“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
நாம் விரும்பும் ஹீரோவோ ஒரு அமைப்போ அல்லது தலைவரோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர், தெய்வப்பிறவி என்ற எண்ணம் நம்மிடையே இருந்து அகலவேண்டும். ஒரு படைப்பாளியின் படைப்பின் மேல் வைக்கப்படும் உண்மையான, நேர்மையான, ஆய்வுகளுடன் கூடிய ஆதாரபூர்வ விமர்சனமானது அவரைச் செம்மைப்படுத்தவும், தனது படைப்புகள் மற்றவர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன என்ற எச்சரிக்கை உணர்வை அவருக்கு ஏற்படுத்தி, அதன் மூலம், தான் எதைக் கொடுத்தாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற வித்தகச் செருக்கு ஏற்படாமல் தடுத்து, எதிர்காலத்தில் அவரிடமிருந்து அவரின் தனித்தன்மையான படைப்புகள் வெளிவருவதற்கு உந்துசக்தியாக இருப்பவை. அப்படிப்பட்ட ஒரு நேர்மையான ஆய்வுரீதியான, தர்க்க ரீதியான விமர்சனத்தைத்தான் திரு.குமார் அவர்கள் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் மேல் இந்தப் புத்தகத்தினூடே வைத்துள்ளார்.
நான் ஒரு ஈழத்தமிழன். வைரமுத்துவின் பாடல் வரிகள், முக்கியமாக வைரமுத்து இளையராஜா கூட்டணியின் பாடல்கள் என்னுடைய வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவை. இன்றியமையாதவை. காரணம் ஈழத்தில் விவரம் தெரியத் தொடங்கிய காலம் தொட்டு மேற்குலகில் இன்றைய வாழ்க்கை வரை எம்முடன் கூட வருவது தமிழ்த் திரையிசைப் பாடல்கள் மட்டுமே. ஈழத்தில் எம்முடன் இருந்த அனேகமானவற்றை இழந்துவிட்ட போதிலும் இழக்காத ஒன்றே ஒன்று இந்தப்பாடல்களும் அவை ஏற்படுத்தும் சுகமான ஈழத்து நினைவுகளும்தான். அந்த வகையில் பல நூறு தடவைகள் கேட்டுப் பிரமித்த பாடல்களில் உள்ள வரிகளைப் பற்றியும் அவை உண்மையில் எங்கிருந்து எடுக்கப்பட்டவை என்பதைப் பற்றியுமான நண்பர் குமாரின் தேடல் அல்லது ஆய்வு பத்திரிகையில் தொடராக வெளிவந்தபோது அதை ஒன்றுவிடாமல் படித்து ஆச்சரியப்பட்டவர்களில் நானும் ஒருவன்... இந்த விமர்சனங்கள் கவிஞர் வைரமுத்துவை கவிப்பேரரசு என்று அழைப்பது சரிதானா? என்ற கேள்வியையும் அவர் மேலிருந்த அளவுகடந்த பிரமிப்பையும் என்னுள் தகர்த்த போதிலும் மறுபக்கத்தில் அவரின் வாசிப்பையும், தேடலையும், தான் தேடிப்பெற்றதை நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றித்தரும் வித்தகத்தையும் அறியச் செய்து வியக்கவைத்தன. தமிழிசையில் ஆர்வமுள்ள அனைவரும் படித்துப் பாதுகாக்கவேண்டிய புத்தகம் இது. இதைப்படிக்கும் முன் கேட்ட வைரமுத்துவின் பாடல்கள், இதனைப் படித்தபின் வேறுவிதமான மன உணர்வைக் கொடுக்கும் என்பதை அனுபவபூர்வமாகக் கண்டவன் நான். நண்பர் திரு.குமாரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது. இந்தத் தேடலுக்காக அவர் எடுத்துக்கொண்ட பொன்னான நேரத்துக்கும் சிரமத்துக்கும் அதனூடாக அவர் செய்த காலத்துக்கு ஏற்ற தமிழ்ப்பணிக்கும் மனமார்ந்த நன்றிகள். அவரின் பணி தொடரவும் சிறக்கவும் வாழ்த்துக்கள்.
அ. கலைச்செல்வன்
சிட்னி, ஆஸ்திரேலியா
இரா. குமார், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் கீழப்புளியங்குடியில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ரெ. இராமசாமிப் பிள்ளை. தாய் பராசக்தி.
தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்றவர் இரா.குமார். தினமலர், தினகரன் நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளை வகித்தவர். பத்திரிகை துறையில் 36 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
சிறந்த தமிழறிஞரான இவர், எளிய இனிய நடையில் எழுதுவதிலும் மேடைகளில் சுவைபட உரையாற்றுவதிலும் வல்லவர். சிறந்த கவிஞர்.
இது வரை 15 நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள ‘நடைமுறை இதழியல்’ நூல் பெரும் வரவேற்பை பெற்றது. பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இதழியல் மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பெரிய புராணம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றை புதுக்கவிதை நடையில் எழுதி வெளியிட்டுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திம் சிறந்த எழுத்தாளர் விருது, தருமையாதீனம் குருமகாசன்னிதானம் அவர்களால், ‘இறைத்தமிழ் வேந்தர்‘ பட்டம், புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் ‘ஆன்மீகச் சுடர்‘ பட்டம் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Rent Now