ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றான். அமைவது எல்லோருக்கும் இனிமையாக அமைந்து விடுகிறதா? என்றால் இல்லாமலும் இருக்கலாம்.
அமைந்த வாழ்க்கையில் இனிமை இல்லா விட்டாலும் ஒரு இனிமையான வாழ்க்கையை தனக்குத்தானே அமைத்துக் கொள்வது எப்படி? அது சாத்தியமா? என்று கேட்கலாம்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைச் சூழலும் வெவ்வேறு விதமாக விதி வசத்தால் அமைந்து விடுகிறது. விதி காட்டிய வழியில் மனித வாழ்க்கை பயணம் செய்கிறது.
இருப்பினும் புற வாழ்க்கையில் பல்வேறு துன்பங்கள் வந்தாலும் உள்ளம் அதே பாதையில் பயணிக்காமல் அனைத்தும் தன் ஊழ்வினையின் சாபம் என்று விதியின்படி என்ன நடக்குமோ அது நடக்குமோ அது நடக்கும். அது நடந்து விட்டு போகட்டும். அதை நம்மால் மாற்றவும் முடியாது.
ஆயினும் அறக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு எனக்கு எத்தனை துன்பம் வந்தாலும் அது ஒரு பாதையில் பயணம் செய்யட்டும். அந்த துன்பங்களுக்கு மேலே நான் மிதந்து கொண்டே என்னைப் பொறுத்தவரை மகிழ்ச்சியாக இருப்பேன். அவ்வாறு இருக்க முடியுமா? அதற்கு வழி இருக்கிறதா? என்று கேட்கலாம். அதற்காக ஒரு வழி அல்ல, நாற்பது வழிகள் இருக்கின்றது. அதுதான் இனியவை நாற்பது.
இந்த நூலை எழுதிய ஆசிரியருடைய பெயர் மதுரை தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார் என்று சொல்லப்படுகிறது. இதில் பூதன் என்பது அவருடைய தந்தையின் பெயர்.
அவருடைய தந்தை மதுரையில் தமிழ் ஆசிரியராக பணி செய்த காரணத்தால் அவர் மகன் பூதன் சேந்தனார் தனது தந்தை பெயரையும் சேர்த்து தன் பெயரை கூறி வருகிறார்.
இனியவை நாற்பதில் கடவுள் வாழ்த்துப் பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் புலவர் தன் பாட்டில் சிவபெருமானை முதலிலும், அடுத்ததாக திருமாலையும், மூன்றாவது நான்முகனை குறிப்பிட்டு வணங்குகிறார்.
இவர் சமய நடுநிலையுடையவர் என்று அவருடைய பாடல்களின் மூலம் தெரிகிறது. பிற கடவுள்கள் மீது துவேசம் இல்லாமல் தன் கருத்தை நிலைநாட்டுகிறார்.
மேலும், இவர் வேத சமயத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும¢ என்றும் சில கூறுகிறார்கள். ஆனால், இவரின் கடவுள் வாழ்த்தை படித்தும், இவரை சிலர் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள்.
பூதன் சேந்தனார் என்னும் இந்தப் புலவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய அர்த்தங்கள் நாற்பது பாடல்களில் இவர் சுவைபட கூறியிருப்பதால் இந்த நூலுக்கு இனியவை நாற்பது என்று பெயர் வந்தது.
இந்த நூலில் கடவுள் வாழ்த்து பாடல் நீங்கலாக உள்ள நாற்பது பாடல்களில் 8வது பாடல் மட்டுமே பஃறொடை வெண்பாவாகும். மற்ற பாடல்கள் எல்லாம் நான்கு அடிகளைக் கொண்ட இன்னிசை வெண்பாக்கள் ஆகும்.
மேலும், வாழ்க்கை இனிமையாக இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஒவ்வொரு அடிகளிலும் தெளிவான கருத்துக்களை அனைவருக்கும் பழக்கப்பட்ட பொருட்களை எடுத்து உவமையாக புலவர் நிலைநாட்டுகிறார்.
தன் வாழ்நாளிலும், வாழ்க்கையிலும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அனுபவங்களை மக்கள் பெற்றிருப்பார்கள். அவற்றில் மறக்க முடியாத அனுபவங்களும் இருக்கும். மறக்க வேண்டிய அனுபவங்களும் இருக்கும்.
ஆனால் இனிமேல் அனைவரும் ஒரு இனிய அனுபவம் பெற வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த இனிய அனுபவத்தை ஒருமுறை அல்ல, நாற்பது முறை பெறுவதற்கு இந்த நூலை படித்து புத்தம் புதிய இனிய அனுபவத்தை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
Rent Now