கலை இலக்கியத் தளத்தில் கவிதைக்கானப்பங்கு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கவிதையால் என்ன செய்து விட முயும் அல்லது என்ன சாதித்துவிட முடியும் எனப்பலரும் கேட்கக்கூடும்.
மொழிக்குள் கட்டமைக்கப்படும் கவிதைகள் சமூகத்தின் நிகழ்கால பதிவுகள் மட்டுமின்றி தொலைதூரப்பார்வையோடு இருப்பது அவசியமாகிறது. ஒரு சாதாரண நான்கு வரிகளை உரைநடையாக்கும்போது அது சிறுகதையாகவோ, நாவல் அல்லது நாடகத்தின் ஒரு பகுதியாகவோ ஆகிவிடக்கூடும். மாறாக கவிதையாகும்போது அதன் சுவையும் தாக்கமும் வித்தியாசமானதாகவே இருக்கிறது.
நிகழ்கால தமிழ்ச்சமூகத்தில் கவிதைக்கான தளம் எல்லையற்று விரிந்திருக்கிறது. கவிதை எழுத வருகிறவர்கள் எவ்வித தயக்கமுமின்றி எழுத புதுக்கவிதை உலகம் வாசல் திறந்திருக்கிறது. ஹைக்கூ கவிதைகள் உள்ளிட்ட கவிஞர்கள் பலரும் கொண்டிருக்கும் நம்பிக்கை தமிழ்க் கவிதைக்கு பலம் சேர்ப்பவையாக உள்ளன. என்றாலும் மரபின் கூறுகள் உள்வாங்கி படைக்கும் கவிதைகளில் அழுகுணர்ச்சியும் நிறைந்த பொருள் செறியும் வெளிப்படுவதை உணரலாம்.
“இனிவரும் காலம்” என்னும் இக்கவிதைகள் வரிசையாக கடந்த நான்கு ஆண்டுகளில் எழுதியவற்றின் தொகுப்பாக உள்ளது. இக்கவிதைகள் ஒவ்வொன்றின் சூழலும் அவைகள் எழுதியவற்றின் பின்னணியும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை. அகமும் புறம் சார்ந்தப் பிரச்சினைகளே இங்கு கவிதையாகி உள்ளன. கவிதைகள் காட்டும் பிரம்மாண்டமான உலகத்தில் இத்தொகுதி குறித்தான மதிப்பீடுகள் என்பது வாசிக்கும் உங்களால் நன்றாகவே அடையாளம் காணமுடியும். காரணம் எனக்கான நிலைப்பாடு, அவமானம், நம்பிக்கை, இலட்சியம், அரசியல் கோட்பாடுகள் அனைத்தும் இரத்தமும் சதையுமாக இவற்றில் பதிவாகியுள்ளது. சிறு கதைகள் பல எழுதிவந்த எனக்கு இது எனது நான்காவது கவிதைத் தொகுதி. இத்தொகுப்பு சிறப்புற வெளிவர பலரும் உதவியிருக்கிறார்கள். எனது கவிதையை நேசித்தும் வாசித்தும் வருகிற எனது மூத்த மகள் அ.வி அஜிதா பாரதி மற்றும் உங்களுக்கும் இதயவேந்தனின் இதயப்பூர்வமான நன்றிகள் என்றென்றும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
- விழி.பா. இதயவேந்தன்
விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.
சென்னை சாகித்ய அகாடமியில் கதை, வாசிப்பு மற்றும் தமிழில் நவீன சிறுகதைகள் தொகுப்பில் கதை இடம் பெற்றுள்ளது. புது டெல்லி மற்றும் சாகித்ய அகாடமியின் இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரள ஜனநாயகம் மாத இதழில் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகளில் ஆறு இளம் முனைவர் (M. Phil.,) பட்டத்திற்க்கும், ஒருவர் முனைவர் (Ph.D.,) ஆய்வும் மேற்கொண்டு முடித்துள்ளனர். சென்னையிலுள்ள 'தலித் முரசு' பத்திரிக்கையில் இணை ஆசிரியராகவும் உள்ளார்.
இவரைப் பற்றி பழ மலாய் அவர்கள் எழுதி உள்ள குறிப்பு:
விழுப்புரத்தில், அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர், அவர் களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலி யாகிப் போகாமல், தங்கள் இருப்பை, மன சாட்சிக்குத் துரோகம் செய்யாமல், எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில் தான், இவர், நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கிறார், வீதி நாடகங்களில் நடிக்கிறார், செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார், கவிதை, கதை, நாவல் - என்று வரைகிறார்.
அனுபவ மண்ணில் வேர்பாய்ச்சி, அழகி யல் வானில் கிளை பரப்புவதாலேயே இதய வேந்தனுடைய எழுத்துக்களை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.
- பேராசிரியர் பழ மலாய்
Rent Now