ஏறத்தாழ 5,500 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது நகரத்தார் சமூகம். தொண்ண மண்டலம், பாண்டிய மண்டலம் மட்டுமல்லாமல் பர்மா, சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை என கடல் கடந்தும் வாணிபத்தில் கரை கண்டவர்கள் நகரத்தார்.
கடும் உழைப்பு, உயர் பண்பு , இறை பக்தி இவைதான் நகரத்தாரின் தனிச்சிறப்பு. சமயம், சைவ நெறி, தமிழ் மொழியையும் நகரத்தார் சென்ற இடமெல்லாம் வளர்த்தார்கள்.
எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமானை நினைத்து உருகி, உருகி பாடி தழைத்தோங்க தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த 63 நாயன்மார்களில் நம் நகரத்தார் குலத்தைச் சேர்ந்த ஐவரும் அடக்கம் என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் செய்தி.
சிவனுக்கே அன்னையான காரைக்கால் அம்மையார், இயற்பகை நாயனார், அமர்நீதி நாயனார், மூர்த்தி நாயனார், கலிகம்ப நாயனார் என நம்மவர்கள் ஐவர் பற்றி அழகாக எளிய நடையில் அழகு தமிழில் புதுக்கவிதை போல் இரா. குமார் படைத்துள்ளார். அவருக்கு என் பாராட்டுக்கள்.
எந்தப்பக்கம் புரட்டினாலும் விறுவிறுப்பான நடை, நாயன்மார்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யம் ததும்ப விவரித்துள்ளார். அதற்கு அழகு சேர்க்கின்ற ஓவியங்கள், நகரத்தார் இல்லங்களில் இருக்க வேண்டிய அவசியமான நூல் இது.
மு. அ. மு. இராமசாமி
இரா. குமார், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் கீழப்புளியங்குடியில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ரெ. இராமசாமிப் பிள்ளை. தாய் பராசக்தி.
தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்றவர் இரா.குமார். தினமலர், தினகரன் நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளை வகித்தவர். பத்திரிகை துறையில் 36 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
சிறந்த தமிழறிஞரான இவர், எளிய இனிய நடையில் எழுதுவதிலும் மேடைகளில் சுவைபட உரையாற்றுவதிலும் வல்லவர். சிறந்த கவிஞர்.
இது வரை 15 நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள ‘நடைமுறை இதழியல்’ நூல் பெரும் வரவேற்பை பெற்றது. பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இதழியல் மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பெரிய புராணம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றை புதுக்கவிதை நடையில் எழுதி வெளியிட்டுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திம் சிறந்த எழுத்தாளர் விருது, தருமையாதீனம் குருமகாசன்னிதானம் அவர்களால், ‘இறைத்தமிழ் வேந்தர்‘ பட்டம், புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் ‘ஆன்மீகச் சுடர்‘ பட்டம் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Rent Now