தமிழில் தொடர்ச்சியாக பிரபலங்களின் வாழ்க்கைக்கதைகளை 2005இல் நான் தினமும் வேலை முடிந்ததும் மாலையில் ஒரு வாழ்க்கைக்கதை வாங்கி இரவுணவுக்குள் படித்து முடித்து விடுவேன். ஒரு கட்டத்தில் எல்லா கதைகளும் ஒரே போல் இருந்ததால் நிறுத்தி விட்டேன். மணிரத்னத்தின் “குரு” வந்த சமயம் மாலைக் காட்சி போக இருந்தேன். அவசரமாய் மதியம் போய் “அம்பானி” வாழ்க்கைக்கதை வாங்கி தியேட்டர் போகும் வழியெல்லாம் படித்துக் கொண்டு போனேன். அதைப் போல் ஒரு சிறுமுயற்சி தான் இந்த நூல். ஒரு வரலாற்று நாயகனை ஒரு எளிய மனிதனின் அத்தனை கீழ்மைகள் தோல்விகளுடன், கிளுகிளுப்பு பரபரப்பில்லாமல், கொஞ்சம் உளவியல் மற்றும் விரிவான நேர்மையான தகவல்களுடன், சித்தரிப்பது தான் உத்தேசம்.
தக்கலை உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை என் கூட மாஹீன் என்றொரு நண்பன் படித்தான். எங்களூர் இந்து இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ் ஜாகாவில் காக்கி நிக்கர் பயிற்சி பெற்றால் பக்கத்தில் தக்கலையில் உள்ள பள்ளித்தெரு இஸ்லாமிய இளைஞர்கள் கராத்தே பயின்றார்கள். மாஹீன் உயரமாக ஒல்லியாக அமைதியாக இருப்பான். அவன் யாரிடமும் வம்புக்கு போக மாட்டான். யாரிடமும் இல்லாத முதிர்ச்சியும் அவனிடம் இருந்தது.
ஒருநாள் விளையாட்டு வகுப்பு. அவ்வருடம் எங்கள் வகுப்பில் இரண்டு உயரமான கறுப்பான மாணவர்கள் இணைந்தார்கள். ஜெபாவும் ராஜ்குமாரும். அவர்கள் வந்ததில் இருந்தே யாரிடமாவது வம்பு பண்ண அலைந்தார்கள். ஆனால் யாரும் பொருட்படுத்த இல்லை. கடைசியில் தங்கள் பராக்கிரமத்தை பிறரிடம் நிரூபிக்க தனிமையை போக்க ஒரு உத்தி கண்டார்கள். மாஹீனுடன் மோதுவது. அவன் திருப்பி அடித்தால் கூட அவர்களுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டு விடும். ஆனால் மாஹீன் அவர்களை தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டே வந்தான். அன்று கால்பந்தாட்டம் நடந்தது. எனக்கு கொஞ்சம் அருகே மாஹீன் பந்தை உதைத்துக் கொண்டு வந்தான். அவனை இவர்கள் இருவரும் சூழ்ந்து நின்று காலை இடறி விடப் பார்த்தார்கள். முதலில் சுதாரித்தான். தொடர்ந்து இடறினார்கள். தள்ளி விட்டார்கள். பிறகு நான் என் வாழ்நாளில் பார்த்திராத ஒன்றைப் பார்த்தேன். ரெண்டு அங்குலம் காற்றில் எம்பி சுழன்று தன் கால்களால் வெகு சுலபமாக வேகமாக நிதானமாக இருவரையும் முட்டியில் மிதித்தான். பிறகு ஒரே காலால் இருவரது கால் பாதங்களையும் சட்சட்டென்று மிதித்தான். அடிப்பதாகவே தெரியவில்லை. குழுவாய் பரதநாட்டியம் ஆடும் போது கால்கள் பின்னிக் கொண்டது போல் இருந்தது. சில நொடிகள் தாம். இருவரும் மாஹீனை விட்டு விலகி வகுப்பறையில் சென்று அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் முகத்தில் அப்படி ஒரு பதற்றமும் அதிர்ச்சியும் பார்த்தேன். மாஹீனின் காலாட்டத்தில் (footwork) என்னைக் கவர்ந்தது குறைவான நேரம், குறைவான ஆற்றல், ஆனால் வெகுவான பாதிப்பு.
மேலும் கராத்தே அல்லது குங் பூ என்பது ஒரு புராதான கலைவடிவம் அல்ல. அதற்கு நடைமுறை பயன் நிறைய உள்ளது என்பதை நேரில் கண்டேன். அதைப் பயின்றவர்களுக்கு உடல்சார்ந்த தன்னம்பிக்கை இருக்கும். இது தன்னிறைவாக மனதின் அமைதியாக வெளிப்படும்.
சிறுவயதில் இருந்து இன்று வரை தொடர்ந்து புரூஸ் லீ உள்ளிட்ட பல சண்டைக்கலை படங்களின் விசிறியாக இருந்து வந்திருக்கிறேன். ஆனாலும் புரூஸ் லீயின் வாழ்க்கையை எழுத நேர்ந்தது தற்செயலான ஒன்று தான். 15 வருடங்களுக்குப் பிறகு தற்காப்புக் கலை கற்க ஒரு ஆசானைத் தேடி சென்றேன். பிறகு அது சம்மந்தமாக படித்துக் கொண்டிருந்த போது புரூஸ் லீ மீண்டும் மனதை ஆட்கொண்டார்.
உடலை ஆதாரமாகக் கொண்டு உன்னத்தை நோக்கி செல்லும் விளையாட்டுக் கலைஞர்களிடம் எழுத்தாளர்களிடம் இல்லாத ஒரு நன்மையையும் நிஜத்தன்மையும் உள்ளது. தமது நன்மை என்பது தொப்புளுக்கு கீழ்ப் பகுதியில் இருப்பதாக சீனர்கள் நம்பினார்கள். அதனாலே அவர்களது தற்காப்புக் கலையில் சற்றே கால்களை வளைத்து நிற்கும் நிலையமைதி உள்ளது. இதன் வழி குறைவான புவியீர்ப்பு சக்திக்குள் உடல் வருகிறது. சமநிலை கூடுகிறது. மண்ணில் இருந்து மனிதன் தன்னை வேறுபடுத்திடக் கூடாது எனும் தத்துவத்தின் நிகழ்த்தலாகத் தான் சீனர்களின் மேற்சொன்ன நம்பிக்கையை கருதுகிறேன். லீயைப் போன்ற விளையாட்டுக் கலைஞர்கள் உடல் என்பது பூமியின் நீட்டிப்பு என நம்பினார்கள். கூடிய மட்டும் பூமியுடன் துண்டிக்கப்படாத உறவுடன் வாழ்ந்தார்கள். ஆனால் ஒருவர் நன்மையை வயிற்றில் இருந்து மேலே இதயத்தில் வைத்து பிறகு மெல்ல மெல்ல மேலே மூளைக்கு கொண்டு செல்லும் போது அது கசந்து போகிறது.
- ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் கடந்த பத்து வருடங்களாக உயிர்மை, தீராநதி, அம்ருதா, குமுதம், ஆனந்த விகடன், தி ஹிந்து, தினமணி, கல்கி உள்ளிட்ட தமிழ் இடைநிலை இதழ்களிலும் வெகுஜன இதழ்களிலும் எழுதி வருகிறார். இதுவரை மூன்று நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு, வாழ்க்கை சரிதை, ஒரு கவிதைத் தொகுப்பு, ஹைக்கூ கவிதைகளின் மொழியாக்க தொகுப்பு ஆகியன பிரசுரித்திருக்கிறார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014இல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016இல் பாஷா பரிஷத் விருதும் இவரது இலக்கிய பங்களிப்புக்காக வழங்கப்பட்டது. ஆர். அபிலாஷ் தற்போது பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணி புரிகிறார்.
விக்கிப்பீடியா பக்கம்: https://en.wikipedia.org/wiki/Abhilash_Chandran_R
Rent Now