Home / eBooks / Editor S. A. P.
Editor S. A. P. eBook Online

Editor S. A. P. (எடிட்டர் எஸ். ஏ. பி.)

About Editor S. A. P. :

காந்தியடிகள் காலமானபோது ஐன்ஸ்டைன் சொன்னார்: "இப்படி ஒரு மனிதர் நரம்பும் சதையும் ரத்தமும் கொண்டு இந்தப் பூமியில் நடமாடினார் என்பதைப் பிற்கால சந்ததிகள் நம்ப மறுப்பார்கள்."

எடிட்டரைப் பற்றி நாங்கள் கட்டுரை எழுதக் காரணமும் இதுவே.

இப்படி ஒரு லட்சிய வெறி கொண்ட எடிட்டர், கொள்கைப் பிடிப்புள்ள பத்திரிகையாசிரியர், தமிழ்ப் பற்றும் தேசப் பற்றும் தெய்வப் பற்றும் மிகுந்த மாமனிதர், நம்பற்கரிய புத்தி வீச்சுக் கொண்டிருந்த அறிவாளி, சகல விதமான கலைகளையும் துய்த்து மகிழ்ந்த ரசிகர், தனக்குத் தெரிந்த தொழில் ரகசியங்களைத் தன் கீழுள்ள அனைவரும் கற்றுக் கொள்வது லாபமே தவிர நஷ்டமாகாது என்று நம்பிய பெருந்தன்மையாளர் -

நரம்பும் சதையும் ரத்தமும் கொண்டவராக இந்தத் தமிழ் நாட்டில் நடமாடினார் என்பது ரெகார்டாக வேண்டும் - எழுத்திலே பதிவு பெற வேண்டும் - என்பது எங்கள் ஆசை. காந்திஜிக்காவது ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தன. அவருடைய பெருமைகளைப் பறைசாற்ற. தன் வாழ்க்கையில் சத்தியத்துக்கு ஏற்பட்ட சோதனைகளை அவரே சுயசரிதமாக எழுதினார்.

எங்கள் எடிட்டருக்கு அப்படி எதுவும் இல்லை. உயிருடன் இருந்த வரையில் தன்னைப் பற்றி ஒரு வரியோ, தபால்தலை அளவுக்குப் புகைப்படமோ வெளிவர அவர் அனுமதித்தது கிடையாது. ஆகையால் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லாவிட்டால் அது சரித்திரத்துக்கு இழைக்கப்படும் துரோகமாகும் என்று நம்பியே இந்தக் கட்டுரைகளை எழுதினோம்.

எடிட்டர் காலமான செய்தி கிடைத்த தினத்தன்றே, நான் அவரைப் பற்றி எழுத வேண்டுமென்று ஆனந்த விகடன் ஆசிரியரவர்கள் பணித்தார். மாற்றார் பத்திரிகைக்கு விளம்பரம் தருவதாக இருக்குமே என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், என் மனத்தில் பட்டதைத் தொடர்ந்து எழுத இடம் கொடுத்தார். அந்த விசால இதயத்துக்கு என் நன்றி. நாங்கள், நாங்கள் என்று பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதால், ஜ. ரா. சுந்தரேசன், புனிதன் ஆகியோர் எழுதிய கட்டுரைகளையும் இப்புத்தகத்தில் இணைப்பது பொருத்தமாகத் தோன்றியது. அந்தக் கட்டுரைகளை வெளியிட்ட கலைமகள், தினமலர், தினமணி கதிர், குங்குமம், மேகலா இதழ்களுக்கு நன்றி.

எடிட்டர் எங்களை எழுத்தாளர்களாகவும் பத்திரிகையாளர்களாகவும் பண்ணியதோடு மட்டுமில்லை. காந்திஜியைப் பற்றிய டி. எஃப். கராக்கா எழுதியது போல, 'He made men out of dust'. சீரிய, எளிய வாழ்க்கையைத் தானே வாழ்ந்து காட்டி முன்னுதாரணமாக அவர் திகழ்ந்ததால், நாங்களும் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தறிகெட்டுப் போகாதவர்களாக உருவானோம். பதப்படுத்தக்கூடிய இளம் வயதில் அவர் எங்களுக்குக் குருவாக அமைந்திருக்காவிட்டால் யார் எப்படிப் போயிருப்போமோ சொல்ல முடியாது. எங்களிடம் எந்த நல்ல குணமேனும் காணப்பட்டால் அது அவர் மூலம் வந்ததாகும். எந்தக் கெட்ட குணமேனும் காணப்பட்டால் அது நாங்களாக ஈட்டிக் கொண்டதாகும்.

அத்தகைய குருநாதருக்கு நன்றி கூறும் அஞ்சலியாகவும் இந்த புத்தகம் இருக்கட்டும்.

என் கட்டுரைத் தொடர் ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு நண்பர் "எல்லாம் நீங்களே செய்த மாதிரியும், எடிட்டர் ஒன்றுமே செய்யவில்லை என்பது போலும் ஒரு தொனி தெரிகிறகென்று சிலர் சொல்கிறார்கள். You are showing him in a bad light என்று கூடச் சிலர் சொன்னார்கள்" என்று கூறினார். எழுத்துக்களை அளந்து போடும் வன்மை அவரளவு எனக்குக் கிடையாது. ஆகவே வார்த்தைப் பிரயோகம் எங்கேனும் சரியாக வரவில்லையோ என்னவோ. ஆனால், கட்டுரைகள் வந்து கொண்டிருந்த போது, எடிட்டரின் துணைவியாரை ஒரு முறை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தபோது, அவர், "உங்கள் கட்டுரைகளைப் படிக்கும்போது கண்ணெதிரில் எடிட்டர் நடமாடுகிற மாதிரி அவ்வளவு உண்மையாக இருக்கிறது" என்று சொன்னார். அதற்கு மிஞ்சிய பாராட்டுக் கிடையாது என்று நினைக்கிறேன்.

சுந்தரேசனும் சரி, புனிதனும் சரி, நானும் சரி இங்கே உண்மைகளைத்தான் கூறியிருக்கிறோம். உண்மையைத் தவிர வேறில்லை. சொல்லப் போனால் சில விரும்பத்தகாத உண்மைகளை (நான் வேலையிலிருந்து நின்று கொள்ள நேரிட்ட சூழ்நிலை உள்பட) நாங்கள் வெளியிடவில்லை. அவற்றைச் சொன்னால் அது எடிட்டரையே குற்றம் சாட்டுவது போலாகிவிடும். அது நியாயமில்லை. ஏனெனில், எங்கள் ஊனக் கண்ணுக்கும் தெரியாத ஏதோ ஒரு தர்மக் கோட்டுக்குக் கட்டுப்பட்டு அவர் செயல்பட்டு வந்தாராகையால், எங்களுடைய எந்த மன வருத்தத்துக்கும் அவரைப் பொறுப்பாளியாக்க நாங்கள் தயாராயில்லை.

About Ra. Ki. Rangarajan :

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Rent Now
Write A Review

Same Author Books