இந்துமதம் தொன்மையானது மட்டும் அல்ல; அதுவே உலகெங்கும் பரவியிருந்த அனாதியான மதம். அதன் தத்துவங்களும், விதிகளும், நடைமுறைகளும், மந்திரங்களும், வழிபடும் முறைகளும் - அறிவுபூர்வமாக, தர்க்கரீதியாக, விஞ்ஞானரீதியாக - விளக்கப்படக் கூடியவை. இன்றைய இளைய தலைமுறையினரிடம் இதை எடுத்துத் தெளிவாகச் சொன்னால், ஆர்வத்துடன் நமது மதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்றி, நன்மைகளைப் பெறத் தயாராக இருக்கிறார்கள். அதே போலப் பெரியவர்களும் இந்த விளக்கங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புனிதப் பயணம் மேற்கொண்டபோதும், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தபோதும் இதை நான் தெளிவாகவே புரிந்து கொண்டேன். ஆசிரியர் மணியனின் ஊக்குவிப்புடன் 'ஞானபூமி'யில் இதை ஓர் ஆராய்ச்சிப் பணியாகவே எடுத்துக் கொண்டு, தொண்டு செய்யும் நற்பேறு எனக்குக் கிடைத்தது. அநேகமாக எல்லா இந்து மத ஆசிரமங்களிலும் இன்று இளைஞர்களும், இளம் பெண்மணிகளும் ஈடுபட்டு, நற்பணிகளைச் செய்யும் யுவகேந்திரமோ, இயக்கமோ இருக்கிறது. அவர்கள் இந்த உயரிய தத்துவங்களின் பின்னணியை மக்களுக்கு எடுத்துக் கூறி தொண்டாற்ற விரும்புகிறார்கள். அதற்கு இத்தகைய தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்துமதத்தின் தத்துவங்களை அவரவர் நிலைக்கேற்பக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இப்படி விளக்கங்களைத் தருவதற்கு, ஆரம்பப்பள்ளி முதல், உயர் நிலைப்பள்ளி, கல்லூரி, உயர்படிப்புக் கல்லூரி, ஆராய்ச்சிக்குரிய பல்கலைக்கழகம் வரை, வெவ்வேறு நிலைகளிலும் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் கல்வித் தொண்டு ஆற்றுவதைப் போல, நமக்கு வழிகாட்டப் பெரியோர்கள் இருக்கிறார்கள். தவ முனிவர்களும், ஞானிகளும் பெற்றுத் தந்த இந்த அரிய ஒளிவிளக்கை, உலகெங்கும் சுடர்விடும்படி செய்ய, இந்தப் பெரியோர்கள் பிரசார வாயிலாகவும், புத்தகங்கள் மூலமாகவும் தொண்டாற்றி வருகிறார்கள்.
அந்தப் புனிதமான பணியை, வாசகர்களிடமிருந்து வரும் கேள்விகளுக்குப் பதில்களைத் தேடித் தருவதன் மூலம், எல்லோரும் பெற்று நலம் அடையச் செய்ய முடியும் என்று நம்பினேன். அந்த முயற்சியின் பலனே இது. இந்து மதமே இங்கு பதிலளிக்கிறது. அதில் எல்லாப் பெரியோர்களும், ஞானிகளும், பீடாதிபதிகளும், தத்துவப் பேராசிரியர்களும் இடம் பெறுகிறார்கள். இது ஒரு ஞானச் சுரங்கம். இதைச் சிறுகச் சிறுகத் தோண்டி எடுத்து வைக்கும் எளிய பணி இது.
இந்த நற்பணி எதிர்காலத்தில் இந்துமதம் தழைத்தோங்கவும், இளைய தலைமுறையினர் அதற்குரிய முறையில் ஈடுபடவும் செய்வதற்குத் தூண்டுகோலாக அமைகிறது. ஞான விளக்கு ஏற்கெனவே இருக்கிறது. அதன் ஒளியைத் தூண்டி விடும் சிறு முயற்சியே இது.
இதில் எனக்கு 'ஞானபூமி' வாயிலாக ஆதரவு தந்து, ஊக்குவித்த பெருமைக்கு உரியவர் 'ஞானபூமி' ஆசிரியர் திரு. மணியன். அவருடைய உதவியினால் நூற்றுக்கணக்கான ஆசிரமங்களுக்குச் செல்லவும், - அருட்செல்வர்களைத் தரிசித்து ஆசி பெறவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பினால் பெற்ற அறிவு இந்தப் பணிக்குப் பெரும் துணையாக அமைந்தது. அந்த வகையில் ஆசிரியர் மணியன் எனது நன்றிக்கு உரியவர்.
இந்துமதத்தின் நலனிலும், வளர்ச்சியிலும், வேர் ஊன்ற வைக்கும் முயற்சியிலும் ஈடுபடும் நல்லோர்கள் அனைவரும் - குடும்பத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆலய நிர்வாகிகள், அறநிலையத் துறையினர் - அனைவரும் இந்த அமுத மொழிகளை, படித்துப் பயன்பெறச் செய்து, உரமிட வேண்டும். இதுவே எனது பணிவான வேண்டுகோள்.
"எத்தனை எத்தனையோ மகான்கள் இந்த ஞானபூமியில் அவர்கள் அத்தனை பேருக்கும் எனது பணிவான வணக்கங்கள்".
- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
Rent Now