சில மாணவர்களுக்கு பூகோளத்தில் கண்டம்.
தூந்திரப் பிரதேசம். ஊசியிலைக் காடுகள், பீடபூமி, வியாபாரக் காற்று, அட்ச, தீர்க்க பூமத்திய ரேகைகள் போன்ற பதப் பிரயோகங்கள் எலுமிச்சை ஊறுகாய் உடன் உறை குளிர்ந்த தயிர் சாதத்தை டிபன் பாக்ஸிலிருந்து மதிய உணவாக சாப்பிட்டு விட்டு, தூங்கு மூஞ்சி மரங்கள் சாமரம் வீசும் வேளையில் காதில் விழுந்தால் பூகோளத்தின் மேல் காதலா வரும்? தூக்கம்தான் வரும். ஆனால், பூகோள ஆசிரியருக்குக் கோள மயிலாக அதாவது கோல மயிலாக ரம்பை ரேஞ்சில் ஒரு குமரி இருந்தால்? கோணம் மாறி விடும் அல்லவா?
நகைச்சுவையை நம்முடன் கைகோர்த்து உலவி வரத் தயாராக இருக்கும் ஒரு துடிப்பான அழகிய இளம் பெண்ணாக பாவித்து பூலோகத்தில் நடை போட்டால் செயல்பாட்டில் ஒரு துள்ளல் வராதா? வரும் என்கிற நினைப்போடு எழுதப்படும் தமாஷா வரிகளின் அடுத்த தொகுப்பு இது.
தொடர்ந்து 325 வாரங்களாக அண்ணா நகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் வெளிவந்து கொண்டிருக்கும் தமாஷா வரிகள் பத்தியின் சமீபத்திய 36 கட்டுரைகளைத் தாங்கி வரும் இந்த நூல் நடப்பு பணவீக்க காலத்தில் அத்தி பூத்தாற் போல புன்னகை பூக்கும் பலரை அடிக்கடி சிரிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.
'ஆரம்பியுங்கள், தானே எழுத வரும்,' என்று ஆதியில் எனக்கு ஊக்கம் அளித்த அவ்வேடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன் அவர்களையும், நேரத்தில் முளைக்கும் அழகிய பூக்களைப் போலக் கட்டுரைகளுக்கு வேண்டிய படங்களை வரைந்து அளித்துக் கொண்டு இருக்கும் ஓவியர் நடனத்தையும், கட்டுரைகளைப் படித்துவிட்டு பாராட்டுதல்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் அன்பு வாசகர்களையும் நான் படித்த பூகோளத்தை மறந்தது போல் எளிதில் மறக்க முடியுமா?
- ஜே. எஸ். ராகவன்
1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.
வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.
தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..
Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.
தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!'
Rent Now