நான் எழுதும் செய்திகளொன்றும் பிரமாதமானவை அல்ல என்றாலும் பயனுள்ளவை.
அன்றாடம் நம் எல்லோர்க்கும் ஏற்படுகிற அனுபவங்களின் தொகுப்புதான் இந்நூல். “பார்த்தது கோடி பட்டது கோடி சேர்த்தது என்ன சிறந்த அனுபவம்” என்பார் கவியரசர் கண்ணதாசன். எல்லோரும்தான் எல்லாவற்றையும் பார்க்கிறோம். எல்லோர்க்கும்தான் ஏதேதோ நிகழ்கிறது. ஆனால் அதை அனுபவமாகப் பார்க்கும் போது தான் படித்துக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவுமான பாடமென்று நமக்குக் கிடைக்கிறது.
பள்ளிக்கு வெளியே பரந்து கிடக்கிற வெளியில் நாம் படித்துக் கொள்ள வேண்டிய பல செய்திகளை அனுபவங்களே ஆசிரியர்களாக இருந்து படித்துத் தருகின்றன. அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பால்தான் அதிகமான சூடென்று அனுபவித்த பூனை எதுவும் புத்தகம் எழுதியதில்லை. எனினும் பூனைகளுக்கு இந்தப் பாடம் தெரியும். ஆனால் குனிந்து நுழையா விட்டால் கூரை இடிக்கும் என்று தெரிந்திருந்தும் கூரை வீட்டுக்காரனே பலமுறை இடிபட்டுக் கொண்டிருப்பான்.
அதனால்தான் “அனுபவங்கள் நம் அறிவை வளர்க்கின்றன. ஆனால் அசட்டுத்தனங்களைக் குறைப்பதில்லை” என்ற பில்லிங்க்ஸ் என்ற அறிஞன் ஒருவன் படித்துச் சொல்லியிருக்கிறான். இந்த என்பக்கக் கட்டுரைகளில் வாழ்வதற்கான வழிகள் கிடைக்காது. ஆனால் வாழ்க்கையின் விசித்திரங்கள் கிடைக்கும்.
நாமெழுதும் கவிதைகளிலும், கதைகளிலும், கட்டுரைகளிலும், நாடகங்களிலும் காணப்படும் சுவைகளைப் போல இந்த எழுத்திலும் சுவையும், சுகமும் இருப்பதற்குக் காரணம் இது வாழ்க்கைத் தொடர்பானது; அதுவும் நாம் ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட அனுபவத்தைச் சார்ந்தது என்பதால் எல்லோருக்காகவும் நான் எழுதியதுபோல் என்பதற்கப்பால் எல்லோரும் சேர்ந்தெழுதிய உணர்வு பெறுவோம்.
என் எழுத்தில் நான் ரசிக்கிற எழுத்தே என்பக்கம் தான். இது நம் பக்கம். நல்ல அனுபவங்களில் எனக்குப் பெருமை என்றால் அல்லாத அனுபவங்களில் நான் அவமானமடைவதில்லை. காரணம் என்னுடைய செயல்களால் அல்லாமல் வேறெவருடைய சொற்களும், செயல்களும் என்னை அவமானப்படுத்துவதாக நான் கருதுவதில்லை, அதை நான் ஏற்பதுமில்லை. புத்தனிடம் நான் பெரிதும் ரசிக்கிற போதனையே இதுதான்.
இதமாக இருங்கள், இயல்பாக இருங்கள், இனிமையாக வாழ்க்கை அமையும் என்பதை இந்த என் பக்கங்கள் உங்களுக்குப் படித்துத் தருமானால் நான் பேருவகைப் பெறுவேன். இச்சிறு நூலுக்கும் என் சிந்தனைகளுக்கும் சிறப்பு சேர்ப்பது போல் என் சிந்தைக்கினிய நண்பர் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் ஓர் அணிந்துரை என்பதற்கப்பால் ஆய்வுரையாக ஓர் அழகுரை தந்த அன்பினுக்கு நன்றி. அவருடைய அணிந்துரையே ஓர் அழகிய கட்டுரையாகத் திகழ்கிறது. அதைப் படித்துவிட்டு நூலுக்குள் நுழைதல் நலம்.
- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர், சமூக ஆர்வலர், பேச்சாளர், பத்திரிகையாளர்.
96 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெற்றவர்.
கலைமாமணி, இலக்கியப் பேரொளி, கவிச்சிற்பி, ஞாலக் கவிஞர், எழுத்துச் செம்மல், நாடகப் பேரொளி, சேவாரத்னா போன்ற விருதுகள் பெற்றவர். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ( FETNA ) வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். கனடா உதயன் இதழின் உலகளாவிய இலக்கியச் சாதனையாளர் விருது பெற்றவர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, கனடா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற உலக நாடுகளுக்கு இலக்கியப் பயணம் சென்று வந்தவர்.
ஆசிரியர், வெளியீட்டாளர் - கவிதை உறவு இலக்கிய மாத இதழ், நிர்வாக அறங்காவலர் - கவிதை உறவு சாரிட்டபுள் டிரஸ்ட்.
புகழ் வாய்ந்த ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். ஊடகவியல், வாழ்வியல், பத்திரிகையியல் பயிற்சியாளர்.
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
உலகெங்கும் விரிந்த நட்பு வட்டத்தைப் பெற்றிருக்கிற வெற்றியாளர்.
Rent Now