“இந்துத்துவம்” என்ற பெயர் ஒரு மனித குலத்தின் வாழ்விற்கே ஓர் அர்த்தம் தந்து, அவர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தூண்டக்கூடிய ஆற்றல் பெற்ற பெயர்களிலே ஒன்று. இந்தப் பெயரைக் குறித்து நிலவும் சிந்தனைகளும், நோக்கங்களும், கருத்துக்களும், மதிப்புகளும், அதனைச் சார்ந்துள்ள சமூகங்களும், நிறுவனங்களும் பலப்பல வகையாக உள்ளன. அத்துடன் அவை மிக்க பொருள் பொதிந்ததாகவும், சக்தி பொருந்தியதாகவும், எளிதில் அறிந்துகொள்ளவும் இயலாதபடி நுண்ணியதாகவும் இருக்கின்றன. அதனால் இந்துத்துவம் என்ற அந்தப் பெயரை எந்த விதத்தில் ஆராய்ந்து பார்த்தாலும், அது அளவிட்டுப் பார்க்க முடியாத ஓர் ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்துத்துவம் குறைந்த பட்சம் நான்காயிரம் ஆண்டுகளாக வாழ்ந்ததோடு மட்டும் அல்லாமல் வளர்ந்துகொண்டும் இருக்கிறது.
இந்துத்துவம் என்பது ஒரு வெறும் சொல் அல்ல; அது ஒரு சரித்திரம். அதே போன்று உள்ள இன்னுமொரு சொல்லான “இந்து” என்ற சொல்லுடன், இந்துத்துவத்தைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்து எனும் சொல் மக்களின் ஆன்மிக அல்லது சமயச் சரித்திரத்தைக் குறிப்பிடுகிறது என்றால், இந்துத்துவம் முழுக்க முழுக்க ஒரு சரித்திரமே ஆகும். இந்து என்ற சொல்லால் நாம் குறிப்பிடுவது இந்துத்துவத்தின் ஒரு சிறிய பகுதி, அல்லது அதிலிருந்து கிளைத்து எழுந்தது என்பதே சரியாகும்.
இளங்கலையில் இயற்பியல் (Physics) முதுகலையில் மின்னணு (Electronics) முனைவர் பட்டமோ பேச்சை அறியும் கணினி வழிகளில் (Speech Recognition) என்பவைதான் இந்நூலாசிரியர் S. ராமன் சென்ற கல்வி வழி. இவை நடுவில் தமிழ் எங்கே வந்தது என்று கேட்டால், தான் பிறந்தது 1944-ல் தமிழ் நாட்டில் சங்கம் வளர்த்த மதுரையில், தொடக்கத்தில் தமிழிலேயே பயின்றும், பின்பு ஆங்கிலத்தில் படிப்பு தொடர்ந்தாலும் இளங்கலைப் படிப்பு வரை தமிழ் பயின்றதும் காரணமாக இருக்கலாம் என்பார். மேலும் தமிழ் பயின்ற ஆசிரியர்களில் முதன்மையானவர் “கோனார் நோட்ஸ்” புகழ் திரு. ஐயம் பெருமாள் கோனார் என்றால் அது போதாதா என்றும் சொல்வார்.
பெங்களூர் (I.I.Sc.) இந்திய விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்திலும், பின்பு சென்னை (I.I.T.) இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திலும் ஆக நாற்பது வருடங்கள் பணி புரிந்து பேராசிரியராக 2006-ல் ஓய்வு பெற்றார். தற்சமயம் பல்கலைக் கழகங்கள் அல்லது கல்வித் தர நிர்ணயக் குழுக்களின் அழைப்புக்கு இணங்கி அவ்வப்போது பணியாற்றி வருகிறார்.
இவர் தனது இளம் வயதிலிருந்தே திருவண்ணாமலை தவச்சீலர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் போதனைகளில் மனம் சென்றவர். அன்னாரின் உரைகளைப் பற்றியும், அது தொடர்பானவைகளைப் பற்றியும் இவர் தமிழ்ஹிந்து இணைய தளத்தில் (www.tamilhindu.com) 2010-ம் வருடத்தில் இருந்து எழுதத் தொடங்கினார். அவை தவிர தினசரி செய்திப் பத்திரிகையில் வரும் சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் பெயர்ப்பதும் இவரது இன்றைய பணிகளில் ஒன்று.
இவர் எழுதிய வால்மீகி இராமாயணச் சுருக்கத்தின் மொழிபெயர்ப்பான “இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு”, மற்றும் “இரமணரின் கீதா சாரம்” நூல்களை ‘இந்துத்துவா பதிப்பக’மும் , சுவாமி விவேகானந்தர் வழி நடந்து ஒரு புதிய நகரத்தையே உருவாக்கிய, ஆஸ்திரேலியத் தமிழரான திரு. மஹாலிங்கம் சின்னத்தம்பி அவர்களின் வாழ்க்கை சரிதையான “இலக்கை எட்டும்வரை இடைவிடாது இயங்கு” என்ற மொழிபெயர்ப்பு நூலை “கண்ணதாசன் பதிப்பக”மும் வெளியிட்டிருக்கின்றன. இவரது இன்னுமொரு மொழிபெயர்ப்பு ஸ்ரீ ரமண மகரிஷி இணைய தளத்தில் “அத்வைத ஞான தீபம்” என்று ஒளி வீசுகிறது.
தமிழ்க் கட்டுரைகள் எழுதுவது தவிர, தனது வீட்டு மாடியின் திறந்த வெளியில் இயற்கை உரம் தயாரித்து, செடிகள் வளர்ப்பதும் இவரது இன்னுமொரு ஓய்வுகாலப் பொழுதுபோக்கு.
Rent Now