Home / eBooks / Ghost
Ghost eBook Online

Ghost (கோஸ்ட்)

About Ghost :

பயபக்தியான நாவல்!

'பேய் உண்டா இல்லையா?' என்ற கேள்வியை ஒருத்தரிடம் பகலில் கேட்டால் “அதெல்லாம் ஒண்ணுமில்லை, மனப்பிரமை “ என்பார், சாயந்தரம் இருட்டுகிற போது கேட்டால், 'நல்ல விஷயமா ஏதாவது பேசுவோமே’ என்பார். நடு ராத்திரியில் கேட்டால், 'ப்ளீஸ். எதுவும் பேசாதே, எனக்குப் பயமாக இருக்கு’ என்பார்.

இருட்டு - வெளிச்சம், சீதம் - உஷ்ணம், சுகம் - துக்கம், லாபம் - நஷ்டம், வெற்றி - தோல்வி, பிறப்பு - இறப்பு என்ற இயற்கையின் அருமைகளை யாரும் மறுக்க முடியாது. கோஸ்ட்கள், பிசாசுகள், ஆவிகள் மீடியம்கள், ஸ்பிரிட் ஆகிய விஷயங்களும் அப்படித்தான் என்கிறார்கள். இறப்புக்கு முன் என்னும் நிலை இருந்தால் இறப்புக்குப் பின் என்ற ஒரு நிலையும் இருக்கத்தான் இருக்கும்.

எத்தனையோ பேர் கோஸ்ட்களை, ஸ்பிரிட்டுகளைப் புகைப்படம் பிடித்திருக்கின்றனர். அவை தெளிவாக இல்லையென்றாலும் பதிவாகியுள்ளன. காமெரா ட்ரிக் என்று அந்தப் புகைப்படக் கலைஞர்களை அவமதிக்க இயலாது, ஏனெனில் அவர்கள் மலிவான தந்திரம் செய்கிற சாதாரணவர்கள் அல்ல. விஞ்ஞானிகள், ஒவ்வொரு அசைவுக்கும், காரண காரிய ஆதாரத்தோடே கருத்தை வெளியிடுகிற ஆராய்ச்சியாளர்கள்.

தமது இந்த நாவலில் (பித்ருலோகம் போல ஸ்பிரிட்டு லோகம்), 'மீடியம்', (‘ஆவித் தொடர்பு’) பற்றி திரு. ரா.கி.ர. அவர்கள் ஓர் இடத்தில் அருமையான, ஆணித்தரமான விளக்கம் அளித்துள்ளார்.

“மின்விசிறி வேகமாகச் சுழலும் போது அதனுடைய இறக்கைகள் நமக்குத் தனித்தனியே புலப்படுவதில்லை, ஒரே மொத்தையாகத்தான் தெரிகிறது. காரணம், நம் கண்ணின் சக்தியும் விசிறியின் வேகமும் ஒன்றாக இல்லை. அதாவது இரண்டும் ஒரே வேவ் லெங்க்த்தில் இல்லை. ஆகவே தனித்தனியே தெரியவில்லை.”

பெரும்பாலோருக்கு அப்படித்தான். ஆனால் வேறு சிலருக்கு, கண்ணின் சக்தி, மனோ சக்தி ஆகியவற்றால் விசிறியின் எத்தனை வேகத்தையும் சமாளித்து தனித்தனியே சிறகுகளைக் காண முடியும். சூட்சுமமான பல சக்திகள் இப்படித்தான். சராசரி மனிதராகிய நமக்குப் புலப்படாத சில தோற்றங்கள் வேறு சிலருக்குப் புலப்படும். கோஸ்ட் உண்டா இல்லையா என்பதை ஆராயும் நூலாக திரு. ரா.கி.ர, இந்த நாவலை எழுதவில்லை, ஆவிகளின் வழக்கறிஞராக அவர் வாதாடித் தம் நேரத்தையும் வாசகர் நேரத்தையும் வீணாக்கவில்லை, நிலவி வரும் ஆவியுலக நம்பிக்கையை இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளுக்குப் பின் புலமாக அமைத்து வெகு அற்புதமாகப் புனைந்துள்ளார்.

புதுமையான தொடர் கதையாக அவர் இதை எழுதிக் கொண்டிருந்த போது அவரோடு அடுத்த நாற்காலியில் உட்கார்த்து நான் எட்டி, எட்டிப் பார்த்து அவர் எழுத எழுதப் படிப்பேன்.

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு என்னை மறு படியும் பயந்தாங் கொள்ளியாக்குவதென்று நண்பரும் என் இலக்கிய குருமார்களின் முக்கியமானவருமான திரு. ரா.கி.ர. தீர்மானித்து கோஸ்ட் நாவலுக்கு முன்னுரை எழுதும்படி ஆணை இட்டு விட்டார்.

முப்பது வருடத்துக்கு முன் குமுதம் இதழில் தொடர் கதையாக வந்த போது படித்ததை மறுபடி படிக்கிறேன். எனது மடிந்த முடிகள் குத்திட்டுச் சிலிர்த்து நிற்கின்றன. வெறுமே காமாசோமா மிரட்டல் அல்ல. ரா.கி.ர.வின் பண்பட்ட எழுத்து பய உணர்ச்சியை நமது நரம்புகளில் இஞ்செக்ட் செய்யும் விதத்தில் கலை அழகுடன் கொப்புளிக்கிறது.

ஆவி செய்யும் ஆபரேஷன் பற்றிய கதைகளைப் படிக்கும் போது ரா.கி.ர. அவர்கள் எழுத்தாளரா, எம்.எஸ். பட்டம் பெற்ற சர்ஜனா என்ற பிரமை ஓரொரு வாசகருக்கும் ஏற்படும். ஒரு ஆபரேஷன் எப்படி நடைபெறுகிறது. அங்கே கூடியுள்ள டாக்டர்கள் என்ன பேசிக் கொள்வார்கள், செயல்பாடுகள் என்ன, எந்த அறுவைக்கு என்ன கருவி, அதைப் பயன்படுத்துவது எப்படி - இந்த விவரங்களெல்லாம் மண்டையோட்டு வித்தை காட்டும் பேய்க் கதை ஆசிரியர்களுக்கு வேண்டுமானால் அவசியமில்லாதிருக்கலாம்.

'மெனக்கெடுதல்' என்று ஒரு வார்த்தை உண்டு. எடுத்துக் கொண்ட விஷயத்தை முழு முனைப்புடன் வெளிப்படுத்து தலைத் தன் வெற்றி ரகசியமாகக் கொண்டுள்ள ரா.கி.ர.வின் 'கோஸ்ட்’ தமிழ் நாட்டில் மிகப் பரபரப்பும் சுவாரசியமும் ஏற்படுத்திய நாவல்.

தமது கற்பனையில் உதித்த சம்பவங்களுக்கு ஆதாரம் தேடி. அவர் அலைந்த லைப்ரரிகள் ஏராளம். அனுபவஸ்தர்களிடம் துருவித் துருவி விசாரித்ததற்கு அளவில்லை. பயம் கிளப்பும் அந்த கோஸ்ட் கதைகளின் அடி நாதத்தில் அந்தப் பயத்தைக்களையும் வழிகளையும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். மந்த்ராலய மகானின் சக்தி மனித குலத்துக்கு எப்படிக் கேடயமாக விளங்குகிறது, கந்த சஷ்டிக் கவசம் எவ்வாறு துணை செய்கிறது, ஆஞ்சநேயர் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதெல்லாம் பிரசாரமாக தரப்படாமல் பிரசாதமாகத் தரப்பட்டுள்ளன.

- ஜ.ரா. சுந்தரேசன்

About Ra. Ki. Rangarajan :

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Rent Now
Write A Review

Same Author Books