“இந்தியா ஒரு புதிர். இந்தியா ஒரு தத்துவம். இந்தியா ஒரு முரண்பாடு”
காலங்காலமாக- கிரேக்க, பாரசீக, சீன யாத்ரிகர்களிலிருந்து இன்றைய மேற்கத்திய எழுத்தாளன் வரை தெரிவித்து வந்திருக்கும் கருத்து அது. சமகால இந்திய அறிவுஜீவிகளை அதன் பல எல்லைகளைத் தொடத் தூண்டும் கருத்து. அது அசாத்தியமான ஆசை, இந்தியாவின் பன்முகத்தன்மைக்குக் கரையோ எல்லையோ இல்லை. பல்லாயிரம் மொழிகள். பல்வேறு மரபுகள், பழக்க வழக்கங்கள், பல கோடி முரண்பட்ட கருத்துகள், பல கோடி வாதங்கள். விடாமல் கேள்விகள் எழுப்பும் நாடு. சந்தேகங்களை எழுப்பும் பாரம்பர்யம், ரிக்வேத காலத்திலிருந்து கடவுள் இருப்பைக் கேள்விக்குரிய வினாவாக்கியது அங்கேயே ஆரம்பித்துவிட்டது. கடவுள் என்று ஒருவர் உண்டா? யார் கண்டது? யாருக்கு உண்மையில் தெரியும்? உலகை உருவாக்கியது எது? யாருக்குத் தெரியும்? அது தானாகவே உருவாகியிருக்கலாம். உருவாகாமலும் இருக்கலாம். சொர்க்கத்திலிருந்து கீழே பார்ப்பவனுக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். இப்படிப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் வாதங்களும் கி. மு. இரண்டாயிரம் ஆண்டுகளிலிருந்து இந்த மண்ணில் தொடர்ந்து தர்க்கரீதியாகவும் எதிர்மறை வாதமாகவும் கேட்கப்பட்டு வருகின்றன. அதன் கூடவே மிக ஆச்சாரமான மதச் சடங்குகளும் மத நம்பிக்கைகளும் தெய்வ வழிபாடும் பக்தியும் நடைபோடுகின்றன.
கலாச்சார ரீதியாக இங்கு எல்லா கருத்துக்களுக்கும் இடம் இருந்திருக்கிறது. இந்து மதம் என்று கட்டம் போட்ட ஸ்தாபனமே இருக்க வில்லை. புத்த மதமும் சமணமும் எதையும் ஏற்காதவர்களும் நாத்திகர்களும் ஆத்திகர்களும் விகல்பமில்லாமல் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு புத்தமதம் முக்கிய அங்கம் வகித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்போது வந்த சீன யாத்ரிகர்கள் தாங்கள் கண்டதை புத்த ராஜ்ஜியம் என்று வர்ணிக்கிறார்கள். இந்து மதம், இந்து கலாச்சாரம் என்று ஒரே கருத்துரு கொண்டு இந்தியா பண்டைக் காலத்தில் இருக்கவில்லை. அதனாலேயே இந்தியா என்பது ஒரு ஐதீகம். இன்றும் ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் வீற்றிருக்கும். நாத்திகம் பேசும் திராவிட முன்னேற்றக் கழக விழா மேடையில் குன்றக்குடி அடிகளார் அமர்வார். யாரும் அதை முரணாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் ஒரு தூணான பத்திரிகைத் துறையின் தொழில் மட்டுமல்ல, கடமை, தர்மம். நமது ஐதீகங்களைக் குடைவது, பொய்பிம்பங்களை உடைத்தெறிவது. சிறுமை கண்டு பொங்குவது ஆகியவை நசிகேதனும் பாஞ்சாலியும் நமக்குத் தெரிவிக்கும் கலாச்சார அடையாளங்கள், அந்த அடையாளங்களை நான் தொடர்கிறேன். தினம் தினம் என்னனப் பிரமிக்கவைப்பது இது.
பன்முகம் கொண்ட நாம் ஒன்றாக இருப்பதே ஒரு ஐதீகம்.
- வாஸந்தி
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Rent Now