நாம் வாழும் இடத்தின் சிறப்புகள், மற்றும் பிற நகரங்களின் வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்த இடங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், அருங்காட்சியகங்கள், நாட்டுத்தலைவர்களின் நினைவிடங்கள் நிறைந்த சிறப்புமிக்க இடங்களைப் பற்றி நேரில் கண்டு அறியும் வாய்ப்பு பலருக்கும் கிடைப்பது அருமை.
தஞ்சை மாவட்டத்தில் பிறந்த ஓர் இளைஞர், தான் பிறந்த ஊரைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் நன்கு அறிந்தவர், உலகிலேயே நல்லாட்சி செலுத்திய சோவியத் ரஷ்யாவைப் பற்றியும் நன்கு அறிந்தவர், உடன் படித்த நண்பர்கள் ஆன்றோர்கள் வாயிலாக மார்க்சியம் பற்றிய தெளிவு பெற்று அக்கொள்கையைப் போற்றித் தாமும் கடைப்பிடித்தவர், கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஜார் மன்னனை வீழ்த்தி 1917-க்குப் பின் லெனின் பொறுப்பேற்று, நாடு பல துறைகளிலும் முன்னேறக்காரணமான அவரின் ஆட்சியில் நிகழ்ந்த வியத்தகு சாதனைகளையெல்லாம் தன் மனத்திரையில் பதிவு செய்து கொண்டு வந்தவர் என்றும் நல்லொழுக்கத்திற்கும் நற்பண்புகளுக்கும் நிலைக்களனானவர், ஆசிரியராகவும் பணியாற்றியவர். லெனினுக்குப் பின்னராவது சென்று, அந்நாட்டின் சிறப்புக்களை நேரில் கண்டும் லெனினின் நினைவிடத்தைப் பார்க்கவும் திட்டமிட்டு, ரஷ்யாவில் பணிபுரியும் தன் நண்பரின் ஒத்துழைப்போடு தன் மகனையும் அழைத்துக் கொண்டு 2010-இல் தன் சொந்த செலவில் சோவியத் பயணம் மேற்கொண்டவர் யாராக இருக்கக்கூடும்? உங்களால் ஊகிக்க முடிகிறதா?
லெனின் ஆட்சிக்காலம் தொடங்கி, தற்காலம் வரை நாம் படித்தும், கேட்டும் இராத சோவியத் குறித்த செய்திகளை, திரைப்பட நடிகர் ராஜேஷ் அவர்கள் 'கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா' என்று ஒரு தொகுப்பு நூலைச் சுவைபட எழுதியுள்ளார். 1917-க்குப்பின் 75 ஆண்டுகள் சோவியத் நாடு உலகிலேயே முதல் வல்லரசு நாடாகத் திகழ்ந்ததற்கு லெனினே காரணம் என்று உறுதிபடக் கூறுகிறார். அத்தகைய சாதனையாளரின் நினைவிடத்தையாவது பார்த்தாக வேண்டும் என்ற மன உறுதியுடையவராக இருந்துள்ளார். தன்னுடைய சொந்த செலவிலேயே பயணத்தை மேற்கொண்டார் என்பதிலிருந்து லெனினிடம் அவருக்கிருந்த ஆழ்ந்த பற்றைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.
பயணத்தின் முன் ஏற்பாடுகள், பீட்டர்ஸ்பர்க், துபாய் ஆகிய இடங்களில் தங்கியிருந்தபோது பெற்ற அனுபவங்கள், உண்ட உணவுவகைகள் குறித்தும், மாஸ்கோவில் மொழிப்பிரச்சினை, பொருட்காட்சி சாலையின் சிறப்பு குறித்தும், லெனின் உடல் படுத்த நிலையில் கண்ணாடிப்பெட்டியில் பொருத்தியுள்ள சமாதியைக் காண வருவோர்க்கான கட்டுப்பாடுகள் குறித்தும் வியப்பு மேலிட விவரித்துள்ளார்.
மாஸ்கோவில் ரயில் பயணங்களிலும் பிற இடங்களிலும் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்கின்றனர். கார்களைப் பயன்படுத்துவோர் அதிகம். ஆதலால் காலையும், மாலையும் போக்குவரத்து நெரிசல் சகஜம். மக்களின் தோற்றம், நடை உடை பாவனையில் ஒற்றுமையே காணப்படுகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்தும் அரசாங்கமே வழங்கியது என்பதை அறிவிப்பதோடு 1991-க்குப்பின் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்ததால் நாடு அடைந்துள்ள சீர்கேடுகளையும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் எண்ணிக்கையில் பெண்களே மிகுதி, 2-ஆம் உலகப் போரில் எண்ணற்ற ஆண்கள் – வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பெண்கள் வேலைக்குச் செல்வது கட்டாயம், ஆடம்பரப்பிரியரும்கூட. விற்பனை செய்யப்படும் எல்லாப் பொருள்களுமே விலை மிகுதியாம். மக்கள் விளையாட்டுகளிலும் ஓட்டப்பந்தயங்களிலுமே பெருவிருப்போடு பங்குகொள்கின்றனர்.
நூலாசிரியர் நடிகர் திரு.ராஜேஷ் அவர்கள், தான் வெளியிடும் பயணக் குறிப்புகள் வாசகர் மனதில் நன்கு பதித்து நினைவில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்தால் எழுதப்பட்ட இந்த நூல் ஒரு சிறந்த ஆவணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
நூலின் இறுதியில் வாசகர்கள் நினைவில் நிறுத்துவதற்கு ஏற்றவண்ணம் அமைத்துள்ள 'நினைவுக் குறிப்புகளின்' பயன் அறிந்து யாவரும் போற்றுவர்.
'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற ஆன்றோர் வாக்குக்கு இணங்க எழுதப்பட்ட இந்நூல் சோவியத் குறித்த சிறப்புக்களையும், முந்தைய இன்றைய நிலைமையை அறியவும் அரிய வாய்ப்பினை நல்கியுள்ளது. வாசகருக்கு இலக்கிய விருந்தைப் படைத்த ராஜேஷ் அவர்களுக்கு நன்றி
திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். கன்னிப்பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை , ஆலய தீபம், சிறை, மக்கள் என் பக்கம், நிலவே மலரே, மகாநதி, சத்யா, ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
சிறந்த உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்துள்ள இந்த நூல் தமிழ் சினிமாவில் சாதனை புரியும் எண்ணம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு உத்வேகம் ஊட்டக்கூடியது.
Rent Now