இணையதளத்தில் ஒரு வார இதழ் ஆரம்பிப்பதாகவும் அதில் நான் எழுத வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் சொன்னபோது அது எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று யோசனையாக இருந்தது. வாரம் தோறும் எழுதுவது இயலுமா என்றும் சந்தேகம் இருந்தது. என்ன வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் தயக்கமின்றி எழுதலாம். சுருக்கமாகவும் எழுதலாம். நீண்டதாகவும் இருக்கலாம்.
நாம் இருப்பது ஜனநாயக அமைப்பில் என்று பெயரே தவிர ஜனநாயகத்திலும் கருத்துச் சுதந்திரத்துக்கு மறைமுகமாகவோ நேர்முகமாகவோ அடக்குமுறைகள் உண்டு என்பதை நமது அரசு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் அச்சமின்றி நேர்மையாக வாக்களித்த சாத்தியங்களும் குறைந்துவிட்டன, அரசியல் கட்சிகள் பணபலம் கொண்டு அவற்றை நசுக்கப் பார்ப்பதால். ஜனநாயக வேர்களை ஊடுருவி சுதந்திரப் பயிரை ஆட்டம் காணவைக்கும் போக்குகளைக் கண்டு பத்திரிகைத்துறை ஒரு இயலாமையுடன் கண்டு மௌனிக்கும் காலகட்டமாகி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சிக்கு வந்தவர்களுக்கு தாங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற எண்ணம் இருக்கிறதோ இல்லையோ அவர்களின் செயல்களைச் சுட்டிக்காட்டும் உரிமை எவருக்கும் இல்லை என்கிற ஆணவம் நிச்சயமாக இருப்பது நாளுக்கு நாள் வெளிப்படையாகத் தெரிய வரும் போக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலுக்கு வந்த பிறகு கிடைத்த பணபலமே அவர்களது ஆணவத்துக்குக் காரணம். சுதந்திரப் போரில் பங்கு பெற்று சுதந்திரம் கிடைத்த பின் ஆட்சிக்கு வந்த தலைவர்களுக்குப் பணிவு இருந்தது. ஒரு மாபெரும் பொறுப்பு தங்கள் அனுபவமற்ற தோள்களில் இருப்பதான உணர்வும் பயமும் இருந்தது. தங்கள் கடமையை செவ்வனச் செய்ய வேண்டும், மக்களை முன்னேற்ற வேண்டும் என்கிற அர்ப்பணிப்புடன் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் அவர்கள். பணத்தைப் பற்றியோ அதிகார பலத்தைப் பற்றியோ நினைத்துப் பார்த்திராத அதிசயத் தலைமுறை அது.
இன்றைய அரசியல்வாதிகளின் ஆளுமையே வேறு. நாம் மீண்டும் நில ஆதிக்கவாத காலத்துக்குச் சென்றுவிட்டோம். ஜனநாயக வாக்கெடுப்பும் கண்துடைப்பாக மாறிவிட்ட தமிழ்நாட்டில் ஆளும் குடும்பம், அது யாராக இருந்தாலும், அரச குடும்பமாக மாறிவிடுகிறது. அவர்களது செல்வாக்கும் செல்வமும் அதிகரிக்க அதிகரிக்க அவை ஏற்படுத்தும் ஒளி வட்டம் பாமரனுக்கு பிரமிப்பேற்படுத்துவது. கேள்வி கேட்கும் தகுதியை மக்களும் பத்திரிகைகளும் இழந்துவிட்டார்கள். அச்சுறுத்தலை சந்திப்பதைவிட மண்டியிடுவது மேல் அல்லது ஒதுங்கி இருப்பது மேல் என்று பத்திரிகையாளர்கள் சமரசத்துக்கு வந்துவிட்டார்கள். விமர்சனம் செய்தால் வெகுண்டெழுந்து தமது பத்திரிகையில் பெயர் சொல்லி எழுதுவதோடு தலைமை நிற்காது. மறைமுக அச்சுறுத்தல்கள் பல ரூபங்களில் வரும். அல்லது நீதி மன்றத்துக்கு இழுக்கப்படுவோம். நீதித்துறையும் சாமான்ய மனிதர்கள் கொண்ட வளாகம். அங்கு துணிச்சலுடன் செயல்படுகிறவர்களை விரல் விட்டு எண்ணலாம். அப்படிப்பட்டவர்களின் தார்மீக பலத்தை முறியடிக்கும் யத்தனத்தில் ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்கும் பங்கு இருக்கும். துரித கதியில் சுழலும் வாழ்க்கையில் யாருக்கும் சிக்கல்களைச் சந்திக்க நேரமும் இல்லை, திராணியும் இல்லை. அரசின் அதிகார பலம் அசுரத்தனம் கொண்டது.
நாம் இருப்பது ஜனநாயகம்தானா என்கிற சோர்வு என்னை பல சமயங்களில் அலைக்கழிக்கிறது. எழுத நினைப்பதை, எழுதப்பட வேண்டியதை எழுத முடியாமல் போவது எத்தனை கொடுமை என்கிற ஆயாசம் மேற்கொள்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்புள்ளது என்கிற கருத்துடன் எழுதுபவருக்கு ஏற்படும் மனச் சோர்வு இது. அத்தகைய சமயத்தில் 'தயக்கமில்லாமல் எழுதக்கூடிய வெளி இது' என்று அழைப்பு விடுக்கும்போது இது நல்ல வாய்ப்பு என்று எழுத ஆரம்பித்தேன். நாட்டு நடப்பிலும், இந்திய கலாச்சாரக் கூறுகளிலும், சமுதாய அவலங்களிலும் தீவிர ஆர்வம் கொண்ட எனக்கு சொல்லப் படவேண்டியது நிறைய இருப்பதாக உணர்கிறேன்.
வாராவாரம் என்ன எழுதுவோம் என்கிற திகைப்பு இல்லை. சொல்ல அநேகம் இருக்கிறது என்கிற துடிப்பு அதிகரிப்பதை உணர்கிறேன். புதிதாக இறக்கை முளைத்தது போல இருக்கிறது. ரிச்சர்ட் பாக் எழுதிய, அமரத்துவம் பெற்ற ஜானத் தன் லிவிங்க்ஸ்டன் என்ற கடல் பறவை போல உணர்கிறேன். ஜானத்தன் லிவிங்க்ஸ்டன் பறக்க ஆசைப்பட்டது. கற்க ஆசைப்பட்டது. அமைப்பின் விதிகளை மீறத் துணிந்தது. அதற்காக அதன் சமூகத்தால் ஒதுக்கப்பட்டது. அதை லட்சியம் செய்யாமல் அறிவின் எல்லையைத் தேடிச் சென்றது. உண்மை புலப்பட்டதும் நிலத்துக்குத் திரும்பி தன்னைப் போன்ற அறிவுத் தாகத்துடன் இருப்பவரைக் கூட்டு சேர்த்து பறக்கும் துணிவை ஏற்படுத்திற்று.
- வாஸந்தி
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Rent Now