லா.ச.ரா. என்னும் இலக்கியவாதி இலக்கிய இதழ்களில் அதிகம் எழுதியதில்லை. வர்த்தக எழுத்தாளரல்லாத லா.ச.ரா. எழுதாத வர்த்தக இதழ்களே இல்லை. இதை முரண் என்று சொல்வதா? எல்லாருடனும் விரோதமின்றி ஒத்துப் போகும் குணம் என்று சொல்வதா? என்று தெரியவில்லை. இரு தரப்பு இதழாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
இவருக்கென்று எந்த எழுத்தாளர் கோஷ்டியும் கிடையாது. எந்த எழுத்தாளர் கோஷ்டியிலும் இவர் கிடையாது. இருந்தாலும் இவர் எழுத்தைக் குறை சொல்பவர்கள்கூட இவரைக் குறை சொல்ல மாட்டார்கள். காரணம், இவருடைய குணம், அன்பு, பழகும் விதம்.
உத்தியோகம், குடும்பம், எழுத்து என்கிற மூன்று தனித்தனிக் குதிரைகளில் (குதிரைகளை) ஒருங்கிணைத்(ந்)து சவாரி செய்து மூன்றிலுமே வெற்றிக் கம்பத்தை அடைந்தவர். நல்ல அனுபவஸ்தர். அவருடைய வயது 92 வருடங்கள். வங்கி உத்தியோகம் அனுபவம் 32 வருடங்கள், எழுத்தனுபவம் 75 வருடங்கள். அந்த அனுபவங்களைச் சேர்த்தால் மொத்தம் 199 வருட அனுபவம்! அனுபவத்தா(தி)ல் பழுத்த பழம்.
அந்த '199 வருட அனுபவங்களையும் அவர் முழுமையாக 'அப்பா'வாக வாழவே பயன்படுத்தினாரோ என்னும் எண்ணம் எனக்குண்டு.
புரியாத எழுத்தாளராக இருக்கலாம். ஆனால் எங்களுக்குப் புரிந்த அப்பா! என் சின்ன வயதில் கிருஷ்ணர் கதை சொல்லும் போது அவருக்கும் என் வயதுதான் இருக்கும். அவ்வளவு இறங்கி வருவார்.
இருபதுகளில் ஒருநாள் சொன்னார். 'கண்ணா! நீ, சுருட்டுப் பிடிக்கறதும் பிடிக்காததும் உன் இஷ்டம். யார் சொன்னாலும் யாரும் கேட்கப் போறதில்லை. அப்படிப் பிடிக்க ஆரம்பிச்சேன்னா முதல் புகையை என் மூஞ்சில விட்டுடு. ஊருக்கே இந்த விஷயம் தெரிஞ்சு கடைசியா தெரிஞ்சுண்டவன் உங்கப்பன்னு ஆக்கிடாதே. எந்தக் கெட்ட பழக்கத்தையும் அப்பாவுக்குப் பயந்துண்டு. பண்ணாம இருக்காதே. அப்படின்னா அப்பா இல்லாதபோது செய்வேள். அந்தக் கெட்ட விஷயத்துக்குப் பயந்து செய்யாமலிருந்தால் எப்பவுமே செய்ய மாட்டேள். இது என் அபிப்பிராயம். அப்புறம் உன் அபிப்பிராயம்' என்று விட்டு விடுவார். எங்கள் ஐந்து பேருக்கும் எந்தவிதக் கெட்ட பழக்கமுமே கிடையாது. 'எப்படிப்பா இப்படி எங்களை வளர்த்தே(?)ன்னு கேட்டதற்கு அவருடைய பதில், 'நான் எங்கேடா உங்களை வளர்த்தேன். நீங்களே சுபாவமா நல்லவாளா வளர்ந்துட்டேள். அது எனக்கு நல்லதாப் போச்சு!' என்று அதில் கூடப் பங்குக்கு வராமல் ஒதுங்கி விடுவார்.
'குழந்தைகளைச் சும்மா கண்காணிச்சுண்டே இருக்கக்கூடாது. குழந்தைகளாயிருந்தாலும் அவரவர்களுக்கு ஒரு சுதந்திரம் இருக்கு. பத்து மாசக் குழந்தையை நாம் கட்டியணைச்சுக் கொஞ்சினால் அது அதுலேருந்து விடுவிச்சுக்கற விடுதலையைத்தான் விரும்பும். உள்ளங்கைத் தண்ணீரை ரொம்ப ஜாக்கிரதையாயிருக்கணும்னு கையை மூடிண்டால் உள்ளதும் வழிஞ்சு போயிடும். அதுக்காகக் கண்டுக்காமலிருப்பதும் தப்பு.
ஒருநாள் திடீரென்று நினைத்துக் கொண்டாற் போல, 'கண்ணா! உங்கம்மா நான் எங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் போயிட்டாலும் இன்னொருத்தருக்குப் பயங்கர பாதிப்புத்தான்டா!'' என்றார்.
''ஏம்பா, அம்மா இல்லாட்டா நான், நான் இல்லாட்டா எம் பொண்டாட்டி, அவ இல்லாட்டா காயத்ரி, ஸ்ரீகாந்த். காப்பியோ தண்ணீரோ கொடுக்க மாட்டோமா?''
கொடுப்பேள்டா. கொடுப்பேள். நீங்கள்லாம் நல்ல பசங்கதான். காபி கேட்டா கொடுப்பேள். ஆனா, பொண்டாட்டிங்கறவ என் கூடவே 60 வருஷமாய் வாழ்ந்து, அனுபவிச்சு நான் மனசுல நெனைச்சாலே காபி இப்போ வேணும்போல இருக்குமேன்னு கொண்டு வந்து வைப்பாளேடா.''
"என்னப்பா கதை விடறே. ரெண்டு பேரும் தெனம் தெனம் சண்டை போட்டுக்கறேள்.''
''சரி. உன் பிரகாரமே வர்றேன். ரெண்டு பேருக்குமே வயசான இயலாமையில் கோபம் வர்றது. சண்டை போடறோம். ரெண்டுல ஒண்ணு போச்சுன்னா எங்க வயசுல சரி சமமா சண்டை போடறதுக்குக்கூட ஒருத்தர் இல்லாம போயிடுவோமேடா.'
இப்போது எனக்கும் வயது ஏற ஏற மனைவியின் அருமை புரிந்து கொண்டே வருகிறது.
அந்தப் பிரமிப்பில், திகைப்பில், ஆச்சர்யத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அப்பா எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார். "எனக்கு ரூப தரிசனம் வேண்டாம். நாம ஸ்மரணை போதும்.''
இதில் மட்டும் அப்பாவிலிருந்து நான் முரண்படுகிறேன். நான் எப்போதுமே ராமாமிர்த நாம ஸ்மரணை செய்து கொண்டுதானிருக்கிறேன். எனக்கு அது வேண்டாம். அப்பாவின் ரூப தரிசனம் எனக்கு வேண்டும். திரும்பத் திரும்ப அப்பாவின் ஸ்தூல ரூப தரிசனம் எனக்கு இனி எப்போதும் வேண்டும். கிடைக்குமா? யாராவது சொல்லுங்களேன். ப்ளீஸ்!
'நிறைய படி. எதைவேணுமானாலும் படி, ஆனால் படித்துக்கொண்டே இரு. தன்னாலேயே தேவையில்லாத தெல்லாம் உதிர்ந்துபோய் என்ன வேணுமோ அதை மட்டுமே படிப்பாய்' என்பார் என் தந்தையார். படித்தேன். படித்துக் கொண்டேயிருந்தேன். சொன்னது நடந்தது சொல்லாததும் நடந்து - நான் எழுத்தாளனாகி விட்டேன்.
முதல்கதை 'பாப்பா' அஸ்வினி இதழில் வெளிவந்தது. அமுதசுரபி, விகடன், குமுதம், தினமணிக்கதிர், சாவி, இதயம் பேசுகிறது, தாய் போன்ற எல்லா முன்னணி இதழ்களிலும் வெளிவந்திருக்கிறது - 84ல் எழுதுவது நின்றுபோனது. 23 வருடங்களுக்குப்பிறகு 2008ல் எழுதிய 'பாசம் ஒரு பாவ நதி' கதைக்கு இலக்கிய சிந்தனை பரிசு கிடைத்தது. கவிதை, பயணக்கட்டுரை, கதைகள், கேஸட் விமர்சனம், திரைப்பட விமர்சனம், புத்தக விமர்சனம், நேர்கோணல் என போய்க் கொண்டிருக்கிறது.
லா.ச.ரா போல எழுத வராவிட்டாலும், லா.ச.ராவின் மகன் என்பது ஒரு தகுதியாக இல்லாவிட்டாலும், லா.ச.ரா. போல பெயர், புகழ், விருது, அங்கீகாரம் பெறாவிட்டாலும்
- நான் -
லா.ச.ராவின்
அன்பு மகன்
- லா.ச.ரா.சப்தரிஷி
Rent Now