eBook Online

Arooba Nanju (அரூப நஞ்சு)

About Arooba Nanju :

முன்னுரை

"இப்படியா அப்படியா
எப்படி இருந்தது என
நாலைந்து சொற்களை
அவரே தந்து
வலியினைச் சொல்லுடன்
பொருத்தச் சொன்னார்.
உச்சி மகிழ்வுக்கும்
உச்ச வலிக்கும்
அனுபவிப்பவனிடம்
அடைமொழி இல்லை.
எம் வலி ஆகாது
உம் வலி".

கல்யாண்ஜியின் இக்கவிதைதான் நினைவிற்கு வந்தது -அழகிய பெரியவனின் கவிதைத் தொகுப்பினை படித்து முடித்தவுடன், கவிஞரது மகிழ்வின் உச்சியும், வலியின் உச்சியும் அடைமொழிகளுக்கு அப்பாற்பட்டவை.

அவர் வலி ஆகாது நம் வலி - என்றாலும், அழகியதும், அரசியல் நடிண்ணுணர்வும், அசுவியாலும், சமூகக் கூர்கணிப்பும், எதிர்ப்பின் துணிவும், கனவும், காதலும் கொண்டு பிசைந்த அந்தக் கவி மனதின் ஒரு ‘பிடிக் கனனவி' பார்க்கக் கிடைத்த பேரின்பத்தை இத்தொகுப்பு தருகின்றது.

கவிஞரது பார்வையும், அனுபவமும் ஒரு விளிம்பு நிலை பிராந்திய வட்டத்தைக் கடந்து, உலகளாவிய பொதுமைத் தன்மைக்குள் பிரகாசிப்பதே அழகிய பெரியவனின் தனித்தன்மை. அவரது இனத்துவ அனுபவங்கள், இனக்குழு வாழ்க்கை, இன ஒடுக்குமுறைக்கு எதிரான கலகம் - இவற்றை வைத்து மட்டுமே அவரது சரியாகப் பயணம் அளக்கப்படவில்லை.

அத்துனை வலியும், அனுபவங்களிலும், தெரு உண்மையும், வாழ்வின் துண்டாடப்பட்ட ஒரு காட்சியும், படிமங்களென உறைந்திருக்கின்றன. அதிகாரத்தின் குரூரமும், அவலமும் ஒருபோதும் மானுடத்தின் வீரியத்தைச் சற்றும் சூம்ப வைக்க இயலாதவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்பவை இக்கவிதைகள்.

ஒரு கவிதை எப்பொழுதும் தர்க்கத்தினால் உலுக்கப்படுவதே இல்லை. அதன் விதிகளில் பகுத்தறிவிற்கு இடமில்லை - கற்பனையும், உள்ளுணர்வும், கால நேர்த்தியும் - இவற்றில் மட்டுமே கூவினத தஞ்சமடைகின்றது.

ஆனால், அழகிய பெரியவனின் கவிதைகளில் ஒரு நுட்பமான அரசியல் சடுறுவி நிற்க, தகிக்குமொரு நெருப்புக் குரல், "டெமாக்ளஸின் கத்தியாய்" ஆதிக்க வர்க்கத்தின் தலைமீது எப்பொழுதும் தொங்குகின்றது.

நடை, உத்தி, உருவம், உள்ளடக்கம் எல்லாவற்றையும் தாண்டி "மனுசக் கழுதைகளை" அழவைக்கின்ற, காதலிக்கச் செய்கின்ற, கோபமுறச் செய்கின்ற, ஒரு தனிக் குரலே இக்கவிதைகளின் அடிச்சரடு.

பெண் - பாட்டியாக, தாயாக, மகளாகக், காதலியாக வந்தாலும் - மறுக்கப்பட்ட வாழ்வின் பிரதிநிதியாகவும், பாட்டாளியாகவும், விளிம்பு நிலை மாந்தராகவும் இருக்கின்ற அந்த "தாய்மை" சித்திரமே இக்கவிதைகளில் தொக்கி நிற்பது.

ஒரு ஆண் மனம் அச்சொட்டாக அவற்றைக் கவிதைகளில் வடித்திருப்பதும், ஈரங்கசியும் ஒரு கவி மனம் அதற்குக் கை கொடுத்திருப்பதுவுமே இக் கவிதைகளின் வெற்றிக்கான காரணம்.

கவிஞரும் இந்தக் கவிதைகளைக் கண்டெடுத்து கோர்க்கவில்லை, தனதும், தன் புறத்துமான, தான் சார்ந்ததுமான வாழ்க்கையைப் பார்த்து, கவிதைகளாக்கி இருக்கிறார்.

வாசித்து, பகிர்ந்து, புரிந்துகொள்கின்ற முயற்சியில் கொஞ்சம் மயங்கிப் பிச்சியான வாசகப் பெருமிதமுடன், போப்பின் (Pope) இந்தக் கூற்றை நினைவுகூர்கிறேன்.

"We poets are (upon a poets word) of all mankind, the creatures most absurd!"

- தமிழச்சி தங்கபாண்டியன்

About Azhagiya Periyavan :

அழகிய பெரியவன் (Azhagiya Periyavan) தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் இயங்குகிறார். தெளிந்த அரசியலோடு, தலித் மக்களின் பிரச்சினைகளை எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவராக விளங்குகிறார். அழகிய பெரியவன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்.இவர் ‘தகப்பன் கொடி’ புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டும், 'உனக்கும் எனக்குமான சொல்'கவிதை நூலுக்காக 2010 ஆம் ஆண்டும் இரண்டு முறை தமிழக அரசின் விருது பெற்றவர். அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். முன்பு இவர் முழுநேர எழுத்தாளராக இயங்கினார்.

அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன் ஆகும். இவருடைய தாய் மாமா ஒருவர் மரபுக்கவிஞராக இருந்தார். அவர் ,நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய குறிஞ்சிமலர் என்ற புதினத்தைப்படித்து அதனால் கவரப்பட்டு அப்புதினத்தின் நாயகனான அரவிந்தன் என்ற பெயரை இவருக்கு வைத்தார். அழகிய பெரியவன் மார்ச் மாதம் மூன்றாம் நாள் 1968 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஆகும். இவரின் தந்தை சி.சின்னதுரை மற்றும் தாயார் கமலம்.

இவர் தனது கிராமமான கள்ளிப்பேட்டைக்கு அருகில் உள்ள சாத்கர் என்ற கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்தார். பின்னர் ஆம்பூருக்கு அருகில் உள்ள தேவலாபுரம் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் பின்னர் ஆம்பூரில் இருக்கும் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை பள்ளி வகுப்பு வரையிலும் படித்தார்..தனது இளம் அறிவியல் பட்டப்படிப்பை விலங்கியலை முதன்மைப்பாடமாகக்கொண்டு வேலூரில் இருக்கும் ஊரீசு கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் கல்வியியலில் ஒரு பட்டத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், முதுகலை தமிழ் பட்டத்தை சென்னைப்பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

அழகிய பெரியவன் தனது கல்லூரி காலத்திலிருந்தே எழுதுகிறார். முதன்முதலாக மேல்நிலைப்பள்ளி வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோதே இவர் சில சிறுகதைகளை எழுதிப்பார்த்திருக்கிறார்.நிழல் என்ற பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தியிருக்கிறார். இவர் எழுதிய 'கூடடையும் பறவைகள்' என்ற சிறுகதை முதன்முதலாக 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாமரை இதழில் வெளியானது.தமிழின் முன்னணி பத்திரிகைகளிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதிவருகின்றார்.

அழகிய பெரியவன் தன்னுடைய படைப்புகளுக்காக பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, தினமணி ஆக்சஸ் கவிதைப்பரிசு,கணையாழி சம்பா நரேந்தர் குறுநாவல் பரிசு,கலை இதழ் பரிசு, கலை இலக்கிய பெருமன்ற பரிசு, தமுஎகச வழங்கும் சு.சமுத்திரம் சிறுகதை நினைவுப்பரிசு,தினமணி நெய்வேலி சிறுகதை பரிசு,சுஜாதா உயிர்மை விருது, பொ.மா.சுப்பிரமணியம் அறக்கட்டளை விருது, சிற்பி கவிதை விருது, எஸ்.ஆர்.வி தமிழ் விருது, களரி வழங்கும் கு. அழகிரிசாமி சிறுகதை விருது, தலித் முரசு கலை இலக்கிய விருது, இந்தியா டுடே எதிர்கால நாயகர் விருது, திராவிடர் கழகம் வழங்கும் பெரியார் விருது ஆகியவற்றை பெற்றிருக்கிறார்.

2003 ஆண்டு 'தகப்பன் கொடி' புதினத்துக்கும், 2010 ஆம் ஆண்டு 'உனக்கும் எனக்குமான சொல்' என்ற கவிதை நூலுக்கும் தமிழக அரசின் விருதினை பெற்றுள்ளார்.

அழகிய பெரியவன் எழுதிய 'குறடு' என்ற சிறுகதை 'நடந்த கதை' என்ற பெயரில் பொன்.சுதா என்பவரால் குறும்படமாக்கப்பட்டு பல பரிசுகளை பெற்றுள்ளன. இவருடைய மற்றொரு சிறுகதையான 'கண்காணிக்கும் மரணம்' என்ற சிறுகதையும் ஹரி என்பவரால் அதே பெயரில் குறும்படமாக்கப்பட்டுள்ளது. அம்ஷன் குமார் அவர்கள் இயக்கியுள்ள 'மனுசங்கடா' என்ற திரைப்படத்துக்கு துணை திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

அழகிய பெரியவனின் படைப்புகளில் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு எம்.பில்.பி.எச்.டி பட்டங்களைப் பெற்றுள்ளார். இவரின் பல்வேறு படைப்புகள் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தின் தமிழ்ப்பாடத்திட்டத்தில் மேல்நிலைப்பள்ளி அளவிலும் கல்லூரி அளவிலும் இவருடைய சிறுகதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய 'ஏதிலிக்குருவிகள்' என்ற கவிதையை தமிழ்நாடு அரசு பதினோராம் வகுப்பு தமிழ்ப்பாடநூலில் பாடமாக சேர்த்துள்ளது.

இவருடைய பல கதைகளும் கவிதைகளும் ஆங்கிலம், செக், இந்தி, உருது, வங்காளம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

Rent Now
Write A Review

Same Author Books