Home / eBooks / Athimalai Devan - Part 1
Athimalai Devan - Part 1 eBook Online

Athimalai Devan - Part 1 (அத்திமலைத் தேவன் - பாகம் 1)

About Athimalai Devan - Part 1 :

'அத்திமலைத்தேவன்' என்கிற இந்த சரித்திரப் புதினம் பிறந்ததற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. ஒரு சிறு வத்திக்குச்சியின் தீப்பொறி, ஒரு பெருங்காட்டினையே அழித்து விடும்! அப்படி ஒரு இரண்டெழுத்து நடிகையின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்வுதான் இந்த சரித்திர மர்மப் புதினம் தோன்றியதற்கே காரணம் என்றால், உங்களால் நம்ப முடியுமா?

விடியலில் கூவும் பறவையின் பெயர் கொண்ட படத்தில் அறிமுகமானவர் அந்த நடிகை. கிடுகிடுவென வளரத் தொடங்கினார்! ஒரு படத்தில், கோவில் ஒன்றில் அந்த நடிகை பாடி ஆடுவது போன்ற காட்சியை எடுக்கத் திட்டமிட்டார் இயக்குநர். அதற்காக காஞ்சி வரதராஜ சுவாமி கோவிலில் இருந்த "அனந்தசரஸ்” என்னும் குளத்தின் மண்டபத்தின் மீது அபிநயம் பிடிக்க வைத்து படம் பிடிக்க நினைத்தார்.

தற்செயலாக ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த ஒரு முதியவர் இதனைக் கண்டு அதிர்ந்து போனார். "வேண்டாம்! அதன் அடியில் அத்திவரதர் எழுந்தருளி இருக்கிறார். மிகவும் உக்கிரமான மூர்த்தி. அவர் மீது நடிகை நடனமாடுவது போன்று எடுக்க வேண்டாம்” என அந்த முதியவர் வேண்டிக் கேட்டுக்கொண்டார். அந்த முதியவரைப் பணம் பறிக்க வந்த பிச்சைக்காரனாக எண்ணிய படக்குழுவினர், அவரை விரட்டி விட்டனர்.

படம் வெளிவந்ததா இல்லையா என்பதே தெரியாதபடி, இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பல பிரச்சனைகள். எல்லாரையும் விட மிகவும் பாதிக்கப்பட்டவர், நடனமாடிய அந்த நடிகை.

அந்த நடிகையின் வலது காலில் தீராத வலி ஏற்பட்டு அதனால் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. ஆனால் வலது காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை டாக்டர்கள் இடதுகாலில் செய்து விட்டிருந்தனர்! நடிகையால் நடமாடவே முடியவில்லை. தேகத்தாலும், மனதாலும் மிகவும் நொந்து போய் விரக்தியின் உச்சக் கட்டத்தில் தனது வாழ்வையே முடித்துக் கொண்டார்.

கோவில் திருவிழாவுக்காகச் சென்ற போது, அன்றொருநாள் படப்பிடிப்பின் போது எச்சரிக்கை செய்த அந்த முதியவர் பார்க்க நேர்ந்தது. அவர் "பார்த்தியா...! நான்தான் சொன்னேன் இல்லே. 'அத்திவரதர் கிட்டே விளையாடாதீங்கன்னு! தன் காலால் அத்திவரதர் மேலே டான்ஸ் ஆடின அந்த பொண்ணுக்கு ரெண்டு காலும் போச்சு. தற்கொலையே பண்ணிக்கிட்டா.! அத்திவரதர் பல்லவ சாம்ராஜ்யத்தையே புரட்டிப் போட்டவர். சினிமாக்காரங்க நீங்க எம்மாத்திரம்?” - அவர் கேட்க, நான் திகைத்துப் போய் நின்றிருந்தேன்.

இது போதாதா எனக்கு! ---

அத்திவரதர் என்கிற காஞ்சி தேவராஜரைப் பற்றிய ஆய்வுகளில் இறங்கினேன். அனந்தசரஸ் குளத்தில் மறைந்திருக்கும் அத்தியூரானைப் பற்றிய தகவல்களைத் தேடித் திரட்டினேன். புராண காலம் தொடங்கி, நாளை வெளியே வரப்போகும் 2019 வரையிலான கால கட்டத்தில்தான் எத்தனை சரித்திரங்கள் இந்த கோவிலை சுற்றி நிகழ்ந்திருக்கின்றன. எத்தனை மர்மங்களை தன்னுள் தேக்கி வைத்திருக்கிறான், அத்தியூர் தேவராஜன்!

நாவலை எழுதும்போதே எனக்கு விசித்திர அனுபவங்கள். பல்லவ சாம்ராஜ்யம் மட்டுமல்ல! அத்திவரதனோடு அஸ்வத்தாமா, சாணக்கியன் தொடங்கி, நந்த சாம்ராஜ்யம், மௌரியர்கள், குப்தர்கள், சதவாகனர்கள், ஆதி பல்லவர்கள், பல்லவர்கள், களப்பிரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், கங்கர்கள், விஜயநகர மன்னவர்கள், கடம்பர்கள், கோல்கொண்டா நவாபுகள், பாமினி சுல்தான்கள், முகலாயர்கள், உடையார்கள், ராபர்ட் கிளைவ் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள் என்று பல சாம்ராஜ்யங்கள் காஞ்சியைக் கைப்பற்றியபோது, தனது கோவிலுக்குக் கைங்கர்யம் செய்தவர்களுக்கு வெகுமதி அளித்து, தனது கோவிலுக்கு தீங்கு இழைத்தவர்களுக்குத் தக்க தண்டனைகளைக் கொடுத்து, எல்லா சாம்ராஜ்யங்களையும் ஆட்டிப் படைத்திருக்கிறான், அத்திமலைத் தேவன். இந்த அத்திமலைத் தேவனைப் பற்றிய கதைதான் இது.

புராண காலம் தொடங்கி இன்றைய நாள் வரையிலான அத்தனை சாம்ராஜ்யங்களின் ஆட்சியிலும், நிகழ்ந்த மர்ம நிகழ்வுகள், போர்கள், சதிகள், கொலைகள், கொடுமைகள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து உங்களுக்கு அத்திமலைத்தேவனாகத் தந்திருக்கிறேன். இந்த நாவலைத் துவங்கும்போது நான்கு பாகங்கள் என்கிற எண்ணத்துடன்தான் எழுதத் துவங்கியுள்ளேன். இன்னும் நீண்டு விட்டால் அது என் தவறு அல்ல. அத்திவரதன் என் மூலமாக உங்களிடம் எல்லாவற்றையும் தெரிவிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கதை பல்லவ சாம்ராஜ்யத்தை பற்றி மட்டும் பேசப்போவதில்லை. அத்திவரதருடன் உறவாடிய அத்தனை சாம்ராஜ்யங்களைப் பற்றியும் பேசப் போகிறது. ஆக, மகதம், நந்தம், பல்லவம், சோழம், பாண்டியம், கடம்பம், கனகம், சாளுக்கியம், ஹொய்சலம், விஜயநகரம், முகலாயர், பாமினி சுல்தான்கள், மற்றும் கோல்கொண்டா நவாபுகள், உடையார்கள், ஆங்கிலேயர் என்று அனைவரைப் பற்றியும் பேசப்போகும் cocktail நாவல்தான், அத்திமலைத்தேவன்.

- 'காலச்சக்கரம்' நரசிம்மா.

About Kalachakram Narasimha :

டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.

குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.

காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை tanthehindu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்

Rent Now
Write A Review

Same Author Books