Home / eBooks / Dalit Kalai, Ilakkiyam...
Dalit Kalai, Ilakkiyam... eBook Online

Dalit Kalai, Ilakkiyam... (தலித் கலை, இலக்கியம்...)

About Dalit Kalai, Ilakkiyam... :

உலகளவில் இலக்கியத்தின் பங்கு என்பது சமூகத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நாடு, மொழி, இனம் பல்வேறாக இருந்தாலும் இலக்கியம் அதற்கே உரிய தனித்தன்மைகளோடு வெளிவந்து கொண்டிருக்கிறது.

இன்றயக் காலக்கட்டத்தில் இயங்குகிற படைப்பாளிகளிடம் ஒரு உன்னதத் தேடலும் கலை இலக்கியங்களின் அயராத முயற்சியில் ஒரு தொடர்ச்சியான சமூகப் பயன்பாட்டையும் நாம் இலக்கியத்தின் வாயிலாக இருப்பதைக் காணலாம். அத்தகையதொரு தீர்வுக்கான ஒரு பயிற்சிக் களமாய் இலக்கியம் இருப்பதையும் அவை இந்த சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாயும் நான் உணர்ந்துள்ளதின் வெளிப்பாடுகள் தாம் இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

இவற்றில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளின் தொகுப்புக்களாகவும் ஒட்டுமொத்த அனுபவங்களின் சிறு வெளிப்பாடாகவும் ஏற்றுக்கொண்ட அரசியிலின் சாயலாகவும் உள்ளதாக நான் உணர்கிறேன்.

திறனாய்வுக் கட்டுரைகள், தலித்தியம் மட்டுமின்றி, மதிப்புரைகள், விமர்சனங்கள், நேர்க்காணல்கள், கடிதங்கள்... என சேர்க்கப்பட்டுள்ளது. எழுத்தையும் ஓர் ஆயுதமாகக் கொண்டு ஆயுத எழுத்தாக இலக்கியத்தில் பதிக்கப்பட வேண்டும் என்கிற எனது நோக்கத்தின் வெளியீடாகவும் இத்தொகுப்பைச் சொல்லலாம். அதற்காக சமூக நோக்கங் கொண்ட பல்வேறு மக்கள் படைப்பாளிகளும் இலக்கியப் படைப்பாளிகளும் உதவியிருக்கிறார்கள். அரங்குகளில் என்னோடு விவாதித்தும் விமர்சித்தும் கருத்துக்களில் ஒன்று பட்டும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் 'இலக்கியத்தின் இலக்கு' உட்பட சில கட்டுரைகள் தாமரையிலும் இந்தியா டு டேயிலும் வெளிவந்தது. இரண்டாம் பாகத்தில் புதிய கோடாங்கி, மீண்டும் அறிவு வழி உட்பட பல இதழ்களில் வெளிவந்தது. மூன்றாவதாக நூல் மதிப்புரைகளில் ஒரு சில மட்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. கவிஞர் பழமலயின் 'இரவுகள் அழகு’ என்னும் கவிதை நூலுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு கிடைத்தது கடந்த 23 ஆண்டுகாலம் அவரோடு இணைந்து கலை, இலக்கிய, அரசியல், பண்பாடு நடவடிக்கைகளில் பங்கு பெற்று வருவதின் குறியீடாகவும் இன்னும் சொல்லப்போனால் பெருமையாகவும் கருதுகிறேன்.

நான்காவதாக உள்ளவற்றில் 'கல்யாணி கையால் போட்ட விதை' என்பது என் சுய அடையாளமாகும். அத்தோடு பேராசிரியர் பழமலய் அவர்களோடு நானும் கவிஞர் இந்திரனும் பங்குபெற்ற ஒரிசா - கலைப் பயண அனுபவம் புதுமையானது மட்டுமின்றி, வித்தியாசமானதுங்கூட. சினிமா குறித்தான ஒன்றிரண்டு எனது பார்வையும் இவற்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய எழுத்தாளர்களுடன் அனுபவப் பகிர்வு என்பது வேறு எவர்க்கும் கிடைக்காத வாய்ப்பாகக் கருதினேன். நூறு கருத்துக்கள் மோத குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைக்கானத் தீர்வாய் கருத்தரங்கு இருந்ததை அன்றைக்கே உணர முடிந்தது.

கடைசியாக கி. ராஜநாராயணன், கோவை ஞானி, பாவண்ணன் ஆகியோரின் நேர்க்காணல்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அனுபவப் பதிவுகள் எனவும் சில இடம் பெற்றுள்ளது.

இலக்கிய உலகில் உள்ள பல்வேறு இலக்கியப் போக்குகளும் நிகழ்வுகளும் அவ்வந்த காலத்தின் குறியீடாகவும் அதன் வெளிப் பாடாகவும் ஒட்டுமொத்தமாக இல்லாவிட்டாலுங்கூட ஒரு சிலவாவது இவற்றில் கட்டுரைகளாக எழுதி வெளிவந்துள்ளது.

சிறுகதைகளை மட்டுமே குறியாக எழுதி வந்த நான் பல மார்க்சிய புத்தங்களையும் மார்க்சிய வாதிகளின் ஆய்வு நூல்களையும் கலை இலக்கிய நூல்களையும் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பதின் விளைவாகக் கட்டுரைகள், கவிதைகள்... என எழுத நேர்ந்தது. எனது பன்னிரெண்டாவது புத்தகமான இது எனது இரண்டாவது கட்டுரை நூலாகும்.

இத்தொகுப்பு வெளிவருவதற்கு முன்பும் வெளியாவதற்கும் பலரும் உதவியிருக்கிறார்கள். முனைவர் பத்மாவதி விவேகானந்தன் பங்கு பெற்ற பல கருத்தரங்கங்களில் நானும் பங்கு பெற்றுள்ளதோடு இத்தொகுப்பு வெளிவர பெரிதும் அவர் ஊக்கப் படுத்தியிருக்கிறார்.

இனி நீங்கள் எழுதுங்கள்.
விழி. பா. இதயவேந்தன்

About Vizhi Pa. Idhayaventhan :

விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.

சென்னை சாகித்ய அகாடமியில் கதை, வாசிப்பு மற்றும் தமிழில் நவீன சிறுகதைகள் தொகுப்பில் கதை இடம் பெற்றுள்ளது. புது டெல்லி மற்றும் சாகித்ய அகாடமியின் இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரள ஜனநாயகம் மாத இதழில் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகளில் ஆறு இளம் முனைவர் (M. Phil.,) பட்டத்திற்க்கும், ஒருவர் முனைவர் (Ph.D.,) ஆய்வும் மேற்கொண்டு முடித்துள்ளனர். சென்னையிலுள்ள 'தலித் முரசு' பத்திரிக்கையில் இணை ஆசிரியராகவும் உள்ளார்.

இவரைப் பற்றி பழ மலாய் அவர்கள் எழுதி உள்ள குறிப்பு:

விழுப்புரத்தில், அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர், அவர் களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலி யாகிப் போகாமல், தங்கள் இருப்பை, மன சாட்சிக்குத் துரோகம் செய்யாமல், எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில் தான், இவர், நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கிறார், வீதி நாடகங்களில் நடிக்கிறார், செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார், கவிதை, கதை, நாவல் - என்று வரைகிறார்.

அனுபவ மண்ணில் வேர்பாய்ச்சி, அழகி யல் வானில் கிளை பரப்புவதாலேயே இதய வேந்தனுடைய எழுத்துக்களை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

- பேராசிரியர் பழ மலாய்

Rent Now
Write A Review

Same Author Books