Home / eBooks / Engal Thozhi Kamali
Engal Thozhi Kamali eBook Online

Engal Thozhi Kamali (எங்கள் தோழி கமலி)

About Engal Thozhi Kamali :

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டாலும் சரி, பூவுலகில் பெரியோர்களாலும் இஷ்ட மித்ர பந்துக்களால் தீர்மானிக்கப்பட்டாலும் சரி, அல்லது காதல் திருமணமாக கடிமணம் புரிந்தாலும் சரி, திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை என்பது எப்படி அமையும் என்பது தீர்மானிக்க முடியாமல் தான் இருக்கிறது.

பெண் என்பவள் நாற்றங்கால் போல என்கிறார்கள். ஓரிடத்தில் வளர்க்கப்பட்டு இன்னொரு இடத்தில் ஊன்றப்படும் உயிர் ஜீவன் அவள். பிறந்த வீடு, புகுந்த வீடு என்று இருவேறுபட்ட வாழ்க்கையையும்எதிர் கொண்டுதன் ஆற்றலால் ஒன்றாக்க முனையும் பிறவி அவள். ஒத்துப் போதல், விட்டுக் கொடுத்தல், அன்பு, அனுசரிப்பு என்று அடுக்கப்படும் உபதேசங்கள் அவளை நோக்கியே நீளும் மந்திர உச்சாடனங்கள். எது எப்படியிருப்பினும் திருமண பந்தத்தின் நோக்கம் இன்னொரு குடும்ப நீட்சிக்கான ஆயத்தமே என்று பார்க்கும் பொழுது அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பெண்கள் கையில்தான் பத்திரமாக இந்த சமூக அமைப்பில் ஒப்படைக்கப் பட்டிருப்பது புரியும்.

இந்தக் கதையின் நாயகி கமலிக்கு ஏற்பட்ட திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை அனுபவங்களோ வேறு மாதிரியானவை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள், தன் ஆற்றலால் ஏற்படும் பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வு காண்கிறாள் என்பவை தான் இந்த நாவலாக ரூபம் கொண்டிருக்கிறது...

வித்தியாசமான இந்தப் புதினத்தைவாசித்துத் தான் பாருங்களேன்.

About Jeevee :

ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது படைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இவரது முதல் கதை 1958-ம் வருடம் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ பத்திரிகையில் பிரசுரமானது. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் 37 பிரபல எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாசகர் ரசனையில் இவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூல் வாசகர் மத்தியில் பேசப்படும் ஒரு நூலாகத் திகழ்கிறது. முதலில் நான் ஒரு வாசகன். அந்த வாசக உள்ளம் தான் என்னையும் எழுத வைத்தது என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் ரசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இணையத்தில் சக வாசகர்களுடன் பதிவெழுத்தாளராய் கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக தொடர்பில் இருப்பவர். நல்ல பல நண்பர்களைப் பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை, ஆய்வுகள் என்று எழுத்தின் சகல பரிமாணங்களிலும் வலம் வர தளராத ஊக்கம் கொண்டவர். சொந்தத்தில் பத்திரிகை, பதிப்பகம் என்றெல்லாம் எழுத்து சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் கொண்டவர்.

ஜீவி தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் 74 வயது இளைஞர். ஜி.வெங்கட்ராமன், ‘ஜீவி’யானது எழுதுவற்காகக் கொண்ட பெயர். தொலைபேசித் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாழ்க்கையின் சகல போக்குகளிலும் ரசனை கொண்டவர். எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்பதான சமதர்ம சமுதாயத்திற்காக கனவு காண்பவர். அந்தக் கனவின் நிதர்சனத்திற்கு தன் எழுத்து என்றென்றும் துணையாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பவர்.

Rent Now
Write A Review