விடியாமல் போகும் இரவைப் பற்றி நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன். மரணம் என்பது அவனுக்கான உலகம் அழிவதைத் தவிர வேறில்லை. பிறந்ததிலிருந்து நாம் உடலுக்குத்தான் அதி முக்கியத்துவம் கொடுக்கிறோம். வாழ்வின் ரகசியங்கள் நமக்கு புரிபடுவதேயில்லை. அநேகம் பேர் பிறவி சுழற்சியிலிருந்து விடுபடுவதேயில்லை. ஆசையால் உந்தப்பட்டு அவர்கள் செய்த செயல்களே அவர்கள் கட்டுத்தளைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. உலகியல் ரீதியிலான வெற்றி வேண்டுமென்றே கடவுளை வேண்டுகிறார்கள். ஆன்ம விடுதலையை வேண்டி நிற்போர் இந்த உலகத்தில் ஒரு சதவீதத்தினர் கூட இல்லை. நம் பணிகளைத் தள்ளிப்போடாமல் விருப்பத்துடன் செய்து வருவோம். வார்த்தைகளால் அன்பு விதையை விதைப்போம். ஏனென்றால் அந்த விடியாத இரவு இன்றிரவாகவும் இருக்கலாம். நாம் கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்குத் தரும் வாய்ப்பு. அன்பை வெளிப்படுத்தி வாழ்ந்து பாருங்கள் இந்த உலகம் தான் சுவர்க்கம் என உணர்ந்து கொள்வீர்கள்.
ப்ரியமுடன், ப.மதியழகன்
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது.
முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது. நான்காவது கவிதைகளும், கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பாக துயர்மிகு வரிகள் எனும் தலைப்பில் 2017ல் வெளிவந்தது. இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது.
தற்போது மன்னார்குடியில் தனியார் கணினி பயிற்சி மையத்தில் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.
Rent Now