Home / eBooks / Idukki
Idukki eBook Online

Idukki (இடுக்கி)

About Idukki :

வழித்துணைத் தோழமை

சிறுகதை என்பது மொழியின் ஓவியம். புறக்காட்சிகளை மட்டுமல்ல. அகமன உணர்ச்சிகளையும் இணைத்து, குழைத்து வரைகிற ஓவியம். கவிதை எழுதித் தேறியவர்கள் சிறுகதை எழுதினால், நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

கவிப்பித்தனும் கவிதை எழுதித் தேறிய பிறகு சிறுகதைக்குள் மகா வலிமையோடு பிரவேசித்திருக்கிறார். மிகப் பெரிய வெற்றியாளராக கொடி பறக்க விடுகிறார். இவருடைய சிறுகதைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மையானதாக இருக்கிறது. எந்த ஒரு சிறுகதையும் வெறும் சிறுகதையாக இல்லை. ஏதோ ஓர் உலகத்தை திறந்து காட்டி விடுகிறது.

கவிப்பித்தனின் 'இடுக்கி’ என்ற இந்தத் தொகுப்பிலுள்ள பல சிறுகதைகள் என்னைப் பிரமிக்க வைக்கின்றன.

அழகு மொழியில் எழுதாமல், பழகு மொழியில் எழுதுகிற இந்தப் பாங்கே மிகச்சிறப்பு. வலிமைமிகு எளிய மொழியில் எழுதுகிறார். வாசிக்கத் துவங்குகிறவரின் விரல் பற்றி, புன்னகையோடு தோளில் கைபோட்டு... அழைத்துச் சென்று புது உலகத்துக்குள் விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். கவிப்பித்தனின் கதை உலகம் வாசகரின் புது உலகமாக இடம் மாறி விடச் செய்வதில்தான், பழகு மொழியின் அழகியல் வெற்றிகரமாக செயல்பட்டிருக்கிறது. ‘தேய்மானம்' என்ற முதல் சிறுகதை தனித்துவப் புதுமையோடு தம்மை திறக்கிறது.

ஒரு கவிஞரின் பார்வையில் தெறித்த ஒரு விஷயம் நினைவுகளாக நீண்டு… பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து விட்டு... மனப்பிறழ்வு நிலைக்காளாகி (வேலையின்மையால்) வாழ்வைத் தொலைத்த பிறிதொரு கவிஞரின் கனத்த சோகத்தைச் சொல்லுகிறது.

நெஞ்சுள்ள எவனும் நெக்குருகிப்போகிற மிகப் பெரிய வலியைத் தருகிறது. 'வாய்க்கரிசி'. அறுவடையந்திரம் கிராமத்தின் வாழ்வைப் பிடுங்கிக் கொண்டதை... வாய்க்கு ருசியான உணவைப் பிடுங்கிக் கொண்டதை.... மட்டுமா சொல்கிறது? வாசிக்கிறபோதே மனம் நடுங்கிப் போய்விட்டேன் ‘அய்யோ. அய்யோ’ என்று மனசு கிடந்து தவிக்கத் துவங்கி விட்டது. வாசித்து முடிக்கிறபோது. கிழிந்துபோன இதயத்தின் குருதி வழிகிறது.

‘சாமிப்பன்னி' வித்தியாசமான பண்பாட்டுச் சிறுகதை. கிராமத்து வியர்வை மக்களின் குல தெய்வ வழிபாட்டுப் பண்பாட்டை விவரிக்கிறது. ஒரு வட்டாரத்து மக்களின் வலிகளையும் மகிழ்ச்சியையும், கொண்டாட்ட குதூகலத்தையும், நம்பிக்கைகளையும் சொல்லிச் செல்கிறது. உழைப்பாளி மக்களின் வழிபாட்டுப் பண்பாடு என்கிற பேருலகை திறந்து காட்டுகிற சிறுகதை. சாமிப்பன்றியை வளர்க்கிற குப்பனின் மன உலக ஈரத்தைச் சொல்வது, தனிச்சுகம். 'மறுபாதி' ஒரு தனித்துவம். நகரத்தின் கண்களோடு கிராமத்தை உணர்த்துகிற பாணி. விவசாய உழைப்பில் ஈடுபடுகிற சிறிய விவசாயிகளுக்கிடையே நிலவுகிற சமூக உறவுகளையும், உழைப்புக்களையும் உறவுகளையும்... சித்தரிக்கிறபோதே... ஆண்-பெண் வித்தியாசம் கிராமத்தில் நிலவுகிறது என்கிற ஓருலகத்தை திறந்து காட்டுகிறது.

தொகுப்பின் தலைப்புக் கதையான 'இடுக்கி’ காளை மாடு காயடிக்கப்படுகிற சம்பவத்தை காட்சிப்படுத்துகிறது. அந்த சம்பவத்தை சுற்றி நிகழும் பல்வேறு மனித உலகம். பேரனின் மனக்கசிவுகள் எனும் ஒரு கோணம். ‘என்ன இது. என்ன இது' என்று புதிர்த் தன்மையோடு புலம்புகிற பேத்தியின் மன உலகம். கன்றுகளைப் பிடித்து, வளர்த்து, ஆளாக்கி, வேலைக்கு வசக்கி விற்றுப் பணம் பார்ப்தை தொழிலாகக் கொண்டவரின் வாழ்வுலகம். இரு மனைவிகள். உள்ளூரில் ஒரு கள்ளத்தொடர்பு, ஊர் ஊருக்கு வைப்பாட்டிகள். கட்டுப்பாடற்ற காமத்திணவோடு திரிகிற அவர்தான். காளையின் காமத்தை இடுக்கியால் கத்தரிக்கிறார். 'இதேபோல... நாளை குழந்தைகளுக்கும் காயடிக்கப்படுமோ?' என்ற வரியில் எதிர்காலம் குறித்த ஒரு விதமான அச்ச உலகம் ஓர் அதிர்வுடன் நமக்குள் விரிகிறது.

பெரும்பான்மையான சிறுகதைகள், கிராம வாழ்வியல் பண்பாட்டிலேயே வேரடித்திருக்கின்றன. கிராமத்து வாழ்வியலில் நிகழ்கிற வழிபாடுகள், உழைப்பு நடவடிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், மனித உறவுகளின் பன்முகத்தன்மைகள் சகலமும் இவரது கதைகளின் வழியாக நமக்குள் திறந்து கொள்கின்றன.

எனக்கு இவரது கதைகள் யாவும் பிடித்திருக்கின்றன. பிரமிப்பு ஏற்படுத்துகின்றன.

இதழ்களில் பிரசுரமாகாத கதைகள் என்று எண்ணுகிறேன். அதனாலேயே அதன் சுதந்திரத் தன்மையையும் சுயேச்சைத் தன்மையையும் உணர முடிகிறது. நீங்களும் படியுங்கள். உங்களுக்கும் எனது அனுபவமே நிகழும். கவிஞர் கதாசிரியராகிறபோது வெல்வார் என்கிற எனது மதிப்பீடு மீண்டும் ஒருமுறை இவர் மூலம் நிரூபணம் பெறுகிறது.

இட்டுக்கட்டுகிற செயற்கைத் தன்மையும். பொய்யான புனைவு முயற்சிகளும் துளிகூட இல்லை. யதார்த்தவாதச் சிறுகதை எழுத்தாளர்கள் படை நன்று பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நான் ஒருவன். எனது வழித்துணைத் தோழமையாக கவிப்பித்தனும் உடன் வருகிறார்.

என்றும் உங்கள்
மேலாண்மை பொன்னுச்சாமி

About Kavipithan :

வேலூர் மாவட்டத்தின் நீவா நதிக்கரை கிராமமான வசூர் என்கிற சிற்றூரில் பிறந்தவர், நீவா நதியின் இன்றைய பெயர் பொன்னையாறு. இது பாலாற்றின் துணை ஆறு. விலங்கியலில் இளம் அறிவியல் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மக்கள் புது முரசு என்கிற உள்ளூர் செய்தித் தாளை சுமார் பதினைந்து ஆண்டுகள் நடத்தி வந்தவர்.

தற்போது வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியராக வேலூர் மாவட்டத்தில் பணிபுரிகிறார். இது வரை இரண்டு நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

Rent Now
Write A Review

Same Author Books