Home / eBooks / Ganga
Ganga eBook Online

Ganga (கங்கா)

About Ganga :

இத் தொகுதியை, இரண்டாம் பதிப்பில், ஏறக்குறைய முப்பத்தி எட்டு வருட இடைவேளைக்குப் பிறகு காண்கையில், பெருமிதம் உள்பொங்கும் அதேசமயம், லேசான விசனமும் ஏடு படர்கிறது.

இதில் அடங்கியிருக்கும் கதைகள், தொகுதிக்கும் முன் ஐந்தாறு வருடங்களில் எழுதப்பட்டவை. ஆகவே இவைகள் ஒவ்வொன்றுக்கும் நாற்பது வயது தாண்டியதே. மனிதனின் இன்றைய சராசரி வயதில் பாதிக்கு மேலானவை, என் குழந்தைகள். ஆனால் நீங்கள் வளர்த்தவை: இவை குழந்தைகளில்லை. பெற்ற ஆர்வத்தில் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொள்ளலாம்.

அப்படித்தான் இப்போது பார்க்கிறேன்.

எழுத்தாளனுக்குத் தாயகம் இருக்கலாம், ஆனால் எழுத்துக்குக் கிடையாது, எழுத்து ஒரு எடுப்பார் கைப் பிள்ளை என்று வேறு இடத்தில் எழுதியிருக்கிறேன்.

எங்கெங்கோ, எப்படியெப்படியோ வளர்ந்தாலும் இவை நோஞ்சான்களல்ல. நன்றாக செழிப்பாகவே, தாமாவே வளர்ந்திருக்கின்றன. இல்லாவிடில் ‘கங்கா', ‘குருக்ஷேத்ரம்’, ‘கஸ்தூரி', ‘விடிவெள்ளி', 'தீக்குளி' என்று இவை இன்னும் பேசப்படுமா? ‘சொல்' எனும் முன்னுரை தன் வழியில் தனி பிரசித்தி அடைந்துவிட்டது - வேண்டாம், இனியுமா சுயபுராணம், இனியுமா இவைகளுக்கு என் அரவணைப்பு?

ஆனால் ஒன்று. ஒரு குடும்பத்தின் பெண்டு பிள்ளைகள் எங்கெங்கு சிதறியிருந்தாலும், ஒரு விசேஷ தினத்தன்று - தீபாவளி, வருடப்பிறப்பு, வீட்டுப் பெரியவனுக்கு ஏதோ விழாவென்று குடும்பம் ஒன்று கூடும்போது அந்த மறு சந்திப்பின் மகிழ்ச்சியே தனிதான். குழந்தைகள் வருகிறார்கள். அணைக்க இருகைகள் போதவில்லையே! ஏடுகளிடையே அமுக்கி வைத்திருந்த தாழம் பூவின் மணம் கமகமக்கிறது. குழ. கதிரேசன் இந்தச் சமயத்தை ஏற்படுத்தி அதன் மஹிமையைத் தட்டிக் கொண்டு போய் விட்டார். அதுவும் சரிதான். ஸாஹித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கும் இந்தச் சமயத்தில், இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கிறேன்.

எல்லாரும் பண்டிகையில் பங்குகொள்ள வாருங்கள் நீங்கள் வளர்த்த குழந்தைகள்.

-லா. ச. ராமாமிருதம்

About La. Sa. Ramamirtham :

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

Rent Now
Write A Review

Same Author Books