அனுமன் இலக்கணம்
அமைதி, நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை, தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல், சரணாகதி பக்தி என்று பல குணநலன்களைக் கொண்டவன் அனுமன். ‘தன்னைக் காத்துக் கொள்பவன் உண்மையான பலசாலி அல்ல, பிறரையும் காக்க முன்வருபவனே சரியான, உண்மையான பலசாலி’ என்ற இலக்கணத்துக்கு விளக்கமாகத் திகழ்ந்தவன்.
ராமாயணக் கதாபாத்திரங்களிலேயே ராமனுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படுபவர் என்றால், அனுமனைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் ராமாயணக் காதையில் அனாவசியமாக, அதிகமாகப் பேசாத கதாபாத்திரமும் அனுமன்தான். அதனாலேயே கம்பர் அனுமனை ‘சொல்லின் செல்வன்’ என்று புகழ்கிறார். பேசாமலிருப்பதும் ஒரு நற்பண்பு என்றால், பேசும் ஒவ்வொரு சொல்லும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்று சிந்தித்துப் பேசுவதும் ஒரு கலைதான். இந்தவகையில் அனுமனைப் போற்றலாம். உடன் இயங்கும் கதாபாத்திரங்களின் மனோநிலையை உணர்ந்து, அதற்கேற்ப வார்த்தைகளை உச்சரிப்பதில் வல்லவன் அனுமன்.
அசோகவனத்தில் சீதையைக் கண்டபோது, ‘ராம், ராம், ஸ்ரீராம்’ என்று சொல்லித்தான் அவள் முன் அவன் தோன்றினான். சீதையைக் கண்டு, அவளுக்கு ஆறுதல் அளித்துவிட்டு, ராமனை வந்தடைந்த அவன், ‘கண்டேன் சீதையை’ என்று சொல்லித்தான் அதுவரை பதைபதைப்புடன் தவித்துக் கொண்டிருந்த ராமனின் மனதுக்கு உடனடி மருந்திட்டுத் தேற்றினான்.
சுக்ரீவனிடம் ராமனைப் பற்றிச் சொல்லும்போதும் சரி, சரணாகதியென வந்த விபீஷணனைப் பற்றி ராமனிடம் எடுத்துச் சொல்லும்போதும் சரி, நல்ல பேச்சின் இலக்கணத்தை மிகச் சரியாக அனுசரித்தவன் அனுமன். அமைதியான மனதில் நிதானமான எண்ணம் தோன்றும், தீர்க்கமான சொல் பிறக்கும், ஆக்கபூர்வமான செயல் நிகழும். – இந்த உண்மைக்குச் சரியான உதாரணம், அனுமன்.
அதேசமயம் நியாயமான தருணங்களில், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில், தன் முழு ஆற்றலைக் காட்ட அனுமன் தயங்கியதேயில்லை. அப்போது அவன் ஆக்ரோஷம் கொண்டான் என்றாலும், அதன் விளைவுகளாகத் தீயன மட்டுமே அழிவதாகவும், அங்கே நிலவக்கூடிய நல்லவை காக்கப்படுவதாகவும் மட்டுமே இருந்திருக்கின்றன.
தற்போதைய மனித வாழ்க்கைக்கு ‘அனுமன்’ என்ற வாழ்க்கை இலக்கணம், ஓர் அத்தியாவசியத் தேவை!
-பிரபுசங்கர்
அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.
டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.
சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.
Rent Now