Subra Balan
சிறியவர்களுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் கூட நீதியைச் சொல்கிற நல்ல கதைகள் எப்போதும் தேவைப்படுகின்றன. இதை முழுமையாக உணர்ந்த 'தினமலர்' குழுமத்தின் ‘காலைக் கதிர்' நாளிதழின் 'வாரக்கதிர்' இணைப்பில் இந்தக் கதைகளை எழுதும் வாய்ப்பை எனக்கு நல்கினார்கள். ஒவியர் சேகர் அவர்கள் வரைந்த அருமையான சித்திரங்களுடன் இவற்றை வாரா வாரம் அழகுற வெளியிட்டார்கள். இந்தக் கதைகள் 'வாரக்கதிர்' வாசகர்களின் வரவேற்பை யும் நிறையப் பெற்றன.
இவை பெரும்பாலும் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய புராண, இதிகாசக் கதைகள்தான், ஒன்றிரண்டு கதைகளை நானே புனைந்தும் எழுதினேன். இவற்றை 'ஆத்மேஸ்வரன்' என்னும் புனை பெயரில் அப்போது எழுதினேன். இப்போது என்னுடைய பெயரிலேயே திருவரசு புத்தக நிலையத்தார் நூலாக வெளியிடுகிறார்கள்.
இந்தக் கதைகளை வெளியிட்டமைக்கும், இவை 'வாரக்கதிர்' இதழில் வெளியானபோது இடம்பெற்ற ஓவியர் சேகரின் சித்திரங்களை, இந்த நூலில் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தமைக்கும் 'தினமலர்' நிர்வாகத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க அன்புடன்
சுப்ர. பாலன்.
திருகோகர்ணம் சுப்ரமணிய அய்யர் பாலசுப்ரமணியன், எழுத்துப் பணியில் ஈடுபட்ட எழுபதுகளில் 'சுப்ர.பாலன்' ஆனார். கலசைக்கிழார், யெஸ்பால், ஆத்மேஸ்வரன் என்ற பெயர்களிலும் கல்கி, அமுதசுரபி., தீபம் , கோபுரதரிசனம், மங்கையர் மலர் போன்ற இதழ்களில் அவ்வப்போது எழுதிவருகிறார். சிறுகதைகள், கவிதைகள், பயணக்கட்டுரைகள், அறிவியல். மருத்துவம், ஆன்மிகம், நேர்காணல்கள் என்று பல துறைகளிலும்.. மேனகா காந்தி, சுதா மூர்த்தி, ஆடிட்டர் நாராயணசாமி போன்றோரின் நூல்களைத்தமிழாக்கம் செய்துள்ளார். மகாகவி காளிதாஸரிடம் ஈடுபாடு. மேகசந்தேச விளக்கமும், சூரியனை தரிசித்து தினமும் பதிவிடுகிற சிந்தனைகளும் அடுத்து வெளியாக உள்ளன. அமரர் கல்கியின் நூல் வடிவம் பெறாமலிருந்த பல எழுத்துக்களையும் தேடித்தொகுத்து வெளியிட்டு வருகிறார். அண்மையில் எண்பது கடந்துள்ளார்.
விண்வெளி அறிவியலில் நீண்டகால ஆர்வம். இவருடைய 'மத்தாப்பூ' சிறுவர் பாடல் தொகுப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசுபெற்றது.