வசந்தத்தின் பேரிடியாய்...
கலைஞன் கவிதைக்குள் நுழைகிற அனுபவம் வித்தியாசமானதுதான். புற உலகின் நிகழ்வுகள் அகத்தே எழுச்சி பெற்று புதுவிதப் பாய்ச்சலை ஏற்படுத்துகின்றன.
கவிதை மொழிகள் காலந்தோறும் ஒரே சீராய் இருந்ததில்லை. கவிதைக்குள் புதுமைகளும், பல புதிய புதிய பரிமாணங்கள் கவிதைக்குள் நிகழ்வதும் இங்கு சாத்தியப்பாடாய் இருக்கின்றன.
கவிதைகள் எழுத எழுத ஒவ்வொன்றும் பல்வேறு பிரச்சனைகளை அனுகுவதோடு அவற்றின் மையப்பொருள் என்பது சமூகச் சூழலைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. சமூகம் பற்றிய பதிவுகள் உள்ளுக்குள் சிறுசிறு தீப்பொறியாய் ஆகி அவை வசந்தத்தின் பேரிடியாய் ஒலிக்க வேண்டும் என்பதன் முன்னோட்டம்தான் எனது கவிதைகளின் துவக்கப் புள்ளி.
இது எனது இரண்டாவது கவிதைத் தொகுதி. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகால கலை அனுபவங்களும் இலக்கிய வாசிப்பும் கவிதைக்குள் உள் நுழையப் போராடியதன் விளைவும்தான் மீண்டும் ஒரு தொகுப்பு வெளிவரக் காரணமாய் இருக்க முடிந்தது. இயல்பான சமூகப் பிரச்சனைகளோடு தலித் மக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகும் வன்கொடுமைக்கெதிராகப் பல கவிதைகள் இத்தொகுப்பில் நியாயம் பேசுகின்றன. உரிமைகள் கேட்கின்றன. இவைகள் காலத்தின் நெருக்கடிகள் மட்டுமல்ல, விடுதலைக்கான தேவையாகவும் இருக்கிறது. இவற்றோடு சிறு கவிதைகளும் இணைந்து சமூகம் பற்றிய நுன்மதிப்பீடுகள் போலன்றி ஓரளவேனும் யதார்த்தம் படச் சித்தரிக்கின்றன. என்றாலும் அவைகள் தேர்ந்த வாசகனை விட்டு விலகிச் செல்லாது என்ற நம்பிக்கையும் கூடவே எழுகிறது.
‘எவரும் அறியாத நாம்' எனும் இத்தொகுப்பின் பல கவிதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தவை.
- விழி.பா.இதயவேந்தன்
விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.
சென்னை சாகித்ய அகாடமியில் கதை, வாசிப்பு மற்றும் தமிழில் நவீன சிறுகதைகள் தொகுப்பில் கதை இடம் பெற்றுள்ளது. புது டெல்லி மற்றும் சாகித்ய அகாடமியின் இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரள ஜனநாயகம் மாத இதழில் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகளில் ஆறு இளம் முனைவர் (M. Phil.,) பட்டத்திற்க்கும், ஒருவர் முனைவர் (Ph.D.,) ஆய்வும் மேற்கொண்டு முடித்துள்ளனர். சென்னையிலுள்ள 'தலித் முரசு' பத்திரிக்கையில் இணை ஆசிரியராகவும் உள்ளார்.
இவரைப் பற்றி பழ மலாய் அவர்கள் எழுதி உள்ள குறிப்பு:
விழுப்புரத்தில், அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர், அவர் களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலி யாகிப் போகாமல், தங்கள் இருப்பை, மன சாட்சிக்குத் துரோகம் செய்யாமல், எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில் தான், இவர், நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கிறார், வீதி நாடகங்களில் நடிக்கிறார், செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார், கவிதை, கதை, நாவல் - என்று வரைகிறார்.
அனுபவ மண்ணில் வேர்பாய்ச்சி, அழகி யல் வானில் கிளை பரப்புவதாலேயே இதய வேந்தனுடைய எழுத்துக்களை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.
- பேராசிரியர் பழ மலாய்
Rent Now