எனதருமை வாசக கண்மணிகளுக்கு வணக்கம்! வாழ்த்துகள், மீண்டும் ஒரு இனிய தருணத்தில் உங்களுடன் பேசுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மறுபடியும் நன்றியினை இங்கு பதிவு செய்கிறேன்.
கடந்த ஆண்டில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பு, ‘மனசெல்லாம் மாயா’ வெளியாகி உங்கள் மனதில் இடம் பிடித்தது. இந்த ஆண்டின் புதுவரவாக ‘பொம்மைச் சிறகுகள்’ சிறுகதைத் தொகுப்பு உங்கள் கரங்களில் தவழ்கிறது.
எழுதுவது ஒரு வரம் என்றால், அதை ஒரு புத்தகமாக பார்ப்பது இன்னும் ஒரு வரம். மலடி ஒரு தாயாவது போல சிறப்பான வரம். அதை இரண்டாம் முறை அடைய வைத்தது இறைவனின் பெருங்கருணை. பல்வேறு பணிச் சுமைகளுக்கு மத்தியில் இந்தக் கதைகளை படித்து, மிக அருமையான அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் திரைப்பட வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை வெளியிட்டு என்னை ஊக்குவித்த பத்திரிகைகளுக்கும் அதன் ஆசிரியர் பெருந்தகைகளுக்கும் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
எனது இரண்டாவது புத்தகத்திலும், உங்களின் அன்புரை இடம் பெற வேண்டும் என்றதும், தோழமையுடன் தன்னுரை பதித்த இனிய நண்பர் பத்திரிகையாளர், எழுத்தாளர் சபீதா ஜோசப் அவர்களுக்கும் நன்றி.
என்றும் அன்புடன், ஜே.செல்லம் ஜெரினா
சீர்காழியில் பிறந்து சென்னையில் வளர்ந்து கொங்குநாட்டு மருமகளாகி வாழ்வின் பெரும்பகுதியை இரு மகள்களோடு ஆந்திர மாநிலத் தலைநகரில் கழித்தாகி விட்டது.
மீண்டும் பேக் டூ பெவிலியன் என்று தமிழகம் வந்தபோதுதான் சாம்பல் பூத்துக்கிடந்த எழுத்தார்வம் கனல் பூக்க ஆரம்பித்தது.
2008 ல் என் முதல் சிறுகதை டி.வி.ஆர்சிறுகதைப்போட்டியில் தினமலர் வாரமலரில் தேர்வாகி வெளியாக... அந்த அங்கிகாரம் இன்னும், இன்னும் என்று என் எழுத்தோட்டத்தை விரைவு படுத்தியது...
தினமலர் வாரமலர், தினமணிக்கதிர், ராணி, ராணிமுத்து, அவள் விகடன், கல்கி மங்கையர் மலர், தேவி, க்ருஹஷோபா, நம்தோழி என்று என் படைப்புகள் பிரசுரமாகின.
2018..... மறக்கமுடியாத வருடம்!
கலைமகள் என்னை பரிசு கொடுத்து எழுத்துலக அங்கிகாரத்தை உறுதி செய்தது. ஆம்! அமரர் ராமரத்னம் குறுநாவல் போட்டியில் என் முதல் குறுநாவல் பரிசு பெற்றது. ..."கலைமகளின் "அருள் பார்வை கிட்டியது.
என்சிறுகதைத் தொகுப்பு இரு புத்தகங்களாகவும் வெளிவந்தது. இதோ... இன்று புஸ்தகா மூலம் உங்கள் கைகளிலும் தவழ்கின்றது.....
ஒரு வாசகியாகத் துவங்கிய என் எழுத்துப்பயணம் தொடர்கிறது வாசகர்களாகிய உங்களின் பேராதரவின் மூலமாக...
நன்றியும் பேரன்பும்
அன்புடன்
ஜே.செல்லம் ஜெரினா