நான் முன்பு எழுதிய சிறுகதையின் அகலப்பார்வையே இது. எப்படி இரவல் கரு என்ற சிறுகதையை எழுதி முடித்தபோது என் மனதில் ஓர் அதிருப்தி நிலவியதோ அதே அதிருப்தி இப்பொழுதும் உண்டு. காரணம் இதற்கு மேலும் இதில் நிறைய விஷயங்களைச் சொல்லமுடியும். சொல்லவேண்டுமென்பதால் தான் பிரிதொரு சமயம் இதையே முன்னூறு பக்க நாவலாகவும் நான் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்றாலும் இந்தக் குறைந்த பக்கங்களில் இதை ஓரளவு நிறைவாகச் செய்திருக்கும் திருப்தியுடன் முடித்திருக்கிறேன்.
ஒரு படத்தின் வெற்றிக்கு முழு முதல் ஆதாரமானது கதை. ஒரு நல்ல கதையை வைத்துக்கொண்டுதான் அதாவது கதை என்கிற அஸ்திவாரத்தில்தான் திரைப் படம் என்கிற 'செலுலாய்ட்' மாளிகை கட்டப்படுகிறது. இந்த கூட்டு முயற்சியில் இதுவரை எழுத்தாளனுக்கு அரிய பங்கை அவன் இன்னும் சரியாகவே நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை என்றே தோன்றுகிறது. எழுத்தாளரை மதிக்கிற சில நல்ல இயக்குனர்களும் பட அதிபர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த மதிப்பு போதாது என்றே தோன்றுகிறது. எனக்கேற்பட்ட பல கசப்பான அனுபவங்கள் கூட இந்த நாவலில் என்னையும் மீறி இடம் பெற்றிருக்கக்கூடும். பல கதைகளை இப்படி பறிகொடுத்த நிலையில் மனம் நொந்துபோன சந்தர்ப்பமும் உண்டு. ஆண்டவன் கோர்ட்டில் அவர்கள் அடைந்த தண்டனைகளையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். 'கரு' வை அபகரிப்பவர்களை மாற்ற வேண்டுமென்பதுதான் என் நோக்கமே தவிர அவர்கள் சரிவு அல்ல. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதும் என் நோக்கமல்ல. சினிமா மீடியத்தின் அடிப்படை அம்சமாக திகழும் கதையையும், காதாசிரியரையும் உதாசீனப்படுத்த வேண்டாம் என்பதை இந்த நாவலில் சற்று வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயன்றிருக்கிறேன். என் போன்ற பல எழுத்தாளர்களின் மனக்குமுறல்கூட இப்படித்தானிருக்கிறது.
- அன்புடன், மகரிஷிகிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Rent Now