நாம் பேசுவதாயினும் சரி... பிறர் பேசுவதாயினும் சரி... பேசுவதை யாரும் தவிர்க்க முடியாது, தவிர்க்கவும் கூடாது. பேசக் கிடைக்கிற வாய்ப்பு ஒருவரோடொருவர் ஒரு சிலரோடு ஒருவர்... என்பதாக வளர்ந்து பலரது முன்னால் எனும் போது பேச்சுக்கலை உரையாடலில் தொடங்கி சொற்பொழிவு, சிறப்புரை, பேருரை என்றெல்லாம் நிறைவு பெறும்.
நல்ல பேச்சென்பது நன்றாகப் பேசுவதோடு நல்லதைப் பேசுவதாகவும் நிறைவாக நிறையச் செய்திகள் பொதிந்ததுவாக, பயனுடையதாகவும் அமைதல் வேண்டும். அப்படி அமையும்போது பேசுகிறவருக்குப் பாராட்டு என்பதைப் போலவே நூலாகும் நல்ல வாய்ப்பும் அமையும். இப்படி அமைய வேண்டும் என்கிற அக்கறை என்பதை விட அச்சம் நான் பேசமுற்படுமுன் ஏற்படுவதால் என்னைத் தயாரித்துக் கொள்வேன். இந்தத் தயாரிப்புதான் அவற்றைத் தொகுத்து நூலாக்குகிற துணிவைத் தந்துள்ளது. என்னுடைய பொழிவுகளை நூலாக்குதல் தொடர்கிறது. என் கவிதைகளைப் போலவும், சிறுகதைகளைப் போலவும், நாடகங்களைப் போலவும் இவையும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பொழிவுகளுக்கு கட்டுரைகள் என்கிற தகுதி பேசுகிறவர்களின் பொறுப்பால் அமையும். அமைந்திருப்பதாக என்னுள் மிகப் பணிவான எண்ணம். “எண்ணிய வண்ணமாய்” என்கிற இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பல்வேறு அரங்குகளில் நான் பேசியவை, ஒன்றிரண்டு மலர்களுக்கு எழுதியவையும் கூட. இதைப் படிக்கும் போது நான் படித்தவை உங்களுக்குப் படிக்கக் கிடைக்கும். நான் உணர்ந்தவை உங்கள் உபயோகத்துக்கு வரும். இந்நூல் உங்களுக்குப் பயன்படும் நம்பிக்கை எனக்குண்டு. என்னைப் பேச அழைத்தவர்களுக்கும் எழுத விழைந்தவர்களுக்கும் நன்றி பாராட்டி மகிழ்கிறேன்.
-ஏர்வாடி. எஸ். இராதாகிருஷ்ணன்
நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர், சமூக ஆர்வலர், பேச்சாளர், பத்திரிகையாளர்.
96 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெற்றவர்.
கலைமாமணி, இலக்கியப் பேரொளி, கவிச்சிற்பி, ஞாலக் கவிஞர், எழுத்துச் செம்மல், நாடகப் பேரொளி, சேவாரத்னா போன்ற விருதுகள் பெற்றவர். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ( FETNA ) வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். கனடா உதயன் இதழின் உலகளாவிய இலக்கியச் சாதனையாளர் விருது பெற்றவர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, கனடா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற உலக நாடுகளுக்கு இலக்கியப் பயணம் சென்று வந்தவர்.
ஆசிரியர், வெளியீட்டாளர் - கவிதை உறவு இலக்கிய மாத இதழ், நிர்வாக அறங்காவலர் - கவிதை உறவு சாரிட்டபுள் டிரஸ்ட்.
புகழ் வாய்ந்த ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். ஊடகவியல், வாழ்வியல், பத்திரிகையியல் பயிற்சியாளர்.
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
உலகெங்கும் விரிந்த நட்பு வட்டத்தைப் பெற்றிருக்கிற வெற்றியாளர்.
Rent Now