Home / eBooks / Chuttigale, Koyilukku Pogalama?
Chuttigale, Koyilukku Pogalama? eBook Online

Chuttigale, Koyilukku Pogalama? (சுட்டிகளே, கோயிலுக்குப் போகலாமா?)

About Chuttigale, Koyilukku Pogalama? :

கோயிலுக்கு ஏன் போகவேண்டும், பொதுவாக கோயிலுக்குள் இருக்கும் சந்நதிகள், அங்கிருக்கும் கடவுளர்கள், அவர்களுடைய தாத்பர்யங்கள், சிறுவர்களின் கேள்விகளுக்கு, தாத்தா பதில் சொல்லும் வகையில் அமைந்த புத்தகம். பெரியவர்களுடைய சில சந்தேகங்களுக்கும் தெளிவு பெறலாம்.

கோயிலுக்குள் போவதற்கு முன்னால்......

கோயில் இல்லா ஊரே இப்போது எதுவும் இல்லை என்றே சொல்லலாம். பக்தர்களின் எண்ணிக்கையும் இப்போது கோயில்களில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆன்மிக விஷயங்களைப் பற்றி பல பெரியவர்கள் வழி வழியாகத் தமக்குத் தெரிந்த தகவல்களை அடுத்த தலைமுறையினருக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். புத்தகங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, இன்டர்நெட் போன்ற பலவகை தகவல் தொடர்பு சாதனங்கள் பிற எல்லா விஷயங்களையும் தெளிவாக விளக்குவதுபோல ஆன்மிக விஷயங்களையும் விரிவாகவே அலசுகின்றன.

புராணம் என்பது நமக்கெல்லாம் முந்தைய பல நூறு ஆண்டகளுக்கு முன்பு நடந்திருக்கக் கூடிய சம்பவங்களைப் பற்றிய வர்ணனைதான். ஆனால், பெரும்பாலும் வாய்வழியாகவே இந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டு வந்திருப்பதால், ஒவ்வொருவரும் தாம் கேள்விப்படட அந்தத் தகவல்களை அடுத்தவருக்குத் தெரிவிக்கும்போது தம் ஊகங்களுடனும், அந்தந்த காலத்திற்கு ஏற்ற முறையில் மாறுதல்களுடனும் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் பொதுவாக, இப்படிச் சொல்லப்பட்டவையெல்லாம் ஆக்கபூர்வமானதாக, தனிமனித மன வளர்ச்சிக்காக, பொதுவான சமுதாய முன்னேற்றத்துகாகவே உதவின.

இறைவன் என்ற பரம்பொருளின் சக்தி, இயற்கையாகவே இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இந்த சமூகத்தில் ஓர் அங்கமாகப் பிறந்திருக்கும் நாம், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இந்த சமுதாயத்திடமிருந்தான் பெறுகிறோம். உணவு, இருப்பிடம், படிப்பு, வேலை, திருமணம், குடும்பம், மருத்துவம், போக்குவரத்து மற்றும் பிற வசதிகள் என்று எல்லாவற்றையும் நாம் சமுதாயத்திடமிருந்துதான் பெறுகிறோம். தனி மனிதனாக நம்மால் இதையெல்லாம் சாதிக்கவே முடியாது. ஒவ்வொருவரும், எதற்காகவாவது யாரையாவது சார்ந்திருக்கவேண்டியது அவசியமாகிறது. இப்படி நம்முடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சமுதாயத்திற்கு நாம் பிரதி உபகாரமாக எதையாவது செய்கிறோம்.- அதாவது நமக்குக் கிடைக்கும் வசதிகள் பிறருக்கும கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், நாம் ஏதாவது ஒரு வகையில் பணமாகவோ, பொருளாகவோ, உடல் உழைப்பாகவோ கொடுக்கிறோம். இது ஒரு வகையில் நம் சமுதாயத்துக்கு நாம் காட்டும் நன்றி உணர்வின் வெளிப்பாடுதான்.

அதே போலதான் கடவுளும். நமக்குப் பிறவி கொடுத்து, உயிர் கொடுத்து, உடல் கொடுத்து, இந்த சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக வாழ வழி செய்து கொடுத்த அந்த கடவுளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா? அந்த நன்றி வெளிக்காட்டுதலுக்குப் பெயர்தான் பக்தி செலுத்துதல். இந்து சமுதாயத்தைப் பொறுத்தவரை நாம் நம்முடைய எண்ணத்திற்கு ஏற்ப, நம் மனநிலைக்கு ஏற்ப, நம வசதிக்கேற்ப அந்த பக்தியை வெளியிட முடிகிறது; அதற்குப் பல சலுகைகளும் உண்டு. ஒருவரைப்போல மற்றவர் என்றில்லாமல், ஒவ்வொருவருமே தனித்தனி நடைமுறைகளுடன் இறைவனுக்கு பக்தி செலுத்துவது சாத்தியமாகிறது; எந்த வகையிலும் நம் நன்றியைக் காணிக்கையாக்க முடிகிறது.

அந்த நன்றி அறிவிப்பில் ஒன்றுதான் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது. அப்படிப்பட்ட ஒரு பொதுவான சமுதாய அமைப்பாகத் திகழும் கோயில், அதனுள் இருக்கும் சுவாமி சந்நதிகள், கோயிலில் மேற்கொள்ளவேண்டிய சில நடைமுறைகள் என்று பல விஷயங்களை, இந்தப் புத்தகம் உங்களுக்குத் தருகிறது. கோயில் பற்றிய முழுமையான ஒரு புத்தகமாக இதைக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஏற்கெனவே சொன்னபடி ஒவ்வொரு பக்தரும் தத்தமது இசைவுக்கேற்றபடி பக்தி செலுத்தும் நடைமுறையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அத்தகைய பக்தி நடைமுறைகள் அனைத்தையும் இடம்பெறச் செய்ய முடியாவிட்டாலும், ஒரு பொதுவான, கோயில் அறிமுக தகவல்களுடன் கூடிய புத்தகமாக இதனைக் கருதலாம்.

குறிப்பாக சிறு பிள்ளைகள் ஆன்மிக விஷயங்களில் பல தகவல்களை அறிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் கூறும் புத்தகம் இது என்றும் சொல்லலாம்.

About Prabhu Shankar :

அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.

டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.

சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.

Rent Now
Write A Review

Same Author Books