Home / eBooks / Digital Vazhkai
Digital Vazhkai eBook Online

Digital Vazhkai (டிஜிட்டல் வாழ்க்கை)

About Digital Vazhkai :

செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் ஊடகம் மீடியா என்று எல்லோருக்கும் தெரியும்.

அப்படியானால் மல்டிமீடியா?

புகைப்படம், எழுத்து ஒலி, வரைவு, வடிவம், பேச்சு, இசை, அனிமேஷன் பாத்திரங்கள், அசைவுகள் இத்தனையையும் ஒருங்கிணைத்து, கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் பிடித்த இறுதி வடிவம் தருவது மல்டிமீடியா.

நேற்றைய ஆய்வுகளும் இன்றைய நிகழ்வுகளும் இணைந்து உலகை, மல்டிமீடியா மற்றும் அதன் முக்கிய அங்கமான டிஜிடல் உலகிடம் ஒப்படைத்து விட்டன.

வேளாண்மை, கல்வி, மருத்துவம், போக்குவரத்து, பத்திரிகை, கட்டிடக்கலை உட்பட எல்லாத்துறைகளும் டிஜிடலில் இயங்கும் கம்ப்யூட்டருக்குள் இன்று செல்போனுக்குள் அடங்கிவிட்டது.

டிஜிட் என்றால் லத்தீன் மொழியில் விரல் என்று அர்த்தம். அறியாத பருவத்தில் விரல் விட்டு எண்ணுவோம் அல்லவா? எனவே எண்களை அடிப்படையாக கொண்ட பதிவுகளை டிஜிடல் என்றே அழைத்தனர். அது இன்று நம் தினசரி வாழ்வில் விரல் விட்டு ஆட்டுகிறது.

போன வருடத்துக்கு முந்திய வருடம் வாங்கிய செல்ஃபோன் இப்போது “ரொம்ப பழைய மாடல்" ஆகிவிடுகிறதே!

உலக உருண்டையையே பதிவிறக்கம் (டவுன்லோட் செய்து தரும் இன்றைய புது மாடல் சாதனம், நாளைக்கே "இது போன வருடத்து பழைய மாடல் சார்” ஆகிவிடும்.

ஏதோ ஒரு திரையையே (கம்ப்யூட்டர் கூட போன ஜெனரேஷன் ஆகி விட்டதைப் போல் மொபைல் ஃபோன் திரை) விடாமல் உற்றுப் பார்த்தபடி விரல் நுனிகளுக்கும் கண்ணாடி அணிந்த கண்களுக்கும் மட்டுமே வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய பிஞ்சுகளைப் பார்த்து ஏற்படும் நியாயமான பயம் ஒருபுறம் இருந்தாலும், சில வக்கிரர்களின் விபரீத குற்றங்கள் நடந்தாலும், அபரிமிதமான நன்மைகளை இந்த டிஜிடல் வாழ்க்கை நமக்கு அளித்து வருவதில் சந்தேகமில்லை.

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் அவ்வளவாக கிராஃபிக்ஸ் பயிற்சிக் கூடங்கள் உருவாகியிருக்காத நிலையில் DataPRO சென்டரில் கிராஃபிக்ஸ் பயிற்சி தருவதை அறிந்து அங்கே சேர்ந்தேன்.

முப்பரிமாணத்தில் ஒரு சாதாரண க்யூப் திரையில் உருவாக்கியபோது ஆனந்தமோ ஆனந்தம்!

சென்னை ஆப்டெக் (Aptech) மற்றும் கெல்ட்ரான் (Keltron) பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து புதிய மென்பொருட்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. 3DStudio, LightWave Combustion, Director, Authorware, ElasticReality, Composite என்று உருவம் மாடலிங், மார்ஃபிங், டிசைனிங், ஒருங்கிணைக்கும் மென்பொருட்கள் என பலவற்றிலும் பயிற்சி பெற முடிந்தது.

இதில் வியப்பு என்னவென்றால் கடந்த எட்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, இவையெல்லாம் “அவுட் டேட்” ஆகி விட்டன. இன்று உபயோகத்தில் இவையெல்லாம் இருக்கிறதா தெரியவில்லை.

Photoshop, Flash, InDesign, Illustrator, Corel Draw, Dream Weaver, 3D Max, Maya என்று இருபரிமாண மற்றும் முப்பரிமாண உருவங்களை உருவாக்கி, அவற்றை அனிமேஷனில் இயங்க வைக்கும் இன்னும் பலப்பல கிராஃபிக்ஸ் மென்பொருட்கள், மற்றும் பத்திரிகைத்துறைக்கு தேவையானவை, விளம்பரம், தொலைக்காட்சிக்கு தேவையானவை, திரைப்படங்களில் பயன்படும் உத்திகளுக்கு தேவையானவை. அதிலும் அதி முக்கியமாக வெப் டிசைன் எனப்படும் இணையதள பக்கம் உருவாக்குதல் என்று பலதும் இவற்றுக்குள் அடங்கும்.

2002ல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் Department of Media Sciences ஆரம்பிக்கப்பட்டபோது அதில் M.Sc. Electronic Media மாணவர்களுக்கு ஃபோட்டோஷாப் இருபரிமாண கிராஃபிக்ஸ் (2D Graphics) இவை ஒரு பாடமானது.

ஆப்டெக் மூலம் அங்கே வருகை ஆசிரியராக (Visting Faculty) பணிபுரிய வாய்ப்பு வந்தபோது திரு. சி. விஸ்வநாதன் (பின்னாளில் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆனவர்) அவர்கள் தான் எனக்கு ஊக்கம் தந்து மாணவர்களுக்கு கிராஃபிக்ஸ் பாடம் சொல்லித்தர வைத்தார். அது இன்று வரை தொடர்கிறது. தற்போது ஆர்கிடெக்சர் முதுகலை மாணவர்களுக்கு வெப் டிசைன் வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

பொதுவாக அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்த என்னை அமுதசுரபி தீபாவளி மலரில் அறிவியல் கட்டுரைகள் எழுத வாய்ப்புத் தந்தவர் எழுத்துலகின் பிதாமகனும், அனைந்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவருமான என் மரியாதைக்குரிய திரு. விக்கிரமன் அவர்கள்.

இந்த கட்டுரைகளைப் புத்தக வடிவில் கொண்டுவர, நம் முன்னேற்றத்துக்காக நம்மைத் தூண்டி நன்மை செய்யும் பெருமகனார் திரு. தீபம் எஸ். திருமலை அவர்கள் ஒரு காரணம். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அவரது தொடர்ந்த உதவிகளால் தான் இந்த புத்தகம் உருவாகியிருக்கிறது. இப்புத்தகத்தை பிரசுரிக்க உதவி செய்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

- பத்மினி பட்டாபிராமன்

About Padmini Pattabiraman :

பத்மினி பட்டாபிராமன் குறிப்புக்கள்

சென்னை தொலைக்காட்சியில் 14 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சி மற்றும் செய்தி அறிவிப்பாளராக ஏராளமான பேட்டிகள், நிகழ்ச்சித் தொகுப்புக்கள் வழங்கியிருக்கிறார். அகில இந்திய வானொலி எஃப். எம்மில் 2 வருடங்கள் செய்திகள் வாசித்திருக்கிறார். குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, அமுதசுரபி, குங்குமம், கலைமகள், மஞ்சரி, இலக்கியப் பீடம், லேடீஸ் ஸ்பெஷல், மங்கையர் மலர், பெண்மணி, சாவி, மங்கை, ராஜம், தாய், தமிழரசி போன்ற பல பத்திரிகைகளில் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள், தொடர்ந்து எழுதி வருகிறார்.

மஞ்சரி, ஆன்மீகம் இதழ்களில் இவர் எழுதிய பயணம் மற்றும் கோயில்கள் பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகி இருக்கின்றன.

கல்கியில் 16 பக்க இணைப்பு புத்தகத்தை இரண்டு முறைகள் தயாரித்திருக்கிறார். மங்கையர் மலரிலும் “இணைப்பு” புத்தகங்கள் எழுதி வருகிறார்.

அகில இந்திய வானொலியின் நாடக விழாக்களில் இவர் எழுதிய நாடகங்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒலிபரப்பாகியிருக்கின்றன.

இவரது எழுத்தில், பொதிகை தொலைக்காட்சியில், ஆர்.எம்.கே.வி நிறுவனம் வழங்கிய தொடர் “ரசிகப்ரியா” என்னும் ஒரு மணி நேர நிகழ்ச்சி. இரண்டு வருடங்கள் ஒளிபரப்பானது.

மங்கையர் மலரில் பல வருடங்களாக மருத்துவம், உடல் நலம்,தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

அமுதசுரபி குறுநாவல் போட்டி, கல்கி குறுநாவல் போட்டி, சுந்தரம் ஃஃபைனான்ஸ், மைலாப்பூர் டைம்ஸ் இணந்து நடத்திய சிறுகதைப் போட்டிகளில் முதல் பரிசு, ஆனந்த விகடன் பொன்விழா கதைப் போட்டி, குமுதம் சிறுகதைப் போட்டி, கல்கி சிறுகதைப் போட்டி, இலக்கியபீடம் சிறுகதைப் போட்டி, தமிழரசி பத்திரிகையில் அமரர் எம்.ஜி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி என பல போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.

“மாமரத்து வீடுகள்” ,திருமதி சிவசங்கரி அவர்களாலும், “புது வெளிச்சம்” திரு. நல்லி குப்புசாமி அவர்களாலும் வெளியிடப்பட்டு பெரும் பாராட்டு பெற்றவை.

கம்ப்யூட்டர் அனிமேஷன் கிராஃபிக்ஸ்மற்றும் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பான , “டிஜிட்டல் வாழ்க்கை” புத்தகத்தை, இயக்குனர் திரு.வசந்த் வெளியிட்டார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 2002 ம் ஆண்டு முதல் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் கற்றுத்தந்தவர். அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார்

இவரது கணவர் பட்டாபிராமன் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் ஏற்றுமதி பிரிவில் உயர் அதிகாரியாக பணி புரிந்துவிட்டு தற்சமயம் பேராசியராக இருக்கிறார்.

Rent Now
Write A Review

Same Author Books