Home / eBooks / Dalit Ilakkiya Arasiyal…
Dalit Ilakkiya Arasiyal… eBook Online

Dalit Ilakkiya Arasiyal… (தலித் இலக்கிய அரசியல்...)

About Dalit Ilakkiya Arasiyal… :

மீறல்களுக்குள்ளான தலைமுறை சோகம்

தலித் இலக்கியத்தின் செயல்பாடும் அதன் வளர்ச்சியும் எதிர்பார்தது போலவே தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியச் சூழலில் கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் இன்னும் கூடுதலாய்க் கவனம் பெற்றிருக்கிறது.

இத்தகைய வளர்ச்சிக்கானப் பாதையில் சிவகாமி, இரவிக்குமார். புனிதப் பாண்டியன், கிறித்துதாசு காந்தி, இந்திரன், ராஜ்கவுதமன்... என ஒரு நீண்ட பட்டியலை நாம் தரமுடியும். இவர்களோடு நூற்றுக்கனாக்கான தலித் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் இப்போது தலித் இலக்கியத்தை தலித்துக்களுக்கான ஆயுதமாய்க் கையிலெடுத்திருக்கிறார்கள். தலித் ஆர்வலர்களும் தலித் ஆதரவாளர்களும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். அது அவரவர்களின் வாழ்வின் இலட்சியமாக மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக ரீதியான முன்னேற்றம் மற்றும் நாட்டின் அனைத்து பொருளாதார, அரசியல் நிலைகளில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் என்பதை உள்ளடக்கியதாக இத்தகைய எழுச்சிக்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட மக்களுக்குச் சென்று சேர்கிறதோ இல்லையோ அது அறிவிக்கப்பட்டதும் ஓரளவேணும் பயனடைய ஒரு தலைமுறையாவது நாம் காத்திருக்க வேண்டிய நிலை இங்குவுள்ளது. மாறாக அரசு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு சலுகையை அறிவித்தவுடனே சாதி அமைப்பிலான மேல்சாதி ஆதிக்கப் பற்றுடையவர்கள் வழக்கம் போல் ‘தலித்துக்கள் சலுகைகள் பெற்று சீக்கிரம் பிற சாதியினரைவிட முன்னேறி விடுவார்கள்' எனும் வறட்டுப் புலம்பல்களை முன் வைப்பதை நாம் பார்க்க முடிகிறது.

நிகழ்வில் அது சாத்தியமா?

தலித் மக்களுக்கான அரசின் பல்வேறு சலுகைகள் முழுவதும் தலித்துக்களால் அனுபவிக்க முடிவதில்லை என்பதுதான் உண்மை. தலித்துக்களின் பெயரால் பலர் அரசின் திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் பெறுவதையும் தலித்துக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட குறைந்தபட்ச நிதி ஒதுக்கீடுகள் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த இயலாமல் திரும்பவும் மத்திய அரசிற்கே திருப்பப்படுவதையும் புள்ளி விவரங்களாக நமக்குக் கிடைக்கின்றன.

“குந்த குடிசையின்றி
கூழ்குடிக்க வழியுமின்றி
பாழுக்குழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா”

எனும் தோழமை வரிகளுக்கேற்ப உண்ண உணவின்றி வாழ வழியின்றி உழலும் தலித் மக்களை குதிரை வளர்க்கவும், ஒட்டகம் வளர்க்கவும் ஊக்கம் தரும் திட்டங்கள் பல வந்து கொண்டிருப்பதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம்.

பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களிடம் மட்டும் இல்லை. பிற உயர் சாதியினர் தொடங்கி இன்று தலித் மக்கள் வரை ஊடுருவத் தொடங்கி இருக்கின்றன. பார்ப்பனியத்தைவிட தலித் பார்ப்பனியம் என்பது கொடியதும் மிகக் கொடூரமானதுமாகும். தன் கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்திக் கொள்கிற நிலையை தலித் மக்கள் ஒரு போதும் இனி அனுமதிக்க மாட்டார்கள்.

தலித்துக்களின் அறிவுப் பூர்வமான வளர்ச்சி என்பது ஒரு சிலரிடம், தலித்துக்கான விடுதலையை மையப்படுத்தாமல் சொந்த சாதிக்கு துரோகம் செய்வதோடல்லாமல் சாதியில் பிறந்ததே ஒரு தீட்டுப்பட்ட சம்பவம் போல் எண்ணத் தொடங்கியிருப்பது வெட்கப்பட வேண்டியவையாகும்.

இவற்றால் தலித்தியம் தோற்பதில்லை;
இவர்களை மட்டும் நம்பி இல்லை தலித்தியம்.

தலித்தியம் பேசுவது மார்க்சிய விஞ்ஞானத்தின் அடிப்படையைப் பேசுவதாகும். பரந்துபட்ட மக்கள் ஒன்றிணைவதை இலட்சியமாகக் கொண்டு தலித் மக்கள் ஒருங்கிணைவதும் அரசியல் பொருளாதார சுரண்டல்களிலிருந்து விடுதலை பெறத் துடிப்பதுமாகும். இவற்றின் இலக்கிய அரசியலும் இவ்வாறாகத்தான் இருக்கும்.

இத்தகைய தலித் அரசியல் போக்கினோடேதான் தலித் இலக்கியம் இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகையப் புரிதல்களோடுதான் இந்நூலின் பல கட்டுரைகள் வெவ்வேறு இடத்திலும் வெவ்வேறு தளத்திலும் வாசிக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது. தலித் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் மட்டுமின்றி பிற கட்டுரைகள், மதிப்புரைகள், விமர்சனங்கள் எனவும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நூலாக்கம் சிறப்புற வெளியிட உதவிய சென்னை திரு. மு. நடராஜசுந்தரம் அவர்கட்கும், தொகுப்பின் கட்டுரைகள் வெளியான இதழ்களுக்கும், சிநேகமாய் நின்று எனது படைப்பை அணுகும் நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் மிகுந்த குடும்ப சிரமத்திற்கிடையே எழுதவும், இயங்கவும், நூலாக்கவும் அனுமதித்த துணைவியார் அ. விசயலட்சுமி மற்றும் குழந்தைகள் அ.வி. அஜிதா பாரதி, அ.வி. சூரியதீபன், அ.வி. சாருமதி ஆகியோருக்கும் படித்துவிட்டுத் தோழமையோடுத் தொடர இருக்கும் உங்களுக்கும் நன்றிகள் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

- விழி.பா. இதயவேந்தன்

About Vizhi Pa. Idhayaventhan :

விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.

சென்னை சாகித்ய அகாடமியில் கதை, வாசிப்பு மற்றும் தமிழில் நவீன சிறுகதைகள் தொகுப்பில் கதை இடம் பெற்றுள்ளது. புது டெல்லி மற்றும் சாகித்ய அகாடமியின் இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரள ஜனநாயகம் மாத இதழில் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகளில் ஆறு இளம் முனைவர் (M. Phil.,) பட்டத்திற்க்கும், ஒருவர் முனைவர் (Ph.D.,) ஆய்வும் மேற்கொண்டு முடித்துள்ளனர். சென்னையிலுள்ள 'தலித் முரசு' பத்திரிக்கையில் இணை ஆசிரியராகவும் உள்ளார்.

இவரைப் பற்றி பழ மலாய் அவர்கள் எழுதி உள்ள குறிப்பு:

விழுப்புரத்தில், அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர், அவர் களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலி யாகிப் போகாமல், தங்கள் இருப்பை, மன சாட்சிக்குத் துரோகம் செய்யாமல், எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில் தான், இவர், நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கிறார், வீதி நாடகங்களில் நடிக்கிறார், செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார், கவிதை, கதை, நாவல் - என்று வரைகிறார்.

அனுபவ மண்ணில் வேர்பாய்ச்சி, அழகி யல் வானில் கிளை பரப்புவதாலேயே இதய வேந்தனுடைய எழுத்துக்களை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

- பேராசிரியர் பழ மலாய்

Rent Now
Write A Review

Same Author Books